ஜோர்டன் நாட்டு அரசர், அவரது மகன்  ஜோர்டன் நாட்டு அரசர், அவரது மகன்  

மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருது

மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருதைப் பெறுபவர்கள் - ஜோர்டன் நாட்டு அரசர் Abdullah II, அரசி Rania Al Abdullah, மற்றும் FOKAL மனிதாபிமான அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜோர்டன் நாட்டு அரசர் Abdullah II ibn Al Hussein, அரசி  Rania Al Abdullah ஆகியோருக்கும்,  FOKAL எனப்படும் ஹெய்ட்டி நாட்டு மனிதாபிமான அமைப்புக்கும், மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருது வழங்கப்படுவதாக, பிப்ரவரி 25, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் முஸ்லிம் உயர்குரு இமாம் அல்-அசார் அவர்களும் இணைந்து கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த உணர்வுபற்றிய ஏட்டின் அறிவுரைகளால் தூண்டப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும் பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவும், அப்பகுதியில், முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகளைக் களையவும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும், ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் ஆற்றிவரும் பணிகளை, சய்யது விருதுக் குழு பாராட்டியுள்ளது

அரசி ரானியா அவர்கள், உலகெங்கும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு அயராது குரல்கொடுத்து வருகிறார் என்றும், இரக்கம் சார்ந்த நடவடிக்கைகள் வழியாக, சகிப்புத்தன்மை மற்றும், ஏற்புடைமையை ஊக்குவித்து வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை ஆண்டுகளில் ஜோர்டன் நாடு, இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு தன் எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும், அவர்கள் கட்டணமில்லா கல்வி உட்பட, அரசின் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டு FOKAL மனிதாபிமான அமைப்பு, அந்நாட்டு இளையோரையும், அடித்தட்டு குழுமங்களையும் உருவாக்குவதில் சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றது.

மனித உடன்பிறந்த உணர்வின் விழுமியங்களின் அடிப்படையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும், பரிவன்பு ஆகியவைகொண்ட ஓர் உலகைக் கட்டியெழுப்புவதற்குச் சிறப்புப் பங்காற்றிவருகின்ற தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2022, 15:32