திருத்தந்தை பிரான்சிஸ், Ahmad At-Tayyeb திருத்தந்தை பிரான்சிஸ், Ahmad At-Tayyeb  

பிப்ரவரி 04, மனித உடன்பிறந்தஉணர்வின் உலக நாள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் Al-Azhar பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் உயர்குரு Ahmad At-Tayyeb அவர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், 2019ம் ஆண்டு, பிப்ரவரி 4ம் தேதியன்று, மனித உடன்பிறந்தஉணர்வு என்ற ஏட்டில் கையெழுத்திட்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்து வாழ்தலை வலியுறுத்தி வெளியிடப்பட்ட, மனித உடன்பிறந்தஉணர்வு என்ற வரலாற்று சிறப்புமிக்க ஏடு (HFD) கையெழுத்திடப்பட்ட பிப்ரவரி 04ம் தேதியை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், மனித உடன்பிறந்தஉணர்வின் உலக நாள் என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 21, இத்திங்களன்று, ஐ.நா.வின் பொது அவை நடத்திய 75வது அமர்வின், 47வது கூட்டத்தில், மனித உடன்பிறந்தஉணர்வின் உலக நாளை உருவாக்கும் இந்த தீரமானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வுலகில், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனைகள், வளர்ந்துவரும் சமய வெறுப்பு, மற்றும், ஏனைய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு, அனைத்து தரப்பினரும் தங்களின் ஒத்துழைப்பை புதுப்பிக்கவேண்டும் என்றும், பல்சமய மற்றும், பன்முகக்கலாச்சார உரையாடல்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும், ஐ.நா.பொது அவை கேட்டுக்கொண்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் Al-Azhar பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் உயர்குரு Ahmad At-Tayyeb அவர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதியன்று, மனித உடன்பிறந்தஉணர்வு என்ற ஏட்டில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சமயத் தலைவர்களும், பல்சமய மற்றும், பன்முகக்கலாச்சாரங்களை ஊக்குவிப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், ஐ.நா.வின் பொது அவை, தன் உறுப்பு நாடுகளுக்கு எடுத்துரைத்துள்ளது.

மேலும், மனித உடன்பிறந்த உணர்வின் உயர் குழு ஆற்றும் பணிகள், அபுதாபியின் வாரிசு இளவரசர் Sheikh Mohammed bin Zayed அவர்கள், இக்குழுவுக்கு வழங்கிவரும் ஆதரவு, மனித உடன்பிறந்த உணர்வை வளர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் அனைத்தையும் ஐ.நா. பொது அவை பாராட்டியுள்ளது. (REI/UN)   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2020, 14:37