உகாண்டாவில் புலம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள சிறார் உகாண்டாவில் புலம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள சிறார் 

வாரம் ஓர் அலசல்: அயலவரை அன்புகூர அழைப்புவிடுக்கும் அவசரகாலம்

நாம் ஏழைகளாக இருக்கலாம், ஆனால், நிச்சயமாக நமக்கு மாண்பு உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

சீனாவில் மருந்துக் கடை ஒன்றிலிருந்து, பத்து வயது சிறுவன் ஒருவன், மருந்துகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல், கடையைவிட்டு வேகமாக ஓடிவந்தான். உடனே கடைக்காரர், பிடியுங்கள் என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவந்து அச்சிறுவனை மடக்கிப் பிடித்தார். இந்த சிறுவயதிலே திருடுகிறாயா என்று சொல்லி, அவனிடமிருந்து, மருந்துகளைப் பறித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவ்விடத்தில் காரிலிருந்து இறங்கிய ஒருவர், ஐயா, அவனை விட்டுவிடுங்கள், என்ன நடந்தது என்று கேட்டார். அச்சிறுவனும், நோயாளியாகிய என் அம்மாவுக்கு மருந்து வாங்கிச் செல்கிறேன், மருந்து வாங்க எங்களிடம் பணம் இல்லை என்று கண்ணீர்விட்டான். உடனே அந்த மனிதர், அவற்றுக்குரிய பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்தார். நன்றி என்று கூறிய அச்சிறுவனிடம், நீ இவ்வாறு செய்யக் கூடாது, நாம் ஏழைகளாக இருக்கலாம், ஆனால், நிச்சயமாக நமக்கு மாண்பு உள்ளது என்று கூறியதோடு,  தன் பையிலிருந்து இன்னும் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து, இதை உன் அம்மாவின் மருத்துவச் செலவுக்கு வைத்துக்கொள், இதோ என் அடையாள அட்டை, உனக்குத் துன்பம் நேர்ந்தால், என்னை வந்து பார் என்று சொல்லிச் சென்றார். அச்சிறுவனும், மாமா, நான் இதை ஒரு நாள் திருப்பித் தருவேன் என்று மகிழ்வோடு சொன்னான். அவரும், நல்லது என்று ஊக்கப்படுத்திவிட்டுச் சென்றார்.

இது நடந்து இருபது ஆண்டுகள் சென்று, இளைஞனாக வளர்ந்திருந்த அச்சிறுவன், ஒருநாள், அந்த நல்ல மனிதர், தனக்குக் கொடுத்திருந்த முகவரியில் அவரைத் தேடிச் சென்றான். அங்குப் போய், நான் இயக்குனர் Dan அவர்களைப் பார்க்கவேண்டும் என்று கூறினான். அந்த இடத்தில் இருந்த காவலாளர், அப்படி யாருமே இங்கு இல்லை என்று சொன்னார். உடனே அந்த இளைஞன், அந்த அடையாள அட்டையைக் காண்பித்தான். ஓ, இவரா, சில ஆண்டுகளுக்குமுன், இவர் இங்கு நிறுவனம் ஒன்றை நடத்தினார். ஆனால் அவர் வஞ்சிக்கப்பட்டுவிட்டார், இப்போது இந்த நிறுவனம் அவருடையது அல்ல என்று காவலாளர் சொன்னார். சரி, இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று அந்த இளைஞன் கேட்க, அவர் தன் பணியாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியத்திற்காக, தன் வாகனத்தையும், வீட்டையும் விற்றுவிட்டார், இப்போது, கடுமையான நோயால் தாக்கப்பட்டுள்ளார் என்று காவலாளி கூறியதோடு, தனக்குத் தெரிந்த அவரது முகவரியையும் எழுதிக்கொடுத்தார். அந்த இளைஞனும் அந்த முகவரியின்படி சென்று டான் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டினான். டான் அவர்களின் தங்கையும், கதவைத் திறந்து, அந்த இளைஞனை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று, படுத்த படுக்கையாய் கிடந்த தன் அண்ணனைக் காட்டினார். அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், மாமா, மாமா என்று அவரை தட்டி எழுப்பினான். அவரிடம் அசைவு ஒன்றும் இல்லை. அவர், கடுமையான நோயால் தாக்கப்பட்டிருப்பதால், செவித்திறனையும் இழந்துவிட்டார், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அவர்களிடம் பணம் இல்லை என்பதை, அவரது தங்கை வழியாக அறிந்துகொண்டான் இளைஞன். திகைத்து நின்ற இளைஞனிடம், அவரது தங்கை, என் அண்ணன் ஏமாற்றுப்பட்டுவிட்டார், அவரது நிறுவனமும் திவாலாகிவிட்டது, எனது அண்ணியும் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார் என்று அழுதார். உடனே அந்த இளைஞன், பத்து இலட்சம் சீனப் பணத்தை எடுத்துக் கொடுத்து, இதை வைத்து அவருக்கு மருத்துவம் பாருங்கள் என்று கூறியதோடு, ஒரு தாளில் எதையோ எழுதி, அவரது அண்ணன் குணமானபின், அதனை அவரிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றான்.  இது நடந்து ஒரு மாதம் சென்று, தன் அண்ணனை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே, அண்ணா, நீ இந்நிலைக்கு வருவதற்கு உனக்கு முன்பொரு நாள் அறிமுகமான ஒருவர்தான் காரணம், அவருக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும் என்று அவரது தங்கை கூறினார். அவர் யார் என்று கேட்டபோது, அந்த இளைஞன் விட்டுச்சென்றபோது கொடுத்த அந்த தாளை, அவரது தங்கை அவரிடம் கொடுத்தார்.

