ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் 

அனைத்துலக இளையோர் நாள் – ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

அனைவருக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில், இளையோர் முன்னணியில் உள்ளனர் - ஐ.நா.வின் தலைமைப் பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைவருக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில், இளையோர் முன்னணியில் உள்ளனர் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 12, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக இளையோர் நாளையொட்டி காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், கோவிட் பெருந்தொற்றை அடுத்துவரும் காலங்களில், சமுதாயத்தை மாற்றியமைக்கும் பொறுப்பில், இளையோருக்கு முழு பங்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பிக்கப்படும் அனைத்துலக இளையோர் நாள், இவ்வாண்டு, "உணவு முறைகளை மாற்றியமைத்தல்: மனித சமுதாயம் மற்றும் பூமிக்கோளம் ஆகியவற்றின் நலனுக்காக, இளையோரின் புதிய முயற்சிகள்" என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்பட்டது.

நமது உணவு முறைகளில் புதுமையான தீர்வுகளை வழங்கியுள்ள இளையோர், உணவு பற்றாக்குறை, உயிர்களின் பன்முகத்தன்மை இழப்பு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க முன்வந்துள்ளனர் என்று கூட்டேரஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.

பாலின சமத்துவம், கல்வி, திறமைகளை வளர்த்தல் ஆகிய பல்வேறு தளங்களில் படைப்பாற்றலையும், முழு உள்ளத்துடன் கூடிய அர்ப்பணத்தையும் வழங்க தயாராக உள்ள இளையோர், நம் உணவு குறித்த பிரச்சனைகளுக்கும் புதுவகை தீர்வுகளைக் காண்பர் என்ற நம்பிக்கையை, கூட்டேரஸ் அவர்கள், தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

இளையோர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகளை, அவர்கள், தனித்து நிறைவேற்ற இயலாது என்பதை அறிந்த நாம், அவர்களுக்கு பல்வேறு வழிகளில் நம் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று, ஐ.நா.வின் தலைமைப் பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

உணவு முறைகளை மாற்றியமைத்தல் என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டின் இளையோர் நாள் சிறப்பிக்கப்பட்டதை போல், கடந்த ஆண்டு, "உலகளாவிய செயல்பாட்டில் இளையோரை ஈடுபடுத்துதல்" என்பது மையக்கருத்தாகவும், அதற்கு முன்னர், 2019ம் ஆண்டு, "மறுஉருவாக்கம் செய்யும் கல்வி" என்பது மையக்கருத்தாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2021, 13:57