வாரம் ஓர் அலசல்: செர்னோபில் அணு உலை விபத்து நினைவு நாள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்நாள்களில் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பது, இரஷ்யா, உக்ரைன் மீது நடத்திவரும் கடுமையான போர். இப்போர், உலக அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், கடந்த இரு மாதங்களாக, இரஷ்யா, உக்ரைனில் மிருகத்தனமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மற்றவரின் வேதனைகளை கடுகளவுகூட புரிந்துகொள்ளாத அந்நாடு, நாளுக்கு நாள் வன்முறையின் கொடூரங்களைக் கூடுதலாக்கி வருகிறது. ஏப்ரல் 24, இஞ்ஞாயிறு, இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள் உட்பட, அந்நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் முக்கியமான கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்தனர். அக்கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த இப்புனித வாரத்தில், குறிப்பாக, உயிர்ப்புப் பெருவிழா நாளிலாவது போர் நிறுத்தத்தைக் கடைப்பிடியுங்கள் என்று ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விண்ணப்பித்தனர். ஆனால், உக்ரைனின் மாரியுப்போல் துறைமுக நகரத்தை சுற்றிவளைத்துள்ள இரஷ்யப் படைகள், இந்த முக்கியமான ஆன்மீக நாளில்கூட, அந்நகர் மீதான குண்டுவீச்சுக்களை நிறுத்தவில்லை. அதனால் அந்நகரிலிருந்து மக்களை வெளியேற்றவோ, அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவோ முடியவில்லை. இப்போரினால், குறைந்தது ஒரு கோடியே 57 இலட்சம் உக்ரைன் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன, ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உக்ரைனைவிட்டு மற்ற நாடுகளுக்குச் சென்றுள்ளனர் மற்றும், 71 இலட்சம் மக்கள் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது.
உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு
நாளை என்பது வெகு தாமதம், மாரியுப்போல் நகரில் உடனடியாக தாக்குதலை நிறுத்துங்கள் என்று, இரஷ்யாவுக்கு விண்ணப்பம் விடுப்பதாக, ஐ.நா. உதவி தலைமைப் பொதுச் செயலர் Amin Awad அவர்கள், இஞ்ஞாயிறன்று, உக்ரைன் நாட்டின் விவ் நகரில் செய்தியாளர்களிடம் கூறினார். உக்ரைனில் 136க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மற்றும், ஒரு நாளைக்கு 22 பள்ளிகள் என்ற முறையில், அவை குண்டுவீச்சுக்களால் சேதமடைந்து வருகின்றன. ஏப்ரல் 24, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின்னர், உக்ரைனில் போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்று மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார். மதியிழந்து நடத்தப்பட்டுவரும் இந்தப் போரில் காயமடைந்தவர்களுக்கு இயேசு அமைதியை அருள்வாராக. இஞ்ஞாயிறோடு இரண்டு மாதங்களை எட்டியுள்ள இந்தப் போரில் நாளுக்குநாள் வன்முறை அதிகரித்து வருகிறது, மரணத்தை வருவிக்கும் ஆயுதங்களின் சப்தங்கள் அடங்கி, உயிர்ப்பை அறிவிக்கும் ஆலயமணிகளின் சப்தங்களை நாம் கேட்போம். அரசியல் தலைவர்கள், அமைதிக்காக ஏங்கும் மக்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பார்களாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அமைதி இயலக்கூடியதே, அமைதிக்காக கடவுளை வேண்டுங்கள் என்றும் திருப்பயணிகளிடம் திருத்தந்தை கூறினார்.
டைட்டானிக் கப்பல் விபத்து
அதிகாரம், பேராசை, தற்பெருமை, ஆணவம், செருக்கு, இனவெறி போன்றவற்றால் மக்களை மாக்களாக நடத்தியவர்களின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்பதை உலக வரலாற்றில் வாசிக்கிறோம். 110 ஆண்டுகளுக்கு முன்பு 1912ம் ஆண்டு ஏப்ரலில், டைட்டானிக் சொகுசு கப்பலில், பெரும்பாலான பயணிகள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த அந்த ஓர் இருண்ட இரவில், அக்கப்பல் பனிப்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க்கிற்கு, மணிக்கு 41 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், ஏப்ரல் 14ம் தேதி இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. மோதிய 2 மணி 40 நிமிடங்களில் அது முழுவதும் நீருக்குள் சமாதியானது. இந்த விபத்தில் ஏறத்தாழ 1,500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படுகிறது.
செர்னோபில் அணு உலை விபத்து உலக நினைவு நாள்
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த செர்னோபில் அணு உலை விபத்தையும் எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. உலகில் இடம்பெற்றுள்ள இரண்டு பெரும் அணு உலை விபத்துக்களில் ஒன்று செர்னோபில், மற்றொன்று, 2011ம் ஆண்டில் இடம்பெற்ற ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை விபத்தாகும். செர்னோபில் அணு நிலையத்தில் இருந்த நான்கு அணு உலைகளில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. அதனால் நேர்ந்த இந்த விபத்து, தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக, உலையில் உள்ள பிளாக்குகள் தீப்பற்றி வெடித்தன. அதனால் ஏறத்தாழ இருபது வகையான கதிரியக்க நச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் பரவின. இவை, இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது போடப்பட்ட அணுகுண்டு போன்று, பத்து அணுகுண்டுகளுக்குச் சமமானதாக கருதப்படுகின்றன.
