வெப்பமண்டலப் பகுதி வெப்பமண்டலப் பகுதி  

வாரம் ஓர் அலசல்: வருங்கால தலைமுறைகளுக்காக காடுகள்

நாங்கள் மரங்களை நடவில்லை, ஆனால், வருங்காலத்தில் மக்கள் மூச்சுவிடுவதற்கு, ஆக்சிஜனை நட்டு வருகிறோம் -கார்மென் ரொட்ரிகெஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் 

இப்பூமிக்கோளத்தின் வெப்பமண்டலப் பகுதி என்பது, பூமத்தியரேகை, அல்லது, பூமியின் நிலநடுக்கோட்டைச் சுற்றியுள்ள இடங்களாகும். கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையில் அமைந்துள்ள, பூமியின் இந்த மத்திய வலயப் பகுதிகள், பூமியின் மற்ற இடங்களைவிட, சூரிய ஒளியை நேரடியாகப் பெறுகின்றன. அதனால் அப்பகுதியின் காலநிலையும், பொதுவாக கடும் வெப்பமாக இருக்கும். மழையும் அதிகமாகப் பெய்யும். இவை, பூமிக்கோளத்தின் நாற்பது விழுக்காட்டுப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் நாற்பது விழுக்காட்டினர், இந்த வெப்பமண்டலப் பகுதிகளில், வாழ்ந்து வருகின்றனர். 2014ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்த மக்கள்தொகை, 2050ம் ஆண்டில் ஐம்பது விழுக்காட்டை எட்டும் என்று கூறப்படுகிறது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பல்லுயிர் வகைகளும் உள்ளன. இந்த வெப்பமண்டலப் பகுதிகள், ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகியவற்றில் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா, மற்றும், கரீபியன் பகுதிகளில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் பத்து விழுக்காடு, அழியும் ஆபத்தை எதிர்கொள்கின்றன என செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், கார்மென் ரொட்ரிகெஸ் (Carmen Rodríguez) என்பவர், தென் அமெரிக்க நாடான, கொலம்பியா நாட்டின், Montes de María (மற்றொரு பெயர்-Serranía de San Jacinto) அதாவது, “மரியாவின் மலைகள்” எனப்படும் வெப்பமண்டலப் பகுதியில், காடுகளுக்கு மீட்டுயிரளிக்கும் பணியை, கடந்த பல ஆண்டுகளாக, ஆற்றி வருகிறார்.

Montes de María - கார்மென்

மரியாவின் மலைகள் எனப்படும், இந்த சிறு மலைத்தொடர்கள், கரீபியன் பகுதியில், கொலம்பியா நாட்டின் வடக்கு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளன. இம்மலைகளில் இடம்பெற்ற கடுமையான வன்முறைத் தாக்குதல்களால், கார்மென் அவர்களது குடும்பம், 1999ம் ஆண்டில், அப்பகுதியைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேறியது. அச்சமயத்தில் அக்குடும்பம் உற்பத்திசெய்த வேளாண்மையும், விலங்குகளும் அழிக்கப்பட்டன. ஆயினும், கார்மென் அவர்கள், தன்னோடு தானிய விதைகளை எடுத்துச் சென்றதால், அப்பகுதியில்  உள்நாட்டுப் போர் முடிவுற்றபின், மீண்டும் அங்கு அவர் குடியேறி, பயிர்செய்யத் தொடங்கினார். தற்போது கார்மென் அவர்களின் வழிகாட்டுதலில், நாற்பது விவசாயக் குடும்பங்கள், அந்த மலைகளில் குடியேறி, சுற்றுச்சூழலுக்கேற்ற பழ மரங்கள், தென்னை மரங்கள், உள்ளூர் தானிய வகைகள் போன்றவற்றை வளர்த்து வருகின்றன. இந்த மலைகளில் 2,569 தாவர வகைகளும், 230 பறவையினங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 83 தாவர வகைகள்,  அந்தப் பகுதியைச் சார்ந்தவை. Montes de María பகுதி, தற்போது சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது. கொலம்பியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகமும், ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட அமைப்பின் ஆதரவோடு, Montes de María பகுதியில், 33,400 ஹெக்டேர், வெப்பமண்டல காடுகளைக் காப்பாற்றியுள்ளது. கார்மென் அவர்கள், San Jacinto விவசாயிகள் என்ற அமைப்பையும் ஆரம்பித்து நடத்திவருகிறார். இந்த அமைப்பு பற்றி, ஊடகங்களிடம் அவர் விளக்குகையில், நாங்கள் மரங்களை நடவில்லை, ஆனால், வருங்காலத்தில் நீங்கள் மூச்சுவிடுவதற்கு, ஆக்சிஜனை நட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். Asomudepaz எனப்படும் இந்த விவசாயிகள் அமைப்பு, வெப்ப மண்டலப் பகுதி காடுகளைப் பராமரிப்பதோடு, பாலின சமத்துவம், புதுமையான வாழ்க்கைத் திட்டங்கள் போன்றவற்றையும் ஊக்குவித்து வருகின்றது.

