இனியது இயற்கை: 16ம் நூற்றாண்டு இராமநாயக்கன் ஏரி
மேரி தெரேசா: வத்திக்கான்
தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றுள் ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் இராமநாயக்கன் ஏரியாகும். 16வது நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு மீது முஸ்லிம்கள் படையெடுத்து வந்தபோது, அப்பேரரசின்கீழ், பாகலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சிபுரிந்து வந்த சிற்றரசரான இராமாநாயக், தனது பெரும் படையுடன் விஜய நகரம் சென்று போரிட்டார். அப்போரில் விஜயநகரப் பேரரசு வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய சிற்றரசர் இராமாநாயக் பாராட்டப்பட்டு வெகுமதிகளுடன் பாகலூர் திரும்பினார். அதன் நினைவாக அவரது மகன் சந்திரசேகர நாயக், பாகலூர் சிற்றரசுக்கு உட்பட்ட ஓசூர் நகரின் மையத்தில், 16-வது நூற்றாண்டில் 156 ஏக்கர் பரப்பளவில் ஓர் ஏரியை உருவாக்கி, தன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்டினார். இராமநாயக்கன் ஏரியின் ஒரு பகுதியில், மதகு திறப்பான் அமைத்து அதைச் சுற்றிலும் அழகிய சிற்பக்கலையுடன்கூடிய நான்கு கல்தூண்களையும் அவர் நிறுவினார். இந்த ஏரியின் வடக்குப் பகுதியில், அகழியுடன்கூடிய ஒசூர் கோட்டை இருந்தது. இக்கோட்டை அகழிக்கு, இந்த ஏரியில் இருந்துதான் தண்ணீர் சென்றது. 1980களின் துவக்கம்வரை இந்த ஏரி நீரை நம்பி வேளாண்மை நடைபெற்று வந்தது. ஆனால், நகரமயமாக்கலின் காரணமாக ஏரியில் இருந்து பாசன வசதிபெற்ற நிலப் பகுதிகள் குடியிருப்புகளாகவும், வணிக வளாகமாகவும் மாறியுள்ளதால், உபரி நீர்க் கால்வாய்கள் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏரியில் இருந்து வேளாண்மைக்கு நீர் செல்லும் குமிழித் தூம்பு மதகுமேல் அழகிய கல்மண்டபம் உள்ளது. இந்த ஏரிக்கு மேலே பூனப்பள்ளி ஏரி, ஜீகூர் ஏரி, தாசரப்பள்ளி ஏரி, கல்லேரி, கர்னூல் ஏரி, அந்திவாடி ஏரி ஆகியவை உள்ளன. இந்த ஏரிகள் நிரம்பும்பொழுது உபரி நீர், ஒவ்வொரு ஏரிக்கும் சென்று ராமநாயக்கன் ஏரியை வந்தடையும் வகையில் உபரிநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இராமநாயக்கன் ஏரியையொட்டி 1987ம் ஆண்டு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. 2015ம் ஆண்டு இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, நடைபாதைகள் அமைத்து, படகுசவாரிவிட மாவட்ட நிர்வாகம் இரண்டு கோடியில் திட்டம் வகுத்தது. ஏரியின் மேற்குப் பகுதியில் பசுமைப் பூங்கா, நடைபாதை போன்றவற்றை இருபத்தெட்டு இலட்சம் செலவில் அமைத்து, அழகுபடுத்தி, 2015ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கப்பட்டது. மேலும், சிறுவர் பூங்காவை ஒட்டியவாறு 49 இலட்சம் செலவில் தியான மண்டபம் கட்டப்பட்டு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டது. இந்த ஏரி, சாக்கடை குட்டையாக, கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது என 2016ம் ஆண்டில், தினமணி, தினச்சுடர் தினத்தாள்கள் குறைகூறியிருந்தன. (நன்றி: இணையதளங்கள்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்