ஆறு மாற்றுத்திறன் குழந்தைகளைத் தத்தெடுத்துள்ள பென் கார்பென்டர் ஆறு மாற்றுத்திறன் குழந்தைகளைத் தத்தெடுத்துள்ள பென் கார்பென்டர் 

வாரம் ஓர் அலசல்: பிறருக்கு உதவக் கிடைப்பது ஒரு வரம்

பிறருக்கு கொடுப்பதற்கு, நீ பணக்காரனாக இருக்கவேண்டுமென்பதோ, பணக்காரன் ஆகும்வரை காத்திருக்கவேண்டும் என்பதோ கிடையாது…. பிறருக்கு உதவுவதற்கு நல்ல மனம்தான் வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் 

1987ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை, உலகில் கோடீஸ்வரர் என்ற இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர், பில் கேட்ஸ் என பொதுவாக அறியப்படும், வில்லியம் ஹென்ரி கேட்ஸ் (William Henry Gates III). கணனி உலகின் பேரரசராகிய பில் கேட்ஸ் அவர்களிடம், ஒருநாள் ஒருவர், இந்த உலகத்தில் உங்களைவிட கோடீஸ்வரர் எவரும் இருக்கின்றார்களா?” என்று கேட்டார். அதற்கு பில் கேட்ஸ் அவர்கள், ஆம். ஒருவர் இருக்கிறார் என்று, பல ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்.

உலகில் கோடீஸ்வரர் யார்?

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். அச்சமயத்தில் நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். அங்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தேன். நாளிதழ் ஒன்றினை வாங்கலாம் எனவும் நினைத்தேன். ஆனால், அந்த நாளிதழை வாங்குவதற்கு அப்போது என்னிடம் பணம் இல்லை. எனவே, அதை வாங்கவில்லை. ஆனால் என்னைக் கவனித்த கருப்பினச் சிறுவன் ஒருவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியை என்னிடம் கொடுத்தான். என்னிடம் சில்லறை இல்லையே என, அவனிடம் நான் கூறினேன். அவனோ, பரவாயில்லை, நீங்கள் பணம் தரவேண்டாம், இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றான். மூன்று மாதங்கள் சென்று, நான் அதே விமான நிலையம் சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவனும், அதேபோல், நாளிதழை பணம் வாங்காமல் கொடுத்தான். அப்போது நான் அதை வாங்க மறுத்தேன். ஆனால் அச்சிறுவனோ, அன்று தனக்கு கிடைத்த இலாபத்திலிருந்து தருவதாகக் கூறி, அதைக் கொடுத்தான். இது நடந்து 19 ஆண்டுகளுக்குப்பின் நான் செல்வந்தன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது. ஒன்றரை மாதத் தேடலுக்குப்பின் அவனைக் கண்டுபிடித்து, அவனிடம், “என்னைத் தெரிகிறதா? என்று கேட்டேன். அவனும், தெரிகிறது. நீங்கள் புகழ்பெற்ற பில்கேட்ஸ் என்றான். நீ எனக்கு பல வருடங்களுக்கு முன்னர், இரண்டு முறை, பணம் வாங்காமல் நாளிதழ்களைக் கொடுத்தாய், இப்போது அதற்கு கைம்மாறாக, நீ விரும்பும் அனைத்தையும் தர விரும்புகிறேன் என்றேன். அதற்கு அந்த கருப்பின இளைஞன், ஐயா, உங்களால் அதற்கு ஈடுசெய்ய முடியாது என்றான். ஏன்? என்று நான் கேட்டேன். அதற்கு அந்த இளைஞன், நான் ஏழையாய் இருந்தபோது, உங்களுக்கு நாளிதழைக் கொடுத்தேன். ஆனால், நீங்கள் பணக்காரராக மாறிய பிறகே, அதற்கு கைம்மாறாக எனக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறீ்ர்கள். ஆகவே, நீங்கள் எவ்வாறு அதைச் சரிக்கட்டமுடியும்? என்று கூறினான். ஆம். அந்த கருப்பின இளைஞன்தான் என்னைவிடப் கோடீஸ்வரன் என்பதை அன்று நான் உணர்ந்தேன் என்று பில்கேட்ஸ் அவர்கள், தன்னைவிட இந்த உலகத்தில் செல்வந்தர் இருக்கிறார்கள் என்று கூறினார். இணையத்தில் இந்த தகவலைப் பதிவுசெய்துள்ள அன்பர் ஒருவர், பிறருக்கு கொடுப்பதற்கு, நீ பணக்காரனாக இருக்கவேண்டுமென்பதோ, பணக்காரன் ஆகும்வரை காத்திருக்கவேண்டும் என்பதோ கிடையாது…. உதவவேண்டும் என்ற குணத்திற்கு காலம், நேரம், அல்லது ஏழை, பணக்காரர் என்பதும் கிடையாது. பிறருக்கு உதவுவதற்கு நல்ல மனம்தான் வேண்டும் என்று எழுதியுள்ளார். குன்றக்குடி அடிகளார் சொல்வார் – “நல்ல மனம் படைத்தவர்கள், பிறருக்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் கருதுவார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள்” என்று. வள்ளுவமும், “கொடுத்து, உவந்து வாழாத வாழ்க்கை, கொடிய துன்பமான வாழ்க்கை” என்றும்,  செய்யும் உதவியின் சிறப்பு, உதவியின் தரத்தையோ, தகுதியையோ, அல்லது, உதவியைப் பெறுவோரின் தகுதியையோ பொறுத்தது அல்ல என்றும் கூறுகிறது.

