தேடுதல்

இந்தியாவில் தண்ணீர் நிலவரம் இந்தியாவில் தண்ணீர் நிலவரம் 

வாரம் ஓர் அலசல்: உலக தண்ணீர் நாள், மார்ச் 22

உலகில் போர்களில் உயிரிழப்பவர்களைவிட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்

மேரி தெரேசா: வத்திக்கான்

போதி மரம் என்பது, அரச மரம். அரச மரத்துக் காற்று, வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும். இந்தியாவின் தேசிய மரம், ஆலமரம். அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் போதனை செய்த இடம், ஓர் ஆல மரத்தடி. நிழல் தருவதற்கு அருமையான மரம், புங்கைமரம். வேப்ப மரக் காற்று உடலுக்கு நலம் தருவது. வாகை மரத்தழை, வாயு போக்கும். மரங்களில் மணம் அதிகம் தருவது சந்தன மரம். அதிகம் களவு போவதும் அந்த மரம்தான். பல் குச்சிக்கு ஆல விழுது சிறந்தது. மிக மிகச் சிறிய ஆல விதையானது, ஒரு படை தங்குவதற்கு நிழல் தரக்கூடியது. மனிதர் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றனர். ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டர்களின் விலை, 2,100 ரூபாய், இந்த சிலிண்டர்களுக்கு ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்குமேல் செலவாகிறது. ஒரு மனிதரின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால், ஐந்து கோடி ரூபாய்க்குமேல், அந்த சிலிண்டர்களுக்குச் செலவாகிறது. இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த, சுவாசக் காற்றை, மரங்கள், நமக்காக இலவசமாகத் தருகின்றன. இயற்கை மனிதருக்குத் தந்த கருவூலம் மரங்கள். எனவே, மரங்கள் என்னும் அட்சயபாத்திரத்தை அழிக்கவிடாமல், தடுத்துக் காக்க உறுதி எடுப்போம். மரம் நடுவோம், மழை பெறுவோம். மரங்களை பற்றிய அறிய தகவல் என்று, வாட்சப் ஊடகத்தில் ஒரு தகவல் பரிமாறப்பட்டிருந்தது. தன்னார்வலர் அமைப்புகள், மரம் நடுவோம், மழை பெறுவோம் என்ற விருதுவாக்குடன், மரங்களை நட்டு வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகின்றன.

பசுமை நங்கநல்லூர் தன்னார்வலர்கள்

“பசுமை நங்கநல்லூர் அமைப்பின் தன்னார்வலர்கள்” என்ற குழு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நங்கநல்லூரை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவில், எட்டு வயது முதல், எழுபத்தைந்து வயது வரை, ஏறத்தாழ 200 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள், பள்ளி, அலுவலக நேரம் போக, ஓய்வு நேரத்தில், வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டுவாகை போன்ற, 400-க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதோடு, நங்கவல்லூரில் பராமரிப்பின்றி விடப்பட்ட பழைய மரங்களையும் சேர்த்து தற்போது, அவர்கள் 700-க்கும் மேற்பட்ட மரங்களைப் பராமரித்து வருகின்றனர். எந்தெந்த மரங்களின் வேர்கள், எவ்வளவு ஆழமாகவும், அகலமாகவும் பரவும் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, பின்னர், அவர்கள், வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு மரக்கன்றின் குணாதிசயங்களை எடுத்துக்கூறி, மரங்கள் வளர்க்க, மக்களை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். அதோடு, பிறந்தநாள், திருமண நாள் போன்ற, வாழ்க்கையின் முக்கிய நாள்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு வியப்பு கொடுக்கும் விதமாக, அவர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியபின், அவரே தன் கைப்பட மரம் ஒன்றை நடுவதற்கு ஊக்கப்படுத்தி, நட வைத்தும் வருகின்றனர். மரம் நடுவது, அதனைப் பாதுகாப்பது என்பது, எங்கள் கடமை மட்டும் கிடையாது, உயிருடன் வாழும் ஒவ்வொருவரின் கடமை" என்றும், நங்கநல்லூர் தன்னார்வலர்கள் சொல்லிவருகின்றனர்.

