இனியது இயற்கை: 159 ஆண்டுகள் பழமையான கொடைக்கானல் ஏரி
பேரிஜம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கலிவேளி ஏரி அல்லது கலிவேளி காயல், கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி, பெருமாள் ஏரி, புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி, சோழவரம் ஏரி, சிங்காநல்லூர் ஏரி, வீராணம் ஏரி, 'மதுராந்தகம் ஏரி' என தமிழகத்தில் பதினோரு ஏரிகள் உள்ளன என்று, விக்கிப்பீடியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஏரி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஏரியாகும். 1845ம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிய சர் ஹென்றி லெவிங்கெ என்பவர், மதுரையில் நிலவிய வெப்பம் காரணமாக, குளுமையைத் தேடிக் கொடைக்கானலுக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு மாளிகையில் தங்கியிருந்தார். அச்சமயத்தில், கொடைக்கானல் நகரில், மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் வீணாகுவதைக் கண்டார். அதனால், மழை நீர் ஓரிடத்திலேயே தங்கும் அளவுக்கு, நகரின் மையப் பகுதியில், 1863ம் ஆண்டில், விண்மீன் வடிவிலான ஏரியை அவர் வடிவமைத்தார். ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள இந்த ஏரி, காண்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது. மழைக் காலங்களில் இந்த ஏரி நிரம்பியவுடன், அதன் உபரி நீர், வடகவுஞ்சி, பேத்துப்பாறை, பழனி, மஞ்சளாறு, பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. இந்த ஏரியில் ஏறத்தாழ 150 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்த ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களும் வேலை செய்கின்றனர். 2013ம் ஆண்டில் தினமணியில் வெளியான தகவலின்படி, கடந்த இருபது ஆண்டுகளுக்குமுன்னர் வரை, இந்த ஏரியின் நீர் சுத்தமாகவும்தெளிவாகவும், குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில், இந்த ஏரியைச் சுற்றி, உணவகங்கள், மற்றும், பயணியர் விடுதிகள் அதிகமாக உருவானதால், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரிக்குள் திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏரி பொலிவிழந்து மாசுபடிந்து துர்நாற்றம் வீசும் அளவுக்குச் சென்றுவிட்டது. இந்த ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக அப்போதைய தமிழக அரசு 3 கோடி ரூபாயும், கொடைக்கானல் நகராட்சி ஒரு கோடி ரூபாயும், மத்திய அரசு 6.33 கோடி ரூபாயும் வழங்கின. ஆயினும் தூய்மைப்படுத்தும் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. மலைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கொடைக்கானல் ஏரியைச் சுற்றி 200 மீட்டருக்கு எந்தவிதமானக் கட்டடங்களும் இருக்கக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், 159 ஆண்டுகள் பழமையான கொடைக்கானல் ஏரியின் நீர் தற்போது மிகவும் மாசு அடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்