பென் கார்பென்டர்

37 வயது நிரம்பிய பென் கார்பென்டர் (Ben Carpenter) என்ற பிரித்தானியர், மாற்றுத்திறன் கொண்ட ஆறு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். “பிரிட்டனின் ஹட்டர்ஸ்பீல்டு (Huddersfield) நகரில் தனியாக வாழ்ந்துவரும் இவர், தனது 21வது வயதில், ஏழு வயது நிரம்பிய ரூபி என்ற, பேச்சிழந்த, மற்றும், சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறன் சிறுமியை முதலில் தத்தெடுத்தார். அதில் கிடைத்த மகிழ்வில், அடுத்தடுத்து அவர், ஐந்து மாற்றுத்திறன் குழந்தைகளைத் தத்தெடுத்தார் அவர். 5 வயது நிரம்பிய லில்லி, பத்து வயது நிரம்பிய ஜாக், 2 வயது நிரம்பிய ஜோசப், டெடி... இவ்வாறு இவர் தத்தெடுத்துள்ள அக்குழந்தைகள் ஒவ்வொன்றும், மரபணு கோளாறால் வளர்ச்சி பாதிப்பு, 'ஆட்டிசம்' செவித்திறன் குறைபாடு என ஒவ்வொரு முறையில் மாற்றுத்திறன் கொண்டவை. பென் கார்பென்டர் அவர்கள், தத்தெடுத்துள்ள ஆறாவது குழந்தையான பார்வையிழந்த லூயிஸ், மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தைக்கு தன்னிச்சையாக தசைகளை இயக்க முடியாது. பென் கார்பென்டர் அவர்கள், தனது இந்த தத்துப்பணி பற்றி ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். அன்பும் ஆதரவும் தேவைப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை விரும்பித் தத்தெடுத்து வளர்க்கிறேன். இத்தகைய குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சவாலானது, மற்றும், மிகவும் கடினமானது. எனினும் அவர்களைப் பராமரித்து அன்பு செலுத்துவதில் தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. பெரிய குடும்பம் அமைய வேண்டும் என்பது என் கனவு. இந்த கனவை, இந்தப் பிள்ளைகளை தத்து எடுத்து வளர்ப்பதன் வழியாக நனவாக்கி வருகிறேன். எனது அன்னை ரீட்டா அவர்களும், எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்.