தமிழகத்தில் காடுகள்

வெப்ப மண்டலப் பசுமை மாறாக் காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள், முட்புதர் காடுகள், சதுப்புநிலக் காடுகள், மலையகக் காடுகள் என ஐந்து வகை காடுகள், தமிழகத்தில், ஏறக்குறைய 22,877 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளன. இவற்றில், சதுப்புநிலக் காடுகள், வெப்ப‌ மண்டல, மற்றும், துணை வெப்ப‌ மண்டலப் பகுதிகளில் உள்ளன. மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படும் இந்தக் காடுகள், பிச்சாவரம், கோடியக்கரை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. மலையகக் காடுகள், மழைப் பொழிவு அதிகமாக உள்ள மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. ஆனை மலை, மற்றும், நீலகிரிப் பகுதியில் காணப்படும் இக்காடுகளில் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் வளர்கின்றன. சின்கோனா மரப் பட்டைகள், ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மலேரியா நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மேற்கு வங்க அரசு, டார்ஜிலிங் மலைப்பகுதியில் சின்கோனா மரங்களை வளர்க்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது

கொரோனாவில் இறந்தவர் நினைவாக மரக்கன்றுகள்

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

இக்காலத்தில், மக்கள் மத்தியில், மரம் நடுதல், காடுகள் பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வு அதிகமாகவே உருவாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த உறவுகள் குறித்த மனக்கவலை இருந்தாலும், அவர்களின் நினைவுச் சின்னங்களாக, டெல்லிக்கு அருகே உள்ள கிராம மக்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர் என்று, தினத்தந்தி நாளிதழில், ஜூன் 27, இஞ்ஞாயிறன்று, ஒரு செய்தி பதிவாகியிருந்தது. ஷிகார்பூர் கிராமத்தைச் சார்ந்த, குல்ஷன் தியாகி என்ற காவலர்தான் கொரோனாவால் இறந்தவர்கள் நினைவாக மரக்கன்று நடும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். டெல்லி காவல் துறையில் பணிபுரியும் குல்ஷன் தியாகி அவர்களது நண்பர் பராஸ் தியாகி உள்ளிட்ட பலர் குழுவாக இணைந்து கிராமங்களைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டிருக்கின்றனர். ஷிகார்பூர் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். இந்த பணி பற்றி பராஸ் தியாகி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். ‘‘அரசு வழியாக, இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதில் பராமரிப்பு செலவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கள் நலனுக்காகத்தான் மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்ற எண்ணம் பெரும்பாலான பொதுமக்களிடம் இருப்பதில்லை. அதனால் பல மரக்கன்றுகள் கவனிப்பாரற்று காட்சியளிக்கும் நிலை நிலவுகிறது. ஆனால் தங்கள் குடும்பத்தினர் நினைவாகவோ, சொந்தமாக தங்கள் தோட்டத்திலோ, மரக்கன்றுகளை நடும்போது நிச்சயம் அவற்றை கண்ணும், கருத்துமாகப் பராமரிப்பார்கள். இது சுற்றுச்சூழலுக்கும் பயன்தரும் என்று, பராஸ் தியாகி அவர்கள் சொல்லியுள்ளார். ‘‘அன்புக்குரியவர்கள் எங்களைவிட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்களை மிக சிறந்த முறையில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக எதிர்காலத்தில் கிராமத்திற்கும் பலன் கிடைக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு அதனை செயல்படுத்திவிட்டேன்’’. இவ்வாறு 25 வயது நிரம்பிய ரிங்கு தியாகி என்பவர் கூறியுள்ளார். 17 வயதாகும் ஆயுஷி தியாகி என்ற இளம் பெண்ணும் இதே கருத்தை முன் வைக்கிறார். இறந்தவர்களின் நினைவாக சிலைகள் அமைப்பதற்குப் பதிலாக மரங்களை நினைவுச் சின்னமாக நடுவது, அவர்களது ஆன்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் எனவும்,  மரக்கன்று நடவேண்டும் என்ற எங்கள் திட்டத்தை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டதும் மன நிறைவை கொடுக்கின்றது எனவும் கூறியுள்ளார். ஷிகார்பூரில் மரக்கன்று நடும் பணியை கேள்விப்பட்டு அருகில் உள்ள, இசாபூர் என்ற கிராமத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்சா, மாலிக்பூர் மற்றும் உஜ்வா போன்ற கிராமங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

