கிறிஸ்மஸ் தாத்தா கிறிஸ்மஸ் தாத்தா 

விதையாகும் கதைகள்: பிறருக்கு உதவுவதால் எவரும் ஏழையாவதில்லை

`உங்களுக்கு ஏதாவது கிடைத்தால், அதைப் பிறருக்கும் கொடுங்கள்; நீங்கள் எதையாவது கற்றுக்கொண்டால், பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்’ (அமெரிக்கக் கவிஞர் Maya Angelou).

மேரி தெரேசா-வத்திக்கான்

அது 2010-ம் ஆண்டு. அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஜிம் கிளாப் (Jim Glaub), டைலன் பார்க்கர் (Dylan Parker) ஆகிய இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும் அப்போதுதான் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியிலிருக்கும் ஒரு மாடிவீட்டில் வாழத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் அங்கு வந்த சில நாள்களிலேயே, அவர்கள் இருந்த முகவரிக்கு, முதல் நாள் ஐந்து, அடுத்த நாள் 10, அதற்கடுத்த நாள் 15... இவ்வாறு கடிதங்கள் வர ஆரம்பித்தன. அந்தக் கடிதங்கள் அனைத்தும், அவர்கள் இருவருக்கும் எழுதப்பட்ட கடிதங்களே அல்ல. ஆனால், அவ்விருவரின் 22nd Street என்ற சரியான முகவரியில், `கிறிஸ்மஸ் தாத்தா’வுக்கென (Santa Claus) எழுதப்பட்டவை. இந்த கடிதங்கள், தங்களுக்கு ஏன் வருகின்றன என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்தக் கடிதங்களில் ஒன்றை எடுத்து பிரித்துப் படித்தார்கள். ஐந்து வயது சிறுவன் ஒருவன், `கிறிஸ்மஸ் தாத்தா. என்னோட சாக்ஸ் கிழிஞ்சு நைஞ்சு போச்சு. இது குளிர்காலம் இல்லையா? ஷூ போட்டிருந்தாலும் கால் மட்டும் ஜில்லுனு ஆகிப்போயிடுது. ஒரு சாக்ஸ் வாங்கித் தருவீங்களா?’ என்று எழுதியிருந்தான். இதை வாசித்த ஜிம்மும் டைலனும், இந்த எளிய கோரிக்கையைப் படித்ததும் உருகிப் போனார்கள். அடுத்த கடிதம்... ஆறு வயதுச் சிறுமி ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தாள்... `தாத்தா... என்னோட அம்மா தனியா ரொம்பக் கஷ்டப்படுறாங்க. நான் கேட்குறதையெல்லாம் அவங்களால வாங்கிக் குடுக்க முடியலை. என்னோட துணிகளெல்லாம் ரொம்பப் பழசாகிப் போச்சு. நான் வளர்ந்துட்டதால, ஷூவும் போட முடியாத அளவுக்குச் சின்னதாகிடுச்சு. இந்த கிறிஸ்மஸுக்கு எனக்குப் போட்டுக்குறதுக்கு டிரெஸ்ஸும், ஷூவும் கொஞ்சம் பொம்மைகளும் அனுப்பிவைப்பீங்களா?’ - கடிதத்தின் கீழே அந்தக் குழந்தைக்கான உடை, ஷூவின் சைஸும் குறிப்பிட்டிருந்தது. இன்னொரு கடிதத்தில் 9 வயதுக் குழந்தை கணனி கேட்டிருந்தது. இன்னொரு கடிதத்தில், 21 மாதங்களே ஆன ஒரு குழந்தை எழுதுவதுபோல, அதன் அம்மா, குழந்தைக்கு குளிராடை கேட்டிருந்தார். ஒரு நடுத்தர வயதுள்ள, அண்மையில்தான் வேலையை இழந்திருந்த மனிதரொருவர் ஒரு மாதத்துக்கான மளிகைச் சாமானை தன் குடும்பத்துக்கு வாங்கித் தரும்படி கேட்டிருந்தார்... இவ்வாறு உதவிகள் கேட்டு, 2010ம் ஆண்டில் இந்த நண்பர்களின் முகவரிக்கு 450 கடிதங்கள் வந்திருந்தன. அந்த நண்பர்கள் இருவரும் கடிதங்களை வாசிக்க, வாசிக்க நெகிழ்ந்துபோனார்கள். அவ்விருவரும் இதற்காகவே முகநூலில் `மிராக்கிள் ஆன் 22ண்ட் ஸ்ட்ரீட்’ (Miracle on 22nd Street) என்ற குழுவை ஆரம்பித்தார்