புகையிலை தொழிற்சாலை, சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்கு காரணம்
மேரி தெரேசா: வத்திக்கான்
சுற்றுச்சூழலும், மனிதரின் நலவாழ்வும் சேதமடைந்து வருவதற்கு, புகையிலை தொழிற்சாலை முக்கிய காரணம் என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் இச்செவ்வாயன்று குறை கூறியுள்ளது.
மே 31 இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட புகையிலை விழிப்புணர்வு உலக நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள WHO நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதற்கு, புகையிலை தொழிற்சாலையே காரணம் என்று கூறியுள்ளது.
இது மட்டுமன்றி, புகையிலை உற்பத்தியில், 6 கோடி மரங்கள், 2 இலட்சம் ஹெக்டேர் நிலம், மற்றும், 2,200 கோடி டன்கள் தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றன என்றும், அச்சமயங்களில் 8 கோடியே 40 இலட்சம் டன்கள் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றப்படுகின்றது என்றும், அந்நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகையிலை உற்பத்தியால், வருவாய் குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் சுற்றுச்சூழலே அதிகம் சேதமடைகின்றன என்றுரைக்கும் அந்நிறுவனம், இந்நாடுகளின் நிலங்களும், தண்ணீரும் உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படாமல், புகையிலைத் தாவரங்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று கவலை தெரிவித்துள்ளது.
“புகையிலை: நம் பூமிக்கோளத்தை நஞ்சாக்குகிறது” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள WHO நிறுவனம், புகையிலை உற்பத்திகள், 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட நச்சு வேதிப்பொருள்களை வெளியேற்றி சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன என்று கூறியுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முயற்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படவேண்டும், அல்லது, நம் பூமிக்கோளம், மனித உயிர்கள் பலியாக்கப்படும் பகுதியாக மாறும் என்று, ஐ.நா. எச்சரித்துள்ளது.
1987ம் ஆண்டிலிருந்து புகையிலை விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்