தேடுதல்

மியான்மார் புலம்பெயர்ந்தோர் முகாம் மியான்மார் புலம்பெயர்ந்தோர் முகாம் 

மியான்மார் இராணுவத்தின் வன்முறை மனுக்குலத்திற்கெதிரான குற்றங்களை

மியான்மார் இராணுவத்தால் நடத்தப்படும் நலவாழ்வு அமைச்சகம், இந்த பெருந்தொற்று காலத்தில், நலவாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை ஆற்ற இயலாமல் உள்ளது – ஐ.நா. மனித உரிமைகள் அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டு இராணுவம், அந்நாட்டு மக்களுக்கு எதிராக, வன்முறைகளை அதிகரித்துவரும்வேளை, அந்நாட்டில், மக்களாட்சியைக் கொணர்வதற்கு, உலகளாவிய சமுதாயம், தன் முயற்சிகளை, உடனடியாக இரட்டிப்பாக்கவேண்டும் என்று, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முயற்சியை மேற்கொள்வதற்கு காலம் கடத்தக்கூடாது என்று கூறியுள்ள, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர் Michelle Bachelet அவர்கள், மியான்மார் இராணுவ ஆட்சியின்கீழ் இடம்பெற்றுவரும் சில மனித உரிமை மீறல்கள், மனிதசமுதாயத்திற்கெதிரான குற்றங்களைக் கூடுதலாக்கலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

இராணுவ அரசின் நடவடிக்கைகள், தேசிய மற்றும், மாநில அளவில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்று, ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் கூறிய Bachelet அவர்கள், இராணுவத்தால் நடத்தப்படும் நலவாழ்வு அமைச்சகம், இந்த பெருந்தொற்று காலத்தில், நலவாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை ஆற்ற இயலாமல் உள்ளது என்று அறிவித்தார்.

ஆயுதமோதல்கள், ஏழ்மை, மற்றும், பெருந்தொற்றின் பாதிப்புக்கள் ஆகியவை அதிகரித்துவருகின்றன எனவும், அடக்குமுறை, வன்முறை, பொருளாதாரச் சீரழிவு போன்றவற்றை நோக்கி அந்நாடு சென்றுகொண்டிருக்கிறது எனவும் Bachelet அவர்கள் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் கணிப்புப்படி, மியான்மாரில் தேசிய அளவில் இடம்பெற்ற அடக்குமுறையில், 1,120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், 8,000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், தடுப்புக்காவலில் குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், 2,30,000த்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 15:10