அமேசானில் மாசுகேடு அமேசானில் மாசுகேடு 

ஆக்சிஜன் பற்றாக்குறையும், ஸ்டெர்லைட் ஆலையும்

மீளவட்டானில், தாமிரம் உருக்கும் ஆலையில், தாமிரக் கம்பி, கந்தக அமிலம், மற்றும், பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டன. இவை, அப்பகுதியின், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, பெரும் மாசுகேட்டை ஏற்படுத்தின

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிவேகமெடுத்து மக்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டின் நலவாழ்வு கட்டமைப்பின் மீதும் மிக அதிகப்படியான அழுத்தத்தை இது, ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போதிய சிகிச்சை பெற முடியாமல், ஆக்சிஜன் பெற முடியாமல், மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் பெற முடியாமல் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். மே 2, இஞ்ஞாயிறன்று இந்தியா முழுவதும் ஒரே நாளில் 3,69,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது மற்றும், இந்நோயால், நாடு முழுவதும் 3,455 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, குறைந்த காலத்திற்கு திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு, இந்த ஆலை அமைந்துள்ள மீளவட்டானிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும், மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். காரணம், தாமிரம் உருக்கும் தொழிற்சாலைக்காக, 1993ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஆலையில், தாமிரக் கம்பி, கந்தக அமிலம், மற்றும், பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டன. இவை, அப்பகுதியின், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, பெரும் மாசுகேட்டை ஏற்படுத்தின. ஆலையில் இருந்து நச்சு வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையைச் சுற்றி இருந்த மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் போராடியதால், அந்த ஆலை, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குமேல் மூடப்பட்டு இருந்தது. தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் அனுமதி, மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக, தூத்துக்குடி மனித உரிமை ஆர்வலர், XD செல்வராஜ் அவர்கள் தெளிவாக விளக்குகிறார். அப்பாவி மக்களின் நீதிப் போராட்டத்திற்கு, தமிழகத்தின் புதிய அரசு செவிமடுக்கும், குடிமக்களின் ஒருங்கிணைந்த நலவாழ்வலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டும் என நம்புவோம்   

ஆக்சிஜன் பற்றாக்குறையும், ஸ்டெர்லைட் ஆலையும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2021, 14:37