ஹாய் மாமா, இருபது ஆண்டுகளுக்குமுன் நீங்கள் ஒரு சிறுவனின் நோயாளி அம்மாவின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்தீர்கள், நினைவிருக்கிறதா, உங்களது கனிவும், அக்கறையுமே எனது குடும்பத்தைக் காப்பாற்றியது. நீங்கள் ஊக்கப்படுத்திய வார்த்தைகள், ஒரு நல்ல மனிதனாக நான் வளர உதவின, நாம் ஏழைகளாக இருக்கலாம், ஆனால், நிச்சயமாக நமக்கு மாண்பு உள்ளது என்று கூறினீர்கள். இப்போது எனக்குச் சொந்தமாக இரு நிறுவனங்கள் உள்ளன, கவலைப்படாதீர்கள், உங்கள் நோயைக் குணமாக்குங்கள், நான் இருக்கிறேன், உங்களது பழைய நிறுவனத்தை உங்களுக்காக நான் வாங்கியிருக்கிறேன், நீங்கள் குணமானபின், அந்த நிறுவனத்தை நீங்கள்தான் நிர்வகிக்கவேண்டும், விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். அந்த மடலை வாசித்த அந்த நல்ல மனிதர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பரவல், முதல் அலையைவிட அதிகமாக அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் இத்தாலியில் பத்து இலட்சம் பேர் வேலையை இழந்தனர் என்று சொல்லப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்றின் கடும்தாக்கம் அதிகமாக உள்ள பிரேசில் நாட்டின் São Paulo மாநகரில், முதல் நாள் காலை மூன்று மணிக்கெல்லாம் உணவுக்காக, வரிசையில் நிற்கத் தொடங்கும் சேரிவாழ் மக்கள், மறுநாள் காலைவரைக் காத்திருக்கின்றனர். மொத்தத்தில், பிரேசில் நாட்டில், மருத்துவமனைகள், கோவிட்-19 நோயாளிகளால் நிறைந்துள்ளன. உணவுக்காகக் காத்திருக்கும் மக்களின் வரிசைகளும் நீண்டுகொண்டே செல்கின்றன. புதிய புதிய புதைகுழிகள் தோண்டத் தோண்ட, நாடு அநாதரவாய் நிற்கின்றது. உலகில் இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், பிரேசில், இரண்டாவது இடத்தில் உள்ளது என்று பிபிசி ஊடகம் கூறியுள்ளது. உலகெங்கும் வறுமை அதிகரித்து வருவதால், களவும், கொலையும், ஆள்கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், மத்திய கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய உகாண்டா அரசுத்தலைவர் Yoweri Kaguta Museveni அவர்கள், உகாண்டாவில், (1980-1986) உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார்கள், தற்போதைய பெருந்தொற்று காலத்தில், எவ்வாறு அவர்கள் அக்கறையற்று வாழ்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டு, அருமையான உரை ஒன்றை ஆற்றியிருக்கிறார்.