பங்களாதேஷில் 4 இலட்சம் மரக்கன்றுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமித்தாயை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு அழைப்புவிடுத்து, 2015ம் ஆண்டில் வெளியிட்ட, “இறைவா உமக்கே புகழ்” (Laudato Si') என்ற திருமடலின் ஐந்தாம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாகவும், பங்களாதேஷில், மார்ச் 26, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் அந்நாட்டின் ஐம்பதாவது சுதந்திர நாள், அந்நாட்டு தேசத்தந்தை, Sheikh Mujibur Rahman (17,மார்ச்,1920–15ஆக.,1975), அவர்களின் நூறாவது பிறந்த நாள் ஆகிய நிகழ்வுகளையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை, நாடு முழுவதும் நான்கு இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை இம்மாதம் 14ம் தேதி ஆரம்பித்துள்ளது. பங்களாதேஷ் நாட்டையும், இந்த மண்ணையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அன்புகூர்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டில் உள்ள நான்கு இலட்சம் கத்தோலிக்கரும், ஆளுக்கொரு மரம் நடவேண்டும் என, அந்நாட்டு கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள் கேட்டுகொண்டுள்ளார். இந்த திட்டத்தின்கீழ் நடப்படுபவை, பெரும்பான்மையாக, பழ மரங்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக தண்ணீர் நாள், திருத்தந்தை பிரான்சிஸ்

 

மார்ச் 22, இத்திங்கள் உலக தண்ணீர் நாள். “தண்ணீரின் மதிப்பு, அதன் விலையையவிட மிக மிக மேலானது” என்ற தலைப்பில், இந்த உலக நாள், இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது. 1993ம் ஆண்டிலிருந்து சிறப்பிக்கப்பட்டுவரும், உலக தண்ணீர் நாள், தண்ணீரின் உண்மையான மதிப்பு பற்றி சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 21, இஞ்ஞாயிறு நண்பகலில் வழங்கிய மூவேளை செப உரைக்குப்பின், இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட, உலக தண்ணீர் நாள் பற்றியும் குறிப்பிட்டார். நம்பிக்கையாளர்களாகிய நமக்கு, ‘சகோதரி’ தண்ணீர், விற்பனை சரக்கு அல்ல, அது, வாழ்வின் ஆதாரம், மற்றும், நலவாழ்வின் உலகளாவிய அடையாளம். இந்த வியத்தகு, மற்றும், எதனாலும் ஈடுசெய்ய முடியாத, கடவுளின் கொடையாகிய தண்ணீரின் மதிப்பு பற்றி சிந்திப்போம். ஏராளமான நம் சகோதரர், சகோதரிகள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். எனவே சுத்தமான குடிநீரும், நலவாழ்வும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இதற்காகப் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி. இவர்கள் தங்களின் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிக்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

"WASH" திட்டம்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், "WASH" என்ற திட்டத்தின் வழியாக, சுத்தமான குடிநீர், நலவாழ்வு வசதிகள் போன்றவை கிடைப்பதற்காகப் பணியாற்றி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றும், மற்ற நோய்களும் பரவாமல் தடுப்பதற்கு, சுத்தமான நீர் கிடைப்பதற்கு வழியமைப்பது இன்றியமையாதது என்றும், இத்திருப்பீட அவை கூறியுள்ளது. "தண்ணீரை மதிப்போம்" என்ற தலைப்பில், மார்ச் 22 இத்திங்கள் முதல், 26, இவ்வெள்ளி வரை, மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றையும் இத்திருப்பீட அவை நடத்துகிறது.

