தேடுதல்

வறண்டுபோன நீர்தேக்கம் வறண்டுபோன நீர்தேக்கம்  

இனியது இயற்கை : நீர் மேலாண்மை

குளிர்பான ஆலைகள், வெளி நாட்டவர் தங்கள் நீரை சேமிக்க, நம்மை பலிகடா ஆக்கினார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவற்றை சமாளிக்க சமவெளிகளில் உள்ள மரங்களை வெட்டி பயிர் செய்தார்கள். மரங்கள் விறகுக்காகவும், விவசாய கருவிகள் செய்யவும், வீடுகள் கட்டவும் தேவைப்பட்டன. இயற்கையுடன் ஒன்றி இருந்த மனிதன் இயற்கையுடன் போரிட ஆரம்பித்தான். மக்கள் தொகை பெருக்க விழுக்காடும் அதிகமானது. பஞ்சம் வந்தபோது, அதை சமாளிக்க ஏறக்குறைய 30 முதல் 50 அடி ஆழ கிணறு தோண்டி மாடுகள் வைத்து நீரை இறைத்து பஞ்சத்தை ஒருபோகத்திற்கு சமாளித்தார்கள். காலம் போகப்போக, மக்கள்தொகை பெருக்கத்தை அரசும் கண்டு கொள்ளவில்லை, மனிதனிடமும் விழிப்புணர் இல்லை. அதனால் மீண்டும் உணவு தட்டுப்பாடு. விளைவு, மனிதன் மீண்டும், மலை சார்ந்த குறிஞ்சி பகுதிகளை அழித்து அதில் விவசாயம் செய்ய முற்பட்டான். மழையின் அளவும் குறைந்து கொண்டே வந்தது, விஞ்ஞான வளர்ச்சியில் மின்சாரம் வந்தது. விளைவு, மோட்டார் கண்டுபிடித்து மாடுகளுக்கு மாற்றாக பயன்படுத்தினார்கள். கிணறுகளை, தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் ஆழப்படுத்தினார்கள். நிலத்தடி நீர் 100 அடியைத் தாண்டிச் செல்லத் துவங்கியது.

நிலைமையை சமாளிக்க அரசாங்கம் அணைகள் நிறைய கட்டி, நீரை தேக்கி பாசன பகுதிகளை அதிகப்படுத்தியது. பாசனம் இன்றி, பலநூறு ஆண்டுகளாக உணவுக்கு பெயர்போன பகுதிகள், பாலைவனம் ஆக தொடங்கின. விளைவு, இயற்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு பருவ மழை தவறின. விளைச்சல் பாதிக்கப்பட்டது, உணவு தேவை அதிகரித்தது. தொழிற்சாலைகள் வந்தன, நீர் மாசுபட்டது. இது தவிர, குளிர்பான ஆலைகள், வெளி நாட்டவர் தங்கள் நீரை சேமிக்க நம்மை பலிகடா ஆக்கின. மனிதனின் நீர் தேவை அதிகரிக்க ஆழ்துளை கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதிலேயே முனைப்புடன் இருந்தார்களே அன்றி, எடுக்கும் நீரின் அளவு, நீரை மழை காலங்களில் சேமிக்க வேண்டும், என்ற யோசனை இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு இன்று இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இப்போதாவது நாம் ஆற அமர்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  (ஆதாரம்: உயிர்நாடி விவசாயம் மாத இதழ்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2022, 16:59