உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு ஐ .நா. தலைவர் அழைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உயிர்ப்பு ஞாயிறு வரை செல்லும் தற்போதைய ஆர்த்தடாக்ஸ் புனித வாரத்தின்போது உக்ரைனில் 4 நாள் மனிதாபிமான போர் இடைநிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏப்ரல் 19, இச்செவ்வாயன்று, இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres, போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமான உதவிகள் தொடர்ச்சியாக சென்றடைய ஏதுவாக, உக்ரைன் மீதான இரஷ்ய தாக்குதலை இடைநிறுத்துமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்ப்புப் பெருவிழா என்பது புதுப்பித்தல், உயிர்த்தெழுதல் மற்றும் நம்பிக்கைக்கான ஒரு காலமாகும் என்றும், துன்பம், தியாகம், இறப்பு மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றின் பொருளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார் Antonio Guterres.
உயிர்களைக் காப்பாற்றுங்கள். இரத்தம் சிந்துவதையும் அழிவையும் நிறுத்துங்கள். உரையாடல் மற்றும் அமைதிக்கான வழியைத் திறந்து, உயிர்ப்புப் பெருவிழாவின் பொருள் மற்றும் நம்பிக்கை தரும் செய்தியை மனதில் கொள்ளுங்கள் என்றும் விண்ணப்பித்துள்ளார் Antonio Guterres. இதே கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தனது குருத்து ஞாயிறு மறையுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
துப்பாக்கிகளை அமைதிப்படுத்தவும், உடனடி ஆபத்தில் இருக்கும் பலருக்கு பாதுகாப்புக்கான பாதையை உருவாக்கவும் இரஷ்யா மற்றும் உக்ரேனிய மக்களை தான் அழைப்பதாகவும் கூறியுள்ள Antonio Guterres, உக்ரைனில் 1 கோடியே 20 இலட்சத்தற்கும் அதிகமான மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பொருட்களை இழந்த நிலையில் உள்ளதாகவும் விவரித்துள்ளார்.
ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு, இந்த ஆண்டு புனித வாரம் அதாவது குருத்து ஞாயிறு, ஏப்ரல் 17ல் தொடங்கியது. வரும் ஏப்ரல் 24 அன்று ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றனர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்