தேடுதல்

 கவுசிகா ஆற்றில் மண் கடத்தல் கவுசிகா ஆற்றில் மண் கடத்தல் 

இனியது இயற்கை: கோவை மாவட்டத்தில் பாய்கின்ற கவுசிகா ஆறு

கவுசிகா ஆற்றங்கரையில் கிடைத்த தொல்லியல் மட்பாண்டங்களை ஆய்வு மேற்கொண்ட, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அவர்கள், அவை ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவித்து உள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆழியாறு, சிறுவாணி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடுகின்றன. கல்லார், கவுசிகா, சங்கனூர் பள்ளம் போன்ற சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. உலகில் சுவையான குடிநீர் தரும் ஆறுகளில் இரண்டாவது எனக் கருதப்படும், சிறுவாணி ஆறு இந்த மாவட்டத்தில்தான் ஓடுகிறது. கவுசிகா ஆறு (Kowsika), கோவை மாவட்டத்தில் குருடி மலை, பொன்னூத்து மலைகளில், பெரியநாயக்கன் பாளையத்தில் ஆரம்பிக்கிறது. கோவை குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதிகளைச் சார்ந்த தாள மடல் பள்ளம், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் போன்ற ஓடைகளை தன்னகத்தே இணைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக வாகராயம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று, திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் நொய்யலாற்றில் கலக்கிறது. 52 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கவுசிகா ஆறு, பவானி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாய்கிறது. கவுசிகா ஆற்றங்கரையில் கிடைத்த தொல்லியல் மட்பாண்டங்களை ஆய்வு மேற்கொண்ட, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அவர்கள், அவை ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவித்து உள்ளார். கவுசிகா ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி, குறைவான மழைப் பொழிவாலும், மலைகளில் உண்டாக்கப்பட்ட தடுப்பணைகளாலும், அதன் நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அத்திப்பாளையம் பகுதியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு, கவுசிகா ஆற்றில் மண் கடத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தற்போது அந்த ஆற்றின் நீர் வழிப்பாதையில் 20 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு, பெரும் பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்நிலை நீடித்து ஆழம் அதிகரிக்கப்பட்டால், வட கிழக்குப் பருவமழையின்போது வழிந்தோடும் மழை நீரானது, இந்த பள்ளத்திலேயே தேங்கி விடும். இதனால் நீர்வழிப்பாதை தடுக்கப்பட்டு நீராதாரங்கள் வறண்டுவிடும். இன்று கௌசிகா ஆறு, ஒரு சிறிய ஆறாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2022, 14:04