யோர்தான் ஆற்றில் பெரு நாட்டு திருப்பயணிகள் யோர்தான் ஆற்றில் பெரு நாட்டு திருப்பயணிகள்  

வாரம் ஓர் அலசல்: கொடுக்கும் கரங்கள் உயரும்

வாழ்க்கை என்பது, பெறுவது மட்டும் அல்ல, கொடுப்பதும் ஆகும். நாம் எல்லாரும் கலிலேயக் கடல்போன்று வாழவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

சாக்கடல், கலிலேயக் கடல். இவையிரண்டும், இயேசு கிறிஸ்து வாழ்ந்து போதித்து, இறந்து உயிர்த்த புனித பூமியில் அமைந்துள்ளன. சாக்கடல் அல்லது, இறந்த கடல், அல்லது, உப்புக் கடல் என்னும் நீர்நிலை, தென்மேற்கு ஆசியாவில், மேற்குக் கரை (West Bank), இஸ்ரேல், மற்றும், ஜோர்டன் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட எல்லையில் அமைந்துள்ளது. உண்மையில், சாக்கடல், ஓர் ஏரியாகும். அதன் நீரில் எந்த அளவுக்கு உப்புத்தன்மை நிறைந்திருக்கின்றது என்றால், அதில் மனிதர்கள் மிக எளிதாக மிதக்கலாம், மிதந்துகொண்டே நூல்கள் வாசிக்கலாம். பொதுவாக, பெருங்கடல் நீரின் உப்பின் அளவைவிட சாக்கடல் நீரின் உப்பின் அளவு ஏறத்தாழ பத்து மடங்கு அதிகம். சாக்கடல் நீர், 35 விழுக்காடு உப்புத்தன்மை கொண்டது. அதனால் சாக்கடலில், மீன்களோ, கடல் விலங்குகளோ, எந்த உயிரினங்களும், ஏன் தாவரங்களுமே வாழ்வதில்லை. இதனாலே இதற்கு இறந்த கடல், சாக்கடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மற்றொன்று கலிலேயக் கடல் (மத்.4:18). புதிய ஏற்பாட்டு நூல்களில், இது, ”திபேரியக் கடல்” (யோவா.6:1) என்றும், கெனசரேத்து ஏரி (லூக்.5:1) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளில், இது, கினரேத்துக் கடல் (யோசுவா 13:27) என்ற பெயரில் உள்ளது. இது, இஸ்ரயேல் நாட்டில், நல்ல தண்ணீரைக் கொண்டுள்ள ஏரிகளுள் மிகப் பெரியதாகும். சாக்கடலும், அதற்கு வடக்கே அமைந்துள்ள கலிலேயக் கடலும், யோர்தான் ஆற்றிலிருந்தே தண்ணீரைப் பெறுகின்றன. ஆயினும், இந்த இரு கடல்களும் மிகப்பெரிய அளவில் மாறுபட்ட குணங்களைக் கொண்டிருக்கின்றன. கலிலேயக் கடல், சாக்கடல் போன்று இல்லாமல், வளமையான கடல்வாழ்வைக் கொண்டுள்ளது. இந்த கடல், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் உதவியாக இருந்துவந்துள்ளது. மீன்பிடித்தலில், 230 படகுகள் ஈடுபட்டிருந்ததாக, முதல் நூற்றாண்டு வரலாற்றாசிரியர் Flavius Josephus அவர்கள் கூறியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட மீன் வகைகளைக் கொண்ட இந்த கடலில் காணப்படும் திலாப்பியா மீனுக்கு, தூய பேதுரு மீன் (St. Peter's Fish) என்றும் சிறப்புப் பெயர் உண்டு.

சாக்கடல், கலிலேயக் கடல்

ஒரே பகுதியில் அமைந்து, ஒரே ஆற்றின் தண்ணீரைப் பெறும் ஒரு கடல், வாழ்வை முழுமையாகவும், மற்றொரு கடல் இறந்த வாழ்வையும் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் என்ன? யோர்தான் ஆறு, முதலில் கலிலேயக் கடலில் பாய்ந்து, பின்னர் அங்கிருந்து வெளியேறி, சாக்கடலில் சங்கமமாகின்றது. யோர்தான் ஆற்று நீர், கலிலேயக் கடலில் நுழைந்து, அங்கிருந்து வெளியேறி விடுகிறது. இது, கலிலேயக் கடல் நீரை வளமுள்ளதாக, நலமானதாக, கடல்சார்ந்த வாழ்வுக்கு ஆதாரமாக அமைக்கின்றது. அதேநேரம், கடல் மட்டத்திற்கு 423 மீட்டர் கீழே அமைந்திருக்கிற சாக்கடலில் பாய்கின்ற யோர்தான் ஆற்றுத் தண்ணீர், அங்கிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. சாக்கடலிலிருந்து ஒவ்வொரு நாளும், எழுபது இலட்சம் டன்களுக்கு மேற்பட்ட தண்ணீர் ஆவியாகின்றது என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு, அந்நிகழ்வு, அந்த நீரை உப்புத்தன்மை கொண்டதாகவும், எந்தவித கடல்சார்ந்த வாழ்வுக்குத் தகுதியற்றதாகவும் ஆக்குகின்றது. யோர்தான் ஆற்றிலிருந்து தண்ணீரைப் பெறுகின்ற சாக்கடல், அந்த தண்ணீரை தனக்கே தக்கவைத்துக் கொள்கின்றது. அதனால் அந்தக் கடலில் வாழ்வே இல்லை. அது செத்த கடலாக உள்ளது.     

