டோக்கியோ நகரில், மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்களின் அறிவிப்பு டோக்கியோ நகரில், மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்களின் அறிவிப்பு 

பாராலிம்பிக் விளையாட்டுக்களில், ஆப்கானிஸ்தான் இடம்பெறாது

மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்களில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வீரர்கள் கலந்துகொள்ள இயலாமல் போனதற்கு, ஒலிம்பிக் குழு தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆகஸ்ட் 24ம் தேதி, மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கவிருக்கும் வேளையில், இந்த விளையாட்டுக்களில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வீரர்கள் கலந்துகொள்ள இயலாமல் போனதற்கு, ஒலிம்பிக் குழு தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து பாராலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள இரு வீரர்கள் தயாராக இருந்தவேளையில், அந்நாட்டின் தற்போதைய நிலையை மனதில் கொண்டு, ஆப்கானிஸ்தான் ஒலிம்பிக் குழுவினர், இந்த முடிவை எடுத்துள்ளதாக பன்னாட்டு ஒலிம்பிக் கழகத்தின் தலைவர் Andrew Parsons அவர்கள் கூறினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து Zakia Khudadadi என்ற பெண் வீரரும், Hossain Rasouli ஆண் வீரரும் ஆகஸ்ட் 17, இச்செவ்வாயன்று டோக்கியோ நகரை சென்றடையும் திட்டம் கைவிடப்பட்டது என்றும், அந்நாட்டிற்கு பயணிகள் விமானம் எதுவும் செல்லஇயலாத தற்போதைய சூழலில், அவ்வீரர்களை, டோக்கியோ நகருக்கு அழைத்துச்செல்லும் வாய்ப்புக்கள் இல்லாமல் போனது என்றும் Parsons அவர்கள் கூறினார்.  

Taekwondo போட்டியில் கலந்துகொள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து தெரிவு செய்யப்பட்ட Zakia Khudadadi என்ற பெண்மணி, அந்நாட்டிலிருந்து, முதல்முறையாக, ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்துகொள்ளும் பெண் என்ற வரலாற்றைப் படைக்கமுடியாமல் போனது, தன் கனவுகளை சுக்குநூறாக்கியது என்று, Zakia அவர்கள், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 24ம் தேதி, டோக்கியோ நகரில் துவங்கும் மாற்றுத்திறன் கொண்டோரின் பாராலிம்பிக் விளையாட்டுக்கள், இவ்வாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களைப்போலவே, பார்வையாளர்களின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2021, 14:13