COP26 உலக மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர், பிரித்தானிய பிரதமர், ஐ.நா. பொதுச் செயலர் COP26 உலக மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர், பிரித்தானிய பிரதமர், ஐ.நா. பொதுச் செயலர்  

வாரம் ஓர் அலசல்: சிறியதொரு முயற்சி, பெரியதொரு மாற்றம்

அரை மணி நேரம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) வீடியோ பார்த்தால், அது 1.6 கிலோ கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. அடுத்த 6 ஆண்டுகளில் அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனத் தெரிகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் நிறுவனம், 200க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசுத் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் ஆகியோரோடு, COP26 எனப்படும் காலநிலை அல்லது பருவநிலை மாற்ற 26வது உலக உச்சி மாநாட்டை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் துவக்கியுள்ளவேளை, உலகினர் அனைவரின் கண்களும் கிளாஸ்கோ நகரையே நோக்கியவண்ணம் உள்ளன. இதற்கு, வளிமண்டலத்தில் உமிழப்படும் பசுமை இல்ல வாயுக்களால், நம் பூமிக்கோளத்தின் வெப்பநிலை கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதும், பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டம் உயர்ந்து வருவதும், புதிய புதிய நோய்களும் பரவி மனிதரின் நலவாழ்வை அச்சுறுத்தி வருவதும், அரியவகை பல்லுயிரின வகைகள் அழிந்துவருவதுமே காரணங்களாகும். இவ்வாறு பலவாறு கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள இப்புவியின் பிரச்சனைகளைக் களைவதற்கு, கிளாஸ்கோவில் இருவார மாநாட்டை நடத்தும் உலகத் தலைவர்கள் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார்கள் என்றே உலகினர் எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,  அக்டோபர் 31, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் COP26 உலக மாநாடு பற்றிக் குறிப்பிட்டு, “இப்பூமியின் அழுகுரலும், ஏழைகளின் அழுகுரலும் கேட்கப்படவேண்டும் என்று இறைவேண்டல் செய்வோம். இந்த சந்திப்பு, வருங்காலத் தலைமுறைகளுக்கு தெளிவான நம்பிக்கையை வழங்குவதாக என்று கூறினார்

COP26 உலக உச்சி மாநாடு

கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 உலக உச்சி மாநாட்டின் தலைவரான அலோக் ஷர்மா (Alok Sharma) அவர்கள், அம்மாநாட்டின் துவக்க நிகழ்வில் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளால், நம் பூமிக்கோளம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. வெள்ளம், புயல், காட்டுத் தீ, அதிகக் குளிர், கடும் வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் வாயிலாக நாம் அதை உணர்ந்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பிலும்கூட, காலநிலையில் மாற்றம் ஏற்படுவது தடைபடவில்லை. புவியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்கு உயராமல் காப்பது மட்டுமே இப்போதைக்கு நம் கையில் உள்ள இறுதி வாய்ப்பு. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து துரிதமாகச் செயல்பட்டால் மட்டுமே, இந்தப் புவியை காக்க முடியும் என்று கூறியுள்ளார். COP26 உலக உச்சி மாநாட்டுக்கு ஒரு முன்தயாரிப்பாக, அக்டோபர் 30, இச்சனி, 31 இஞ்ஞாயிறு ஆகிய இரு நாள்களில் உரோம் மாநகரில் மாநாடு ஒன்றை நடத்திய ஜி-20 பணக்கார நாடுகளின் தலைவர்களும், புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியசுக்கு உயராமல் காப்பதற்கு முடிவெடுத்துள்ளனர். நிலக்கரியால் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதை, இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக்கொள்ள அனைத்து நாடுகளும் உறுதி ஏற்கவேண்டும் எனவும், புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் வகையில், காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு உதவ, ஆண்டுக்கு ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதியை, பணக்கார நாடுகள் திரட்ட வேண்டும் என ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவும், இந்த ஜி20 மாநாட்டில் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவை செயல்முறைக்கு வரும் என நம்புவோம்