அரசுத்தலைவர் Kaguta Museveni

“கடவுளுக்கு நிறைய வேலை இருக்கின்றது. அவர் இந்த உகாண்டாவில் வாழ்கின்ற முட்டாள்களை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் பராமரிக்கவேண்டும், அக்காலப் போர்ச் சூழல்களில், யாரும் எவரையும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று கூறவில்லை. ஆனால் நீங்களாகவே வீட்டுக்குள் இருந்தீர்கள். போர் முடியும்வரை மறைந்து வாழ்ந்தீர்கள். போர்க் காலத்தில், உங்களது சுதந்திரத்தை நீங்கள் வலியுறுத்தாமல், நீங்களாகவே விட்டுக்கொடுத்தீர்கள். பசி என்று புகார் கூறாமல், அதைத் தாங்கிக்கொண்டீர்கள். தொழில் துவங்கவேண்டும் என்று விவாதிக்காமல், கடைகளை மூடிவிட்டு, போர் முடிவதற்காகச் செபித்தீர்கள். போர்க் காலத்தில், உங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கவலைப்படவில்லை, அதற்கு மாறாக, அரசு, பிள்ளைகளை, கட்டாயமாக படைவீரர்களாகச் சேர்க்கக் கூடாது, பள்ளி வளாகங்கள், இராணுவக் கிடங்குகளாக மாறக் கூடாது என்று செபித்தீர்கள்.

கொரோனா பெருந்தொற்று

ஆனால் தற்போது உலகம், துப்பாக்கிகள் மற்றும், குண்டுகள் இல்லாத, மனிதப் படைவீரர்கள் இல்லாத, மனிதக் கருணையே இல்லாத, ஒரு போர்ச் சூழலில் உள்ளது. எல்லைகள் இல்லாத, இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லாத, எந்த புனித இடங்களையும் விட்டுவைக்காத ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரிலுள்ள இராணுவத்திற்கு இரக்கமே இல்லை. இந்தப் போர், சிறாரை, பெண்களை, வழிபாட்டுத்தலங்களை, யாரையுமே மதிக்கவில்லை. அரசு மாற்றத்தைப் பற்றியோ,  பூமிக்கடியிலுள்ள வளமான கனிமங்கள் பற்றியோ அதற்கு அக்கறையில்லை. அது கண்ணுக்குத் தெரியாத, கொடூரமான திறமையுள்ள, இராணுவமாக உள்ளது. மரணத்தை அறுவடை செய்வதே அதன் ஒரே திட்டம். இந்த உலகை ஒரு பெரிய மரணப் பூமியாக மாற்றுவதிலே அது திருப்தி கொண்டுள்ளது. அது தன் இலட்சியத்தை அடையும் திறமையைக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த உலகில் எல்லா நாட்டிலும் தன் அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. அதன் இயக்கம், எந்தப் போர் ஒப்பந்தத்தாலும் ஆளப்படவில்லை. சுருங்கச்சொன்னால் அதுதான் கொரோனா பெருந்தொற்று. இருந்தபோதிலும், கொரோனா பெருந்தொற்று என்ற இராணுவத்திற்கு ஒரு பலவீனம் உள்ளது, மற்றும், நாம் அதனைத் தோற்கடிக்க முடியும். அதற்கு, நம் அனைவரின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு, நன்னடத்தை, மற்றும், பொறுமை ஆகியவை தேவை. தன்னையே அன்புகூர்கின்ற அதனை, யாரும் நேருக்கு நேர் சவால் விடும்போது அது செழித்தோங்குகிறது. ஆயினும், விலகியிருத்தலை சமுதாயமாக அனைவரும் கடைப்பிடிக்கும்போது, அது நம்மிடம் சரணடைகின்றது. தனிப்பட்ட நபரின் சுத்தத்திற்குமுன் அது அடிபணிகிறது. ஒவ்வொருவரும் உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்கும்போது, அது ஆதரவற்று இருக்கிறது. எனவே உணவுக்காக அழுகின்ற நேரம் இதுவல்ல. அதிகாரிகள் கூறும் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைப் பின்பற்றுங்கள். பொறுமையைக் கடைப்பிடித்து கோவிட்-19ஐ முடக்கிப்போடுங்கள். நாம் நமக்கு அடுத்திருப்பவர்களின் பாதுகாவலர்களாகச் செயல்படுவோம். இவ்வாறு செயல்பட்டால், சுதந்திரம், தொழில் மற்றும், சமுதாய வாழ்வை, நாம் மீண்டும் பெறுவோம். பெருந்தொற்று அவசரகாலத்தின் மத்தியில், மற்றவரை அன்புகூர்வோம். மற்றும், பணிபுரிவோம்.

ஏறக்குறைய 14 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடம் அளித்துள்ள, உகாண்டா அரசுத்தலைவர் Museveni அவர்களின் உரை நமக்குமே ஏற்றது. கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் இக்காலக்கட்டத்தில், சுயகட்டுப்பாடு மற்றும், நலவாழ்வு விதிமுறைகளைக் கடைப்பிடித்து அக்கிருமியிலிருந்து நம்மையும், பிறரையும் பாதுகாப்போம். தேவையில் இருப்போருக்கு, உதவும் கரங்களாக, பிறரன்பில் வளர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2021, 14:42