செர்னோபில் அணு உலை, உக்ரைன் நாட்டில், பிரிபியாட் (Pripyat) என்னும் நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது. இந்த அணு உலையில், 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மிகப்பெரும் விபத்து ஏற்பட்ட அச்சமயத்தில், உக்ரைன் நாடு, முன்னாள் சோவியத் யூனியனோடு சேர்ந்திருந்தது. 1922ம் ஆண்டில் சோவியத் யூனியன் உருவானபோது இரஷ்யாவும், உக்ரைனும் உறுப்பு நாடுகளாக இணைந்தன. பின்னர் 1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்து 15 நாடுகளாகப் பிரிந்தபோது, தனித்த இறையாண்மையுள்ள நாடாக உக்ரைன் உருவானது. 2019ம் ஆண்டில் உக்ரைனின் அரசுத்தலைவராகப் பதவியேற்ற ஜெலன்ஸ்கி அவர்கள், இரஷ்ய எதிர்ப்பு மனநிலை கொண்டவர், மற்றும், இவர் மேற்குலக நாடுகளுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். 2021ம் ஆண்டில் உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர தீவிரமும் காட்டத்தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரஷ்யா, அந்த எதிர்ப்பை கடந்த பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து போராக வெளிப்படுத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான செர்னோபில், மெலிடோபோல் ஆகிய நகரங்களைக் கைப்பற்றி, இப்போது உக்ரைனின் கிழக்கு மற்றும், தென்கிழக்குப் பகுதிகளை ஆக்ரமித்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது, இரஷ்யா.
ஏப்ரல் 26, இச்செவ்வாயன்று செர்னோபில் அணு உலை விபத்து உலக நினைவு நாள். 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று இந்த அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் ஏராளமானோர் இறந்தனர். அதன் கதிர்வீச்சுக்களின் வீரியம், சோவியத் யூனியன், மேற்கு ஐரோப்பா எனப் பரவி, ஒன்பது நாள்களுக்கு, அதாவது மே மாதம் 4ம் தேதி வரை நிலைத்திருந்தது. இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், தோல் சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய், இரஷ்யா மற்றும், உக்ரைன் சிறாரில் தைராய்டு புற்றுநோய் போன்ற நோய்களும் உருவாகின. இதன் காரணமாக காற்று, நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசுபடிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தன. செர்னோபில் அணு உலை விபத்து, உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது.
உலகில் அணுக் கசிவினாலும், அணு ஆயுதங்களாலும் ஏற்படும் தொடர் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வை உலகினருக்கு உணர்த்தும் முறையில், செர்னோபில் அணு உலை விபத்து நடந்ததன் முப்பதாம் ஆண்டு நிறைவு நினைவுகூரப்பட்ட 2016ம் ஆண்டில் ஐ.நா. நிறுவனம், செர்னோபில் அணு உலை விபத்து உலக நினைவு நாளை உருவாக்கியது. தற்போது, இரஷ்யா உக்ரைனை அறிவற்று தாக்கிவரும் சூழலில் செர்னோபில் அணுமின் உலைக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்ற கவலையும் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. செர்னோபில் அணு உலை மீண்டும் வெடித்தால் ஐரோப்பாவின் நிலைமை எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. உலகில் அணு ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்ற பலரின் குரல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிசாய்ப்பார்களா?
ஒருமுறை அறிவியலாளர் சர் சி.வி. இராமன் அவர்கள், தன் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதற்காக நேர்காணல் ஒன்றை நடத்தினார். அது நடந்த அன்று மாலை இளைஞன் ஒருவன், அந்நிறுவனத்தின் வராந்தாவில் நடந்துகொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்ட சர் சி.வி. இராமன் அவர்கள், இளைஞனே, நேர்காணல் முடிந்துவிட்டது, நீ தெரிவுசெய்யப்படவில்லை, எனவே நீ வீட்டிற்குப் போகலாம் என்றார். அதற்கு அந்த இளைஞன், ஐயா, நான் அதற்காக இங்கு இருக்கவில்லை, உங்களது நிறுவனம் எனது பயணத்திற்கு ஐந்து ரூபாய் அதிகமாகக் கொடுத்துவிட்டது, அதைத் திருப்பித்தரவே காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்துகொண்டிருந்தான். அவனைப் பின்தொடர்ந்து சென்ற சர் சி வி இராமன் அவர்கள், இளைஞனே, எனக்குத் தேவையானது உன்னைப் போன்ற நேர்மையாளர்களே. நீ எனது நிறுவனத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டாய் என்றார். அந்த இளைஞனும் பின்னாளில் அதே நிறுவனத்தில் பெரிய ஓர் அதிகாரியானார். ஆம். நம் வாழ்க்கைக்குத் தேவையானது மற்றவர் மீது கருணை, இரக்கம், அன்பு. நேர்மை. தற்போது உக்ரைனைத் தொடர்ந்து தாக்கிவரும் இரஷ்யா போன்ற நாடுகளின் மனநிலை அல்ல. நல்ல பண்புகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாலேயே இன்று உலகில் பல இடங்களில் போர் இடம்பெறுகின்றது எந்தவொரு மெழுகுதிரியும் மற்றொரு மெழுகுதிரியை எரியச்செய்யும்போது, அது தன் ஒளியை ஒருபோதும் இழப்பதில்லை. எனவே, மற்றவரோடு பகிர்ந்துகொள்வதை, பிறருக்கு உதவுவதை, பிறர் மீது அக்கறை காட்டுவதை ஒருபோதும் நிறுத்தாமல் இருப்போம். உலகில் கருணை உள்ளங்கள் பெருகட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்