தேடுதல்

மும்பையில் பள்ளியை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர் மும்பையில் பள்ளியை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்   (AFP or licensors)

குழந்தைகளின் நலவாழ்வைப் பாதிக்கும் பள்ளி மூடல்

பள்ளி மூடல்களின் காரணமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் : GEEAP அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 26, இப்புதனன்று Global Education Evidence Advisory Panel  (GEEAP) என்ற அமைப்பு “கோவிட்-19ன்போது கற்றலுக்கு முன்னுரிமை” என்ற தலைப்பில் புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வின்படி,  பள்ளி மூடல்கள் குழந்தைகளின் கற்றல், மற்றும் நலவாழ்வுக்கு பெரிய மற்றும் தொடர்ச்சியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும், இந்தப் பாதிப்பு  இன்னும் பல ஆண்டுகளுக்கு உணரப்படும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வெளிநாடுகள், காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், ஐநா-வின் குழந்தைகள் நிதியமான UNICEF அமைப்பு, உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆய்வில், குழந்தைகள் கல்வி தொடர்பாக  அவசர திருத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரும் இழப்பைக் கொண்டுவந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பள்ளி மூடல்களால் ஏற்படும் கற்றல் இழப்புகள், உலகளாவிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என்று அச்சம் தெரிவித்துள்ள GEAAPன் இணைத் தலைவர் Abhijit Banerjee அவர்கள், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளை மீண்டும் பள்ளி அமைப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

2019ம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட Abhijit Banerjee அவர்கள், உலகெங்கிலும் உள்ள 15 கல்வி நிபுணர்களில் ஒருவர் என்பதும், இவ்வாண்டு GEAAP அறிக்கையைத் தயாரித்தவர் என்பதும் சிறப்புக்குரியது.

அகில உலக கல்வி தினமான ஜனவரி 24, இத்திங்களன்று, UNICEF அமைப்பால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 616 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் முழு அல்லது பகுதியளவு பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2022, 16:05