பெருங்கடல்கள் நெகிழிப்பொருள்களால் நிறைந்துள்ளன பெருங்கடல்கள் நெகிழிப்பொருள்களால் நிறைந்துள்ளன  

இயற்கையோடு மேற்கொள்ளும் போரை முடிவுக்குக் கொணர்வோம்

பெருங்கடல்களின் ஆழத்தில் குவிந்துள்ள நெகிழிப் பொருள்கள், மீன்பிடித்தொழிலில், ஆண்டுக்கு 90 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு கடுமையாக முயற்சித்துவரும் நாம், இயற்கையோடு மேற்கொள்ளும் போரை முடிவுக்குக் கொணர்வோம் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

சூன் 08, இச்செவ்வாயன்று, கடைப்பிடிக்கப்பட்ட உலக பெருங்கடல்கள் நாள் கருப்பொருள் பற்றிக் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், “பெருங்கடல்: வாழ்வும், வாழ்வாதாரங்களும்” என்ற தலைப்பு, பெருங்கடல்கள், உலகினர் அனைவரின் கலாச்சார மற்றும், பொருளாதார வாழ்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளார்.

உலகில், 300 கோடிக்கு மேற்பட்ட மக்கள், தங்களின் வாழ்வாதாரங்களுக்கு பெருங்கடல்களை நம்பி வாழ்கின்றனர் என்றும், இவர்களில் பெரும்பகுதியினர், வளரும் நாடுகளில் உள்ளனர் என்று கூட்டேரஸ் அவர்கள் உரைத்துள்ளார்.

இயற்கை மீது நாம் போரிடுவதை நிறுத்துவது, இக்கால, மற்றும், வருங்காலத் தலைமுறைகளின் நலவாழ்வுக்கும், உலக வெப்பநிலையை 1.5 செல்சியுஸ் டிகிரிக்குக் கொண்டுவருவதற்கும், ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கும் உதவும் என்று கூட்டேரஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நம் பெருங்கடல்கள் நெகிழிப்பொருள்களால் நிறைந்துள்ளன என்றும், பெருங்கடல்களின் ஆழத்தில் குவிந்துள்ள இப்பொருள்கள், மீன்பிடித்தொழிலில், ஆண்டுக்கு 90 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றது என்றும், கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

பெருங்கடல்கள்

பூமிக்கோளத்தின் நுரையீரல்களாக அமைந்துள்ள பெருங்கடல்கள், மனிதரின் தினசரி வாழ்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும், அவை, மனிதருக்கு வழங்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், 2008ம் ஆண்டு டிசம்பா் 5ம் தேதி நடைபெற்ற ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையில், உலகப் பெருங்கடல் நாள் கொண்டாடப்படவேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

1992ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ தெ ஜெனிரோவில் நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டில், உலகப் பெருங்கடல் தினத்தைக் கொண்டாடுவது பற்றி கனடா நாடு பரிந்துரைத்தது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2021, 15:03