ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் 

பெருந்தொற்று நெருக்கடிகளைக் களைய, நாடுகளின் ஒத்துழைப்புக்கு...

தற்போது உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நாடுகளின் ஒன்றிணைந்த, உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுவதை, கோவிட் 19 பெருந்தொற்று தெளிவாக உணர்த்துகின்றது – ஐ.நா.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“அமைதிக்காக, பன்னாட்டு உறவுகள், மற்றும், அரசியல் செயலாண்மைத்திறன் உலக நாள்” கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய, ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, நாம் அனைவரும், ஒருவருக்கொருவர், எவ்வளவு தூரம், மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 24, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக நாளை முன்னிட்டு, ஏப்ரல் 23, இவ்வெள்ளியன்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நாடுகளின் ஒன்றிணைந்த, உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுவதை, கோவிட் 19 பெருந்தொற்று தெளிவாக உணர்த்துகின்றது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பெருந்தொற்று தடுப்பூசிகள், உலகளாவிய பொதுநலனுக்குரியவை என்ற எண்ணத்தில், அவை சமமாக விநியோகிக்கப்படுவது முதல், மனித சமுதாயம் முழுவதற்கும் தேவைப்படும் நலன்களை, நாடுகள், எல்லைகளைக் கடந்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம் என்றும், கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.     

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தால் உலக அளவில் ஏற்பட்டுள்ள, காற்று, மற்றும், தண்ணீர் மாசுகேடு, ஒரேநேரத்தில் பேரழிவுகளைக் கொணரும் ஆயுதங்களின் பரவல், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள், மற்றும், விதிமுறைகளை மதிக்காமல் இடம்பெறும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி போன்ற விவகாரங்களைக் களைவதற்கும், நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று, கூட்டேரஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.   

உலக மக்களும், பூமிக்கோளமும் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து அர்ப்பணிக்க, “அமைதிக்காக, பன்னாட்டு உறவுகள், மற்றும், அரசியல் செயலாண்மைத்திறன் உலக நாளில்” உறுதி எடுப்போம் என, அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார், ஐ.நா. தலைமை பொதுச்செயலர் கூட்டேரஸ். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2021, 15:05