ஆயுதமோதல்களில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் குறித்த அறிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆயுத மோதல்களில் பயன்படுத்தப்படுவதாக UNICEF எனும் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுத மோதல்களில் சிறார் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உலக நாள், பிப்ரவரி 12, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்ட UNICEF அமைப்பு, 2005க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் 93,000க்கும் மேற்பட்ட சிறார் ஆயுதமோதல்களில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
2020ம் ஆண்டில் மட்டும் 8,521 சிறார்கள் ஆயுத மோதல்களின்போது பயன்படுத்தப்பட்டதாகவும், சிறாரின் மனித உரிமை மீறல்கள் குறித்த 26,425 புகார்கள் எழுந்துள்ளதாகவும் UNICEFன் அறிக்கை உரைக்கிறது.
உலகில் இடம்பெறும் ஆயுத மோதல்களில் 75 விழுக்காட்டுக் குழந்தைகள் ஆயுதம் ஏந்தவும், ஆயுதக்குழுக்களுக்குப் பணிபுரியவும் பயன்படுத்தப்படுகிறார்கள் எனக்கூறும் இவ்வறிக்கை, 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மோதல்களில், சிறுமிகளும் பயன்படுத்தப்படுகிறார்கள் எனக் கவலையை வெளியிட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் ஆயுத மோதல்களுக்கென திருடப்படும் சிறுமிகளுள் 40 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஆயுதம் தாங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்