COP (Conference of Parties) என்பது, காலநிலை மாற்றம் பற்றிய ஐ.நா. உறுப்பு நாடுகளின் அமைப்பாகும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை மட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலிலிருந்து இப்பூமியைப் பாதுகாக்கவும் என்று, 1994ம் ஆண்டில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குப்பின் ஒவ்வோர் ஆண்டும் இந்த உலக மாநாடு, பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. COP 08 உலக மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. 2019ம் ஆண்டுக்குள், அந்த அமைப்பில் 197 நாடுகள் உறுப்புக்களாக இணைந்தன. 2015ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்ற COP21 உலக மாநாட்டில், கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதன் வழியாக, உலக அளவில் வெப்பநிலையை 1.5 முதல் 2 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்கவிடாமல் செய்வதற்கு இசைவுதெரிவிக்கப்பட்டன. இதற்குப்பின் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குரிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டன. ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதியில், உலகின் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று, ஐ.நா. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, COP26 உலக மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியுசுக்கு மேல் உயராமல் இருக்க உலக நாடுகள் உறுதி ஏற்கவேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது பூமி வெப்பமடைகிறது. இன்றைய மக்கள் தொகைப் பெருக்கம், நவீனத் தொழில்முறைகள், நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிசக்தி வாகனங்கள், காடுகள் அழிப்பு, நவீன வாழ்க்கைமுறை போன்ற பலவும் பசுமை இல்ல வாயுக்களின் அளவற்ற வெளியீட்டுக்குக் காரணமாகின்றன. கரியமில வாயுதான் வளிமண்டலத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அரை மணி நேரம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) வீடியோ பார்த்தால், அது 1.6 கிலோ கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. அடுத்த 6 ஆண்டுகளில் அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க, பூமியின் வெப்பமும் அதிகரித்துக்கொண்டே போகும். அது மனிதரின் நலவாழ்வுக்கும் விலங்கினங்களின் புலம்பெயர்வுக்கும், அவற்றின் அழிவுக்கும் வழியமைக்கின்றது. எனவே, இந்த வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் தனியொரு மனிதரால், சிறு சிறு குழுமங்களால் எவ்வாறு உதவமுடியும்?

பிரப்பன்வலசை கடல் விளையாட்டுகள் நிறுவனம்

இராமநாதபுரம் மாவட்டத்தின், மன்னார் வளைகுடா கடற்பகுதியில், கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, சித்தாமைகள், கடல் பாசி, மெல்லுடலிகள்,  பவளப்பாறைகள் என 3,600க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இக்கடற்பரப்பில் மீன்பிடியின்போது சேதமாகும் வலைகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடலில் வீசும் நெகிழிப் பொருள்கள், காலி மதுபாட்டில்கள் ஆகியவற்றால் கடல் மாசடைந்து வருகிறது. இதனால், கடலுக்கு அடியில் வாழும் இலட்சக்கணக்கான அரியவகை உயிரினங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே இவ்வுயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தில், பிரப்பன்வலசை மீனவக் கிராமத்தில் உள்ள கடல் விளையாட்டு நிறுவனம், கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. கடல் விளையாட்டுகள் மீது ஆர்வமுள்ள, கடலோரங்களில் வாழ்கின்ற மீனவச் சிறாரின் உதவியுடன், அந்நிறுவனம் கடற்கரையைத் தூய்மைப்படுத்தி வருகின்றது. அதோடு அந்நிறுவனம், அச்சிறாருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி பயிற்சியாளர்கள் மூலம், நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றது. நீரில் மிதத்தல், நீர்ச் சறுக்கு, ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டுகளையும் கட்டணமின்றி கற்றுத்தருகின்றது. அச்சிறார் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இத்தூய்மைப் பணியை ஆற்றி வருகின்றனர். அப்பணி பற்றி, பயிற்சியாளர் மாரிமுத்து அவர்களும், அச்சிறாரும் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பிரப்பன்வலசை கடலைத்  தூய்மைப்படுத்தும் முயற்சி
பிரப்பன்வலசை கடலைத் தூய்மைப்படுத்தும் முயற்சி

இம்முயற்சியால் கடந்த  காலங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், அப்பகுதியில்  நாட்டுப்படகு மற்றும் பாரம்பரிய மீனவர்களுக்கு அண்மைக் காலமாக அதிக மீன் கிடைப்பதால் மீனவர்களின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரப்பன்வலசை கடல் விளையாட்டு நிறுவனம், இராமேஸ்வரம் வரும் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளை, ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் நேரடியாக அழைத்துச்சென்று, கடல்வாழ் உயிரினங்களைக் காண்பித்து வருகிறது. அவர்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்பைத் தணிக்க, தனிப்பட்ட முறையில் என்ன செய்யலாம்? அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம். சைக்கிளில் செல்லலாம். இயன்றவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். புதைபடிவ எரிபொருள் சார்ந்த வாகனப் போக்குவரத்தைக் குறைக்கலாம். மின்வாகனங்களுக்கு மாறலாம். அசைவ உணவைக் குறைக்கலாம். உணவும் தண்ணீரும் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம். மரம் வளர்த்து வன வளர்ச்சிக்கு உதவலாம். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம் போன்றவற்றில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம். மின்னணு சாதனங்கள், நெகிழிப் பொருள்கள் அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஆம். இவ்வாறு சிறு சிறு முயற்சிகளை மேற்கொள்வதால், அவை பெரும் பலன்களை, இக்காலத்தில் வாழ்கின்ற நமக்கு மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறைகளும் அடைய உதவும். புண்பட்டுள்ள இப்பூமிக்கோளம், தன்னை குணமாக்குமாறு கதறுகின்றது. இக்கதறலை நிறுத்த, COP26 உலக மாநாட்டில் உறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நம்புவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2021, 14:55