Frank Mihalic என்பவர், கதைகள் (Frank Mihalic, Stories) என்ற தன் நூலில், இரு கடல்களின் கதை என்ற தலைப்பில், இந்தக் கடல்கள், பற்றிய தன் சிந்தனைகளை, இவ்வாறு பதிவுசெய்துள்ளார். வாழ்க்கை என்பது, பெறுவது மட்டும் அல்ல, கொடுப்பதும் ஆகும். நாம் எல்லாரும் கலிலேயக் கடல்போன்று வாழவேண்டும். பொருளையும் பணத்தையும், அறிவையும், அன்பையும், மதிப்பையும் பெறும் அதிஷ்டசாலிகளாக நாம் இருக்கலாம். ஆனால் நம்மிடமிருக்கும் அவற்றைக் கொடுப்பதற்கு, பகிர்ந்துகொள்வதற்கு, நாம் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சாக்கடல் போன்று, நம் வாழ்வு முடிந்துவிடும். நம்மிடம் இருக்கும் செல்வமும், மதிப்பும், அன்பும், அறிவும், ஆகிய அனைத்தும், சாக்கடல் தண்ணீர் போன்று ஆவியாகி விடும். இறுதியில் நம் வாழ்வும் பெருந்தோல்வியிலேதான் முடியும்.

நம் ஒவ்வொருவரின் தேவைகள், வித்தியாசப்படலாம், சிலருக்கு பணம், சிலருக்கு அன்பு, சிலருக்கு ஆதரவான சொற்கள், சிலருக்கு அருகாமை.. குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், ஒவ்வொருவரின் தேவைகள் மாறுபடலாம். ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் இன்னல்களின் அளவும் மாறுபடலாம். எனினும் இந்த இரு கடல்கள் கற்றுத்தரும் பாடம் எல்லாருக்குமே பொருந்தும். “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்…” (எபி.13:5) என்று வேதம் சொல்கிறது. கடவுள் நம் தேவைகளை நிறைவேற்றும்போது, அவற்றை, தேவையில் இருக்கும் மற்றவருக்கு கொடுக்கவேண்டும் என்பதை நாம் மறக்கக் கூடாது. கலிலேயக் கடல்போன்று, கொடுத்து வாழும்போது, நாம் வளங்களால் தொடர்ந்து ஆசிர்வதிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம். 

மும்பை ஆட்டோ ஓட்டுனர் தேஷ்ராஜ்

மும்பை மாநகரில், ஆட்டோ ஓட்டி, குடும்பத்தைக் காப்பாற்றிவரும் தேஷ்ராஜ் எனப்படும் முதியவர், தன் பேத்தியின் படிப்புக்காக, வீட்டை விற்று, ஆட்டோவிலே வாழ்வை நடத்தி வருகிறார் என்ற செய்தி, விகடன் இதழில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் ஒருவர், திடீரென கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், பின்னர் ஒருவாரம் கழித்து பிணமாக மீட்கப்பட்டார். தேஷ்ராஜ் அவர்கள், மகன் இறந்த அடுத்த நாளே, வேறு வழியில்லாமல், ஆட்டோ எடுத்துக்கொண்டு பிழைப்பை பார்க்கச் சென்றார். ஆனால் அவரது இரண்டாவது மகனும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தனது மருமகள், மற்றும், நான்கு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தேஷ்ராஜுக்கு ஏற்பட்டது. அவர், காலையில் 6 மணிக்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தால், இரவு 11 அல்லது, 12 மணிவரை ஆட்டோ ஓட்டுவார்.

தேஷ்ராஜ் அவர்களது மூத்த பேத்தி 12வது வகுப்பில் 80 விழுக்காடு மதிப்பெண் எடுத்து, பி.எட் படிக்க டெல்லி செல்லவேண்டும் என்று சொன்னபோது, அவளது ஆசையை நிறைவேற்ற அவர் முடிவு செய்தார். இதற்காக அவர், தனது ஒரே சொந்த வீட்டையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை படிப்புச் செலவுக்கு கொடுத்தார். வீட்டை விற்றுவிட்டதால் மும்பையில் வாழ வீடு இல்லை. எனவே அவரது மனைவி, மருமகள் மற்றும், இதரப் பேரக்குழந்தைகளை, அவரது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் இவர், ஆட்டோவிலே சாப்பிட்டுக்கொண்டு, அதிலே உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தில் அந்த பேத்திதான் முதல் பட்டதாரி. அவள் படித்து முடிக்கும்போது, அன்றைய நாளில் அனைவரையும் ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்வேன்" என்று தேஷ்ராஜ் அவர்கள், மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

தேஷ்ராஜ் அவர்களின் வாழ்க்கை பற்றிய செய்தி சமுதாய வலைத்தளம் ஒன்றில் வெளியானதும், குஞ்சன் ராட்டி என்பவர், உடனடியாக, இணையதளத்தில் நிதி திரட்டினார். அந்த முயற்சிக்கு, 276 பேர் வழியாக, 5.3 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. மும்பை மக்களின் இந்த பேருதவியைக் கண்டு கண்கலங்கும் தேஷ்ராஜ் அவர்கள், இந்த தொகையை வைத்து மற்ற பேத்திகளையும் படிக்கவைக்க தீர்மானித்துள்ளார். தேஷ்ராஜ் அவர்கள், மட்டுமல்லாது, எத்தனையோ பேர், மும்பையிலும், மற்ற நகரங்களிலும், ஆட்டோ மற்றும், வாடகை காரில்தான் இரவு நேரத்தில் தங்களது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கலிலேயக் கடல்போன்று, தேஷ்ராஜ் அவர்களுக்கு உதவிய நல்உள்ளங்களை வாழ்த்துவோம்.

சுவாமிஜி, அப்துல் கலாம்

ஒருமுறை, சுவாமிஜி ஒருவர், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம், தாங்கள் எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலும், சுறுசுறுப்போடு, உயிர்த்துடிப்போடு காணப்படுகிறீர்கள், செயல்படுகிறீர்கள், அதற்கு காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு கலாம் அவர்கள், நான் முதல் மாடியிருந்து கீழ்தளத்திற்கு லிப்ட்டில் வரும்போது, என்னால் மற்றவருக்கு என்ன கொடுக்க முடியும் என்று சிந்திப்பேன். நான் ஒரு குழந்தையை பார்க்கும்போது, ஒரு சாதுவைச் சந்திக்கும்போது, இவ்வாறு ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, என்னால் எதைக் கொடுக்க முடியும் என்பது பற்றியே சிந்திப்பேன், அதுவே என்னை எப்போதும் இளமைத்துடிப்போடு வைத்திருக்கின்றது என்று கூறினார்.

இன்னொருமுறை கலாம் அவர்கள், அதே சுவாமிஜி அவர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, ஏறத்தாழ 40 ஊடகவியலாளர்கள் கலாம் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டனர். அப்போது கலாம் அவர்கள், சரி, உங்களது புகைப்பட கருவிகள், பேனாக்கள், தாள்கள் அனைத்தையும் கீழே வைத்துவிட்டு, நான் சொல்வதைக் கேளுங்கள், நான் உங்களுக்கு இலவச பங்குதாரர் பணியை வழங்க விரும்புகிறேன் என்று கூறினார். இதைக் கேட்ட ஊடகவியலாளர்கள் அர்த்தம் புரியாமல் முழித்தனர். அப்போது கலாம் அவர்கள், நாட்டின் முன்னேற்றத்தில் பங்குதாரராக ஆகுங்கள், இல்லத்தின், குடும்ப உறுப்பினர்களின், உடன்பணியாளர்களின், தேவையில் இருப்போரின்... இவ்வாறு  அனைவரின் வளர்ச்சியில் பங்குதாரராக ஆகுங்கள் என்று கூறினார். பின்னர், கலாம் அவர்களை, புகைப்படம் எடுக்க விரும்பிய ஊடகவியலாளர்கள், சார், கொஞ்சம் சிரியுங்கள் என்று கேட்டதற்கு, அவர், உங்கள் படங்கள் மற்றும், எழுத்துக்களால், நாட்டை புன்னைக புரிய வையுங்கள் என்று கூறினார்.

மற்றவரிடமிருந்து எதைப் பெறுவேன், எதைப்பெறுவேன் என்ற சிந்தனையில் எந்நேரமும் மூழ்காமல், என்னால் மற்றவரை எவ்வாறு புன்னகையில் வாழ வைக்க முடியும், மற்றவருக்கு என்னால் எதைக் கொடுக்க முடியும் என்று சிந்திப்போம்.  கொடுத்து வாழ்வோம். உண்மையில் கொடுக்கும் கரங்கள் உயரும். உழைக்கும் கரங்கள் வலுக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2021, 15:04