வெப்பமண்டலப் பகுதிகள் உலக நாள்

வெப்பமண்டலக் காடுகள்
வெப்பமண்டலக் காடுகள்

ஜூன் 29 இச்செவ்வாயன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், வெப்பமண்டலப் பகுதிகள் உலக நாளைச் சிறப்பிக்கின்றது. 2014ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி, 123 முக்கிய வெப்பமண்டலப் பகுதி ஆய்வு நிறுவனங்கள் சமர்ப்பித்த அறிக்கைக்குப்பின் ஐ.நா. பொது அவை, 2016ம் ஆண்டில் இந்த உலக நாளை உருவாக்கியது. வெப்பமண்டலப் பகுதிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. வெப்பமண்டலப் பகுதிகள் உலக நாள், உலக வனவிலங்கு நாள், காடுகள் உலக நாள், அன்னை பூமி உலக நாள், பல்லுயிர் உலக நாள், மண் உலக நாள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது.

ஆஸ்டிராய்டு உலக நாள்

ஆஸ்டிராய்டுகள்
ஆஸ்டிராய்டுகள்

மேலும், 2016ம் ஆண்டில், ஐ.நா. நிறுவனம், ஆஸ்டிராய்டு (Asteroid) உலக நாளை உருவாக்கி, அந்த நாள் ஜூன் 30ம் தேதி சிறப்பிக்கப்படும் எனவும் அறிவித்தது. 1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, காலை 7.17 மணிக்கு, சைபீரியாவின் Podkamennaya Tunguska ஆற்றுப் பகுதி வானில், ஏறக்குறைய நூறு மீட்டர் அளவில், நுண்கோள் ஒன்று வெடித்தது. இந்த நுண்கோள், அப்பகுதியின் ஏறத்தாழ 2,200 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழித்தது. அதில் ஏறக்குறைய எட்டு கோடி மரங்கள் தரைமட்டமாகின. இந்த நாளின் நினைவாக உருவாக்கப்பட்ட ஆஸ்டிராய்டு உலக நாள், இவ்வாண்டு ஜூன் 30, இப்புதனன்று, சிறப்பிக்கப்படுகின்றது. பாறை போன்ற இந்த ஆஸ்டிராய்டுகள் அதாவது, நுண்கோள்கள், செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சூரியனைச் சுற்றிச் சுற்றிச் செல்கின்றன. இவை, பூமியின் தோற்றம், அதன் காலநிலை போன்றவை குறித்து அறிவியலாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள உதவுகின்றன. இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றங்களைக் குறைத்து அச்சுறுத்தும் நோயின்றி நலமாக வாழ சூழலியல் பாதுகாப்பை முன்னெடுப்போம். வருங்காலத் தலைமுறைகள் மூச்சுவிடுவதற்கு மரங்களை நட்டுப் பராமரிப்போம். மண் வளத்தையும், காடுகளையும் பாதுகாப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2021, 15:03