வெளிநாட்டு கடன் பிரச்சனையால் நாடுகள் பாதிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
உணவு மற்றும், எரிபொருள்களின் விலையேற்றத்தால் பொதுநலத்திற்கு ஒதுக்கப்படும் அரசுகளின் நிதி அதிகரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவரும்வேளை வெளிநாட்டு கடன் பிரச்சனையால், 2019ம் ஆண்டைவிட 2023ம் ஆண்டில் குறைவாகச் செலவுகள் செய்யவேண்டிய நிலை நாடுகளுக்கு ,உருவாகியுள்ளது என்று ஏழ்மை ஒழிப்பு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
வருவாய் குறைந்த நாடுகளின் வெளிநாட்டு கடன் சுமையால், 2019க்கும், 2023ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்நாடுகள் பொதுநலனுக்குச் செலவழிக்கவேண்டிய தொகை 3 விழுக்காடு குறைந்துள்ளது என்று, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பு இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வெளிநாட்டுக்கடன் நீதி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இவ்வமைப்பு, அடிப்படை நலவசதிகள் மற்றும், உள்கட்டமைப்புகளைச் சீரமைக்க, பொதுநலத்திற்குச் செலவிடவேண்டிய தொகை அதிகரிக்கப்படவேண்டியுள்ளது என்று கூறியுள்ளது.
அணு ஆயுதங்கள்
இதற்கிடையே, இரஷ்யா உக்ரைனை ஆக்ரமிக்கத் தொடங்கியதற்குமுன், 2021ம் ஆண்டில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒன்பது நாடுகள், அணு ஆயுதங்களுக்காக, 824 கோடி டாலரைச் செலவழித்துள்ளன என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இது 2020ம் ஆண்டைவிட அதிகம் என்று கூறியுள்ள அவ்வறிக்கை, 2021ம் ஆண்டில் புதிய அணு ஆயுதங்கள் தொடர்பாக, 302 கோடி டாலர் பெறுமான ஒப்பந்தங்களை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன எனவும் கூறியுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு 1,57,000 டாலர் என இவ்வாயுதங்களுக்காக அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒன்பது நாடுகள் செலவழித்துள்ளன. (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்