சிங்காநல்லூர் ஏரி சிங்காநல்லூர் ஏரி 

இனியது இயற்கை : சிங்காநல்லூர் ஏரி

200 வகையான மூலிகைச் செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

சிங்காநல்லூர் குளம் என்றழைக்கப்படும் சிங்காநல்லூர் ஏரி தமிழகத்தின் கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். ஏறக்குறைய 288 ஏக்கர் பரப்பளவில் சோழர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளம் கோவையின் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நீர்க்காக்கை, நாமக்கோழி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் கூழைக்கடாப் பறவைகளும் வருகின்றன. 110க்கும் அதிகமான பறவையினங்கள் இங்கு காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இங்கு 2017ம் ஆண்டுவரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வில் இந்த குளம் அமைந்துள்ளப் பகுதியில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 720 வகையான பல்லுயிர்கள் நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக 200 வகையான மூலிகைச் செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாகத் திகழும் சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆறு இதன் நீராதாரமாக விளங்குகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளத்தை ஒட்டிச் செல்கிறது. மேலும், போத்தனூர்-இருகூர் இருப்புப் பாதை குளத்தின் நடுவில் செல்கிறது. இக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் நிறைந்திருக்கும் நாட்களில் மீன் பிடித்தலும் நடைபெறும். 2005ம் ஆண்டளவில் இங்கு படகு இல்லம் ஒன்றும் செயல்பட்டு வந்தது.

(நன்றி - விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2022, 13:36