நீரின் முக்கியத்துவம்

இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவரும், நீரின்றி அமையாது இவ்வுல‌கு என்று கூறியுள்ளார். நாம் வாழும் இந்த உலகத்தில் எழுபது விழுக்காடு தண்ணீர்தான். இந்த நீர் பரப்பளவில் 97.5 விழுக்காடு கடல் நீர். மீதமுள்ள 2.5 விழுக்காடு நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. இந்த தண்ணீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மனிதரின் உடலிலும், ஏறக்குறைய 75 விழுக்காடு தண்ணீர், அதாவது, ஒரு மனிதரின் உடலில் 42 லிட்டர் தண்ணீர் உள்ளது. இதில் 2.7 லிட்டர் குறைந்தாலும், டிஹைரேஷன், எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.

பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கிய மூலப்பொருளும் தண்ணீர்தான்.  நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும், கழிவை, கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் தண்ணீர் அவசியம். அதேபோல் நம் சுற்றுப்புறம் தூய்மையுடன் அமையவும் தண்ணீர் இன்றியமையாதது. உலகில் மூன்றில் ஒருவர், பாதுகாப்பற்ற குடிநீரைப் பருகுகிறார். 2040ம் ஆண்டில் மின்சாரத்தின் தேவை 25 விழுக்காடு அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் ஐம்பது விழுக்காடு அதிகரிக்கும். உலகளவில், வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறையை, ஐம்பது விழுக்காடு தடுக்க முடியும். மனிதர் ஒவ்வோர் ஆண்டும் 6.400 கன கிலோ மீட்டர் அளவு நீரைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் எழுபது விழுக்காடு வேளாண்மைக்கும், இருபது விழுக்காடு தொழிற்சாலைகளுக்கும், பத்து விழுக்காடு வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் போர்களில் உயிரிழப்பவர்களைவிட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். உலகில் எண்பது விழுக்காட்டு நீர், மறுசுழற்சி செய்யப்படாமல் வீணாகிறது. 2050ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 940 கோடிக்கும், 1,020 கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் இருக்கும். காலநிலை மாற்றம், சுத்தமற்ற தண்ணீர் விநியோகம் போன்றவற்றால், அந்த ஆண்டுக்குள், உலகில், 500 கோடிக்கு மேற்பட்டோர், கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வர். கடந்த நூறு ஆண்டுகளில் தண்ணீரின் தேவை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒவ்வோர் ஆண்டும் ஒரு விழுக்காடு வீதம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக தண்ணீர் அமைப்பு கூறியுள்ளது. மேலும், வெப்பநிலை உயர்வு, பருவநிலை மாற்றம், காடுகளின் பரப்பளவு குறைதல், மணல் கொள்ளை போன்ற பல்வேறு காரணங்களால், நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்துவிட்டது.

எனவே, நம் அன்றாட வாழ்வில், தண்ணீர் எவ்வாறெல்லாம் வீணாகிறது, அதை எவ்வாறு சேமிக்கலாம் என சிந்திப்போம். தண்ணீர் சேமிப்புக்கு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், நம் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொள்கிறோம் என்று அர்த்தம். தண்ணீர் பாதுகாப்பை முறையாகப் பின்பற்றுவதன் வழியாக, உலகம் வெப்பமடைவதையும் குறைக்க முடியும். தண்ணீர் தாராளமாக கிடைக்கின்றது என்பதற்காக, அதனை வீணாக்குவது, நம் சகோதரி தண்ணீருக்குச் செய்யும் துரோகமாகும். பணப் பேராசையால் காடுகளை அழிப்பது, அடுத்த தலைமுறையின் நலவாழ்வுக்குச் செய்யும் பாதகமாகும். மழை, கானல் நீரானதற்கு மரத்தை வெட்டிய நம் பிழையே காரணம். எனவே, தண்ணீர்த் தேவையை. மறக்காமல், பொதுநலத்தை... மண்நீரை.. காத்திட, தண்ணீராய் ஒன்றுபட்டு செயல்படுவோம். ம‌லையில் பிற‌ந்து, ந‌தியில் ஓடி, க‌ட‌லில் ச‌ங்க‌மிக்கும் தண்ணீர், ம‌னித‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளில் ச‌ங்க‌மிப்ப‌து எப்போது?  உலகின் சுழற்சிக்கும், உயிர்களின் வளர்ச்சிக்கும் ஆதாரமான தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2021, 14:43