தேடுதல்

எத்தியோப்பியாவில் புலம்பெயர்ந்தோர் எத்தியோப்பியாவில் புலம்பெயர்ந்தோர் 

உலக அளவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முதன்முறையாக 10 கோடி

உலக அளவில் கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள பத்து கோடி மக்கள், உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காடாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் போர் உட்பட உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெற்றுவரும் போர்கள்,  வன்முறை, சித்ரவதைகள், மற்றும், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால், உலக அளவில் புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை, முதன்முறையாக பத்துக் கோடிக்கும் அதிகமாகியுள்ளது என்று, UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம் மே 22, இஞ்ஞாயிறன்று அறிவித்துள்ளது.  

அழிவை உருவாக்கும் போர்கள் தடைசெய்யப்படவும், அவற்றுக்குத் தீர்வு காணப்படவும், சித்ரவதை நடவடிக்கைகள் நிறுத்தப்படவும், அப்பாவி மக்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறுவதற்கு காரணமானவைகள் களையப்படவும், விழிப்புடன் பணியாற்றுவதற்கு இவ்வெண்ணிக்கை விண்ணப்பிக்கிறது என்று, UNHCR நிறுவனத்தின் உயர் இயக்குனர் Filippo Grandi அவர்கள் கூறியுள்ளார்.

சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2021ம் ஆண்டின் இறுதியில் 9 கோடியாக இருந்தது என்றும், எத்தியோப்பியா, புர்கினோ ஃபாசோ, மியான்மார், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ சனநாயக குடியரசு உட்பட பல நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள் அல்லது போர்கள், புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளன என்றும் UNHCR நிறுவனம் அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டில் உக்ரைனிலிருந்து 80 இலட்சம் மக்கள் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர், ஏறத்தாழ 60 இலட்சம் மக்கள், நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

உலக அளவில் கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள பத்து கோடி மக்கள், உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காடாகும். இவ்வெண்ணிக்கை, உலகில் மக்கள் தொகை மிக அதிகமாகவுள்ள 14வது நாட்டு மக்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும்.

அதேநேரம், வெள்ளம், புயல்கள், போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாகவும், 2021ம் ஆண்டில், குறிப்பாக ஆசியா-பசிபிக் பகுதிகளிலிருந்து, ஏறத்தாழ 2 கோடியே 37 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர், (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2022, 19:45