பிறருக்கு உதவுதல் என்பது, குணமல்ல, அது ஒரு வரம் என்றே சொல்லப்படுகிறது. `நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது’ என்று, அமெரிக்க நடிகர் வர்ஜினியா வில்லியம்ஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா

ஆந்திர மாநிலத்தில், உதவிக்கு யாரும் இல்லாத, வயதான ஒருவரின் சடலத்தை, பெண் உதவிக்காவல் ஆய்வாளர் ஒருவர் சுமந்து சென்று, இறுதி மரியாதை செய்யவும் உதவியுள்ளார். ஆந்திராவில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த, காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக, காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற, பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா அவர்கள், முதியவரின் சடலம் அழுகி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். எனவே பலரும் சடலத்துக்கு அருகில் செல்லவே விரும்பவில்லை. இறந்து கிடந்த முதியவர் தர்மம் எடுப்பவர் என்ற விவரத்தைத் தவிர அவரைக் குறித்த, வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் முதியவரின் சடலம் கிடந்த இடத்துக்கும், காவல்துறை வாகனத்துக்கும் ஒரு சில கிலோ மீட்டர் தூரம் இருந்ததால், அவரின் சடலத்தை எடுத்துச்செல்ல கிராம மக்களிடம் உதவி கோரினார். யாரும் உதவிக்கு வராத நிலையில், லலிதா பிறரன்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன், தானே சடலத்தைச் சுமந்து சென்றார் சிரிஷா. மேலும், இறுதி மரியாதை செய்வதற்காக தனது சொந்த பணத்திலிருந்து சிறிது தொகையை அளித்தும் உதவி செய்திருக்கிறார். சிரிஷா அவர்களின் இந்த சேவையை பாராட்டிய ஊடகங்களிடம், “நேரமும், தேவையும் ஏற்படும்போது தயக்கமின்றி சேவை செய்யவேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டுள்ளது. இது காவல் பணியைவிட மேலானது. இதுபோன்ற என் சேவைகள் தொடரும்" என்று, அவர் கூறியுள்ளார்.

தென்னை மட்டையில் பாடை

துறவி ஒருவரிடம் பலர் சீடர்களாக இருந்து பயிற்சி பெற்றார்கள். ஒருநாள் இவர் தன் சீடர்களிடம், “ஒரு சில கிராமங்களில், இறந்த மனிதர்களைத் தென்னை மட்டையில் பாடைகட்டித் தூக்கிக்கொண்டுபோய், அடக்கம் செய்கிறார்களே, அது ஏன்?” என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொன்னார்கள். இறுதியில் ஒரு சீடர் எழுந்து, “தென்னை மரத்திலிருந்து விழும் தென்னை மட்டை, மரத்தில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுத்தான் விழுகின்றது. மனிதரும் இந்த மண்ணைவிட்டுப் பிரிகின்றபொழுது, தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு செய்கின்றார்கள்” என்று சொன்னார். ஆம், மனிதர்களாகிய நாம் இந்த மண்ணுலகில் வாழ்ந்ததற்கான தடம் இருக்கவேண்டும். அதற்கு நாம் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவேண்டும்.

இன்றைய மனிதர்களை மூன்று வகையாக பாகுபடுத்தலாம். முதல் வகையினர், நிகழ்காலத்தை நிராகரித்து விட்டு இறந்த காலத்திலே வாழ்பவர்கள். இவர்களுக்கு சுமைகளை இறக்கவும் தெரியாது, சோகங்களில் இருந்து விடுபடவும் தெரியாது. இரண்டாவது வகையினர், எதிர்கால கனவுகளில் நிகழ்காலத்தை இழப்பவர்கள். நாளை பற்றியே கவலைப்பட்டு நிகழ்காலத்தை இழக்கிறவர்கள். மூன்றாவது வகையினர், வாழ்க்கையை அனுபவித்து வாழும் இரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என்ற உற்சாகத்தோடு ஒவ்வொரு விடியலையும் வரவேற்கிறவர்கள். எனவே, உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் அன்புகூரும் இதயத்தைக் கொண்டிருப்போம். தன் வாழ்வை அன்புகூர்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சி காண முடியும். இவ்வாறு அருள்பணி குருசு கார்மல் அவர்கள் மாலைமலர் தினசரியில் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்திருக்கிறார். பிறர் மீது கருணை காட்டுவது, குறிப்பறிந்து பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்றவை, மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த சிந்தனை நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. கைம்மாறு கருதாமல் உதவி செய்வது, சிலரின் குணமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட, மதிப்புக்குரிய மாமனிதர்கள் பலர், நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2021, 14:03