தேடுதல்

வயலில் நாற்று நடுதல் வயலில் நாற்று நடுதல்  (AFP or licensors)

இனியது இயற்கை - விவசாயத்தில் நீரின் பங்கு

தண்ணீரைத் தேக்கி வைத்து அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதன் வழியாக உலகின் உணவுத் தேவையில் 40 விழுக்காட்டை இதுவரை நிறைவுச்செய்து வந்துள்ளோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகின் நன்னீரின்  பெரும் பகுதி விவசாயத்திற்கெனவே பயன்படுத்தப்படுகின்றது, அதாவது 70 விழுக்காட்டு நீர். நீர் நிலைகளிலிருந்தும், நிலத்தடியிலிருந்தும் நாம் இன்று விவசாயத்திற்கென பயன்படுத்தும் தண்ணீர், ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது, மும்மடங்காக உள்ளது. இப்படியேப்போனால், 2050ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை தாண்ட உள்ள நிலையில், விவசாயத்திற்கான நீரின் தேவையை எவ்வாறு நிறைவுச் செய்யப்போகிறோம்?   அப்போது, தற்போதைய தேவையைவிட, தண்ணீரின் தேவை 19 விழுக்காடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீரைத் தேக்கி வைத்து அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதன் வழியாக உலகின் உணவுத் தேவையில் 40 விழுக்காட்டை இதுவரை நிறைவுச்செய்து வந்துள்ளோம். மக்கள் பெருக்கம் அதிகரித்து, நிலத்தடி நீரின் மட்டம் குறைந்தும் வரும்போது, உணவுத்தேவையை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

விவசாயத்திற்கான தண்ணீர் தேவை ஒருபுறமிருக்க, உலகின் குடிநீர் தேவையும் அதிகரித்துவருகின்றது. உலகில் 10ல் மூவருக்கு, அதாவது 30 விழுக்காட்டு மக்களுக்கு, மேலும் விரிவாகச் சொல்லப்போனால், 210 கோடி மக்களுக்கு சுத்தக்குடிநீரை வீட்டில் பெறுவதற்கான வசதியில்லை, இதிலும் 84 கோடியே 40 இலட்சம் பேருக்கு அடிப்படை குடிதண்ணீர் சேவைகள் அவர்களைவிட்டு வெகுதுரமாகவே உள்ளன. இன்றைய உலகில் 15 கோடியே 90 இலடசம் மக்கள், சுத்தப்படுத்தாத தண்ணீரையே, குளங்களிலிருந்தும் நீரூற்றுகளிலிருந்தும் எடுத்து நேரடியாக குடித்து வருகின்றனர். இதிலும் 58 விழுக்காட்டு மக்கள் சஹாராவை அடுத்த ஆப்ரிக்க நாடுகளில் வாழ்கின்றனர். இம்மக்கள் குறித்த உலகின் பாராமுகம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்குமா? மௌனங்கள் உடைக்கப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே உண்மை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2022, 16:10