மலேசியாவில் கோவிட்-19 நல்லடக்கம் மலேசியாவில் கோவிட்-19 நல்லடக்கம் 

தொழில் அதிபர்கள், பெருந்தொற்று துயர்களைக் களையுமாறு...

கோவிட்-19 தடுப்பூசிகள், உலக அளவில் சமமாக விநியோகிக்கப்படுவதற்கு, தொழில் அதிபர்கள் உதவவேண்டும் – ஐ.நா. தலைமை பொதுச்செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில், கோவிட்-19 பெருந்தொற்று என்ற சுனாமி உருவாக்கியுள்ள துன்பங்களை அகற்றுவதற்கு, தொழில் அதிபர்கள் உதவுமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மே 27, இவ்வியாழனன்று, உலகத் தொழில் அதிபர்களோடு, இணையம்வழி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இவ்வாறு அழைப்புவிடுத்த கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19 தடுப்பூசிகள், உலக அளவில் சமமாக விநியோகிக்கப்படுவதற்கு உதவுமாறும் கூறியுள்ளார்.

இந்தப் பெருந்தொற்று, உலகளாவிய நிதியமைப்பில், டிரில்லியன் டாலர் கணக்கில் இழப்பை உருவாக்கியுள்ளவேளை, உலகில் 34 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்களை அது பறித்துள்ளது, மற்றும், ஐம்பது கோடிக்கு மேற்பட்ட வேலையிழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது என்று, கூட்டேரஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

இப்போது உலகம் எதிர்கொள்வது, நலவாழ்வு பிரச்சனையை என்பதையும் தாண்டி, சமுதாய மற்றும், பொருளாதார நெருக்கடியாக உள்ளது என்றும், இந்நிலை, மக்களின் வாழ்வாதாரங்கள், தொழில்கள், மற்றும், பொருளாதாரம் ஆகியவற்றில், நீண்டகால எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தொற்றை ஒழிப்பதற்கு, IKEA என்ற அமைப்போடு இணைந்து, ஐ.நா. மேற்கொண்டுள்ள, “ஒன்றுசேர்ந்தால் மட்டுமே” என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

WHO எனப்படும் உலக நலவாழ்வு அமைப்பு, 13 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும், 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, வியத்தகு முறையில் இவை விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும், கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2021, 15:03