தேடுதல்

மழை தரும் காடுகள் மழை தரும் காடுகள்  

இனியது இயற்கை – மழை தரும் காடுகள்

காடுகள் இல்லையென்றால் மழை இல்லை, மழை இல்லையென்றால் மனிதர் இல்லை, மனிதர் இல்லையென்றால் இப்பூவுலகம் பொலிவிழந்து போகும் என்பதை உணர்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உடல் வியர்வையை வெளியேற்றுவதன் வழியாகத் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்வது போல மரங்களும் தாம் உறிஞ்சும் நீர்ச் சத்து முழுவதையும் வைத்துக்கொள்வதில்லை. அதைத் தன் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாக வெளியேற்றிவிடுகின்றன. அப்படி வெளியேறும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்துகின்றது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. ஒற்றை மரம் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 300 லிட்டர்கள் வரை தண்ணீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. இப்படி ஒரு மரத்துக்கே சில நூறு லிட்டர்கள் என்றால், ஒரு காட்டில் எத்தனை ஆயிரம் மரங்கள் இருக்கின்றன! அத்தனை ஆயிரம் மரங்களும் வியர்வை சிந்தும்போது அந்தக் காற்று எவ்வளவு குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம். அதனால்தான் அமேசான் காட்டில் நினைத்த நேரமெல்லாம் மழை பெய்கிறது.

பொதுவாக, மரங்கள் எப்போதும் தனக்குத் தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை. அவைகள் வெளியேற்றும் அவ்வளவு நீரும் வெளியாகி ஈரப்பதமாகக் காற்றில் கலந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மரம் 10,000 லிட்டர்கள் அளவிற்குத் தண்ணீரை உறிஞ்சுவதாக வைத்துக்கொள்வோம். அதில் அந்த மரத்திற்குத் தேவையான நீர் என்னவோ ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர்கள் மட்டும்தான். அந்தளவுக்கு மட்டும் தண்ணீரை எடுத்துக்கொண்டு மீதமுள்ள 8,000 லிட்டர் தண்ணீரை காற்றுக்குக் கொடையாகத் தந்துவிடும். அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கிறது. அந்த உபரி நீரைக் கிரகித்துக்கொண்டுதான் மேகங்களும் மழையை நமக்குக் கொடுக்கின்றன. இதனைப் புரிந்துகொண்டவர்களாக மழைக்குக் காரணமாக அமையும் காடுகளை வளர்ப்போம். காடுகள் இல்லையென்றால் மழை இல்லை. மழை இல்லையென்றால் மனிதர் இல்லை என்பதை உணர்வோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2022, 13:51