பொங்கல் தயாரிக்கப் பயன்படும் உணவுப் பொருள்கள் பொங்கல் தயாரிக்கப் பயன்படும் உணவுப் பொருள்கள் 

பொங்கல் திருநாள் சிறப்பு செய்தி

பொங்கல் திருநாள், மனிதர்களும் கால்நடைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கும் திருநாள். மனிதன் சார்ந்து வாழ்பவன் என்ற தத்துவத்தை இங்கே காணமுடிகின்றது.

மேரி தெரேசா: வத்திக்கான்

வீரத்தமிழர்களின் விழா, மனித பண்பாட்டின் விழா, உழவரின் உழைப்புக்கு உயிர்தரும் விழா, எந்தவிதமான புராணங்களும் கதைகளும் இல்லாத விழா. நம்முடைய முன்னோர்களின் அற்புதமான அனுபவப் படைப்பு விழா, மண்ணோடு உயிர்களோடு நமது வாழ்க்கையோடு இரண்டரக் கலந்த விழா என்று, பொங்கல் திருநாள் சிறப்பு செய்தி வழங்குகிறார், அருள்பணி பெஞ்சமின், திருச்சி மறைமாவட்டம்.

பொங்கல் திருநாள் சிறப்பு செய்தி

பொங்கல் திருநாள்: அருள்பணி பெஞ்சமின், திருச்சி மறைமாவட்டம்

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கேற்ப உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் இணைந்து கொண்டாடக்கூடிய ஒரு விழாதான் இந்த பொங்கல் திருநாள். அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வத்திக்கான் வானொலியின் சார்பாக இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • பொங்கல் வீரத்தமிழர்களின் விழா
  • மனித பண்பாட்டின் விழா
  • உழவரின் உழைப்புக்கு உயிர் தரும் விழா
  • எந்தவிதமான புராணங்களும் கதைகளும் இல்லாத விழா.
  • நம்முடைய முன்னோர்களின் அற்புதமான அனுபவப் படைப்பு விழா
  • மண்ணோடு உயிர்களோடு நமது வாழ்க்கையோடு இரண்டரக் கலந்த விழா.

உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பாரம்பரிய உடை உடுத்தி பொங்கல் பொங்கி பகிர்ந்துண்டு மகிழும் விழாதான் இந்த பொங்கல் திருநாள். நான்கு நாள் கொண்டாடக்கூடிய இந்த பண்டிகை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு முத்தான காரியங்களை எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது.

1. தூய்மையின் திருநாள்

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் வரிகள் நம்மை தூய்மைக்கு அழைக்கின்றது. வீட்டில் தேங்கி கிடக்கும் குப்கைகள் தேவையற்ற பொருட்கள் போன்றவற்றை தீயில் இட்டு கொழுத்தி வீட்டிற்கு வண்ணம் பூசி புதுப்பொழிவு பெறவேண்டிய நாள் இந்த முதல் நாள். வீடு மட்டுமல்ல வீட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய தத்துவமாக விளங்குகின்றது. கொரோனா தொற்று ஏற்பட்ட உடனே நம்முடைய கை கால் முகத்தை அடிக்கடி நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால் வெளித்தோற்றத்தைவிட நம்முடைய உள்ளத்தில் புதைத்து வைத்திருக்கக் கூடிய தீய எண்ணங்களை குப்பைகளை அகற்றி, உலகத்தில் உள்ள எல்லோரையும் சகோதர சகோதரிகளாக ஏற்க நம்மை அழைக்கின்ற நாள். தூய்மை இந்தியா என்பது வெளி அடையாளம். தூய எண்ணத்தோடு வாழ்வேன் என்று உறுதியேற்பதுதான் உண்மையான ஆன்மீகத்தின் உறுதிப்பாடு. உங்கள் தந்தை தூயவராக இருப்பதுபோல நீங்களும் தூய்மை உள்ளவராக இருங்கள்.

  • 2. நம்பிக்கையின் திருநாள்
  • தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
  • தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
  • ஆடியிலே வெதை வெதச்சோம் தங்கமே தங்கம்
  • ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
  • கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
  • கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

இந்த பாடல் வரிகள் மனிதனுக்குள்ளே நம்பிக்கையை தூண்டுகின்றது. இந்த புதிய ஆண்டு புதிய நாள் மனித வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. தமிழ் ஆண்டின் முதல் நாளாகிய தை திங்களான இன்று நிலத்திலிருந்து கிடைத்த புதிய அரிசியை புது பானையில் இட்டு பொங்கல் செய்து அதை இனிமையான கரும்பு வாழைப்பழம் போன்றவைகளோடு நம் அன்பு உள்ளங்களுக்கு இன்முகத்தோடு பகிருகின்றபோது ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஏற்படக்கூடிய நம்பிக்கை பொங்கலைப் போல பொங்கி வழிய வேண்டும். இந்த உலகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை உழவு அதைச் செய்கின்ற உழவர்கள். இவர்கள் தங்களது அயராத உழைப்பினாலும் அர்ப்பணத்தினாலும் இந்த உலகத்திற்கு உணவு கொடுக்கின்றார்கள். இவர்கள் நமக்கான உணவை உறுதிப்படுத்துவதனால்தான் நாம் நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் நன்றாக உறங்கி கண்விழிக்கின்றோம். நம்முடைய நம்பிக்கைக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே தங்களது நம்பிக்கையை அழித்துக்கொண்டு இலட்சக்கணக்கான விவசாயிகள் இந்தியாவின் தலைநகரில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிவிட்டு அவர்களின் முதுகெலும்பை உடைக்கும் சட்டங்களை அரசானது நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. கடினமாக உழைக்க வேண்டியது மட்டுமே இவர்களது கடமை மற்றவைகளை பெரும் பண முதலைகள் பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் இந்திய அரசின் சட்டமாக இருக்கின்றது. இந்த தருணத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு தடை விதித்து, மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்தக் கூடாது என்றும், ஒய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இந்த கமிஷனும் மற்ற கமிஷனைப் போல நீர்த்துப் போகச்செய்யாமல்  உண்மையானதாக இருந்தால் நன்மையே. விவசாயிகளே வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும் மிகுந்த தானியமும் திராட்சை இரசமும் கடவுள் உங்களுக்கு வழங்குவாராக! (தொடக்க நூல் 27: 28)

3. வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்த்துச் சொல்லும் திருநாள்

உழவன் கால்நடைகளோடு நெருங்கிய தொடர்புடையவன். ஆண்டு முழுவதும் தனக்காக உழைத்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து வணங்கும் திருநாள். கால்நடைகளை தன்னுடைய சொந்தப் பிள்ளையாக பாவித்து குளிப்பாட்டி பொட்டு வைத்து சலங்கை அணிவித்து, தூபம் காண்பித்து பொங்கலும் வாழைப்பழமும் ஊட்டி அழகு பார்ப்பவன்தான் விவசாயி. மாடுகள்தான் மனிதர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று நில்லாமல், மனிதர்களும் கால்நடைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கும் திருநாள். மனிதன் சார்ந்து வாழ்பவன் என்ற தத்துவத்தை இங்கே காணமுடிகின்றது. கடவுள் கால்நடைகளுக்கும் கரையும் காக்கை குஞ்சுகளுக்கும் இறை கொடுக்கின்றார் (தி.பா 147: 9)

4. மனித குலத்தின் உறவுகளை எண்ணிப் பார்க்கும் திருநாள்

கரும்பு இல்லாமல் பொங்கல் கிடையாது. கரும்பை சாப்பிடுவதற்கு ஒரு விதிமுறை உண்டு. நுனிபகுதியில் தொடங்கி அடிபகுதியில் முடிக்க வேண்டும். ஏனென்றால் நுனி பகுதி துவர்க்கும் அடிப்பகுதி இனிக்கும். நம்முடைய உறவும் கரும்பைப் போல, நுனி பகுதியில் தொடங்கி அடிப்பகுதியை நோக்கி நகர வேண்டும். அதாவது நம்முடைய உறவு வாழ்வில் உள்ள கசப்புகளைச் சரிசெய்து இனிமையான மனிதர்களாக வாழத் தூண்டுவதுதான் இந்த கடைசி திருநாள். எனவேதான் இதனை காணும் பொங்கல், உறவு பொங்கல் என்று அழைக்கின்றோம். இப்படி படைத்த இறைவனுக்கு, இயற்கைக்கு, கால்நடைகளுக்கு, இறுதியாக மனுக்குலத்திற்கு நன்றி சொல்லி மகிழ்பவர்கள்தான் தமிழர்கள். நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்கிறார் ஆண்டவர் (யோவா.13:34).

மண்பானையில் வண்ணமிட்டு பொங்கலிடும் இத்தைத் திருநாளில் கதிரவனின் ஒளி இப்பூமியில் படும் வேளையில், உங்கள் எண்ணங்கள், உழைப்பு, தியாகம், நம்பிக்கை சுழல்விட்டு ஒளிதர வேண்டுமென்று உங்களை அன்போடு வாழ்த்துகின்றேன். பொங்கட்டும் நம்முடைய பொன்னான வாழ்வு. (அருள்பணி பெஞ்சமின், திருச்சி மறைமாவட்டம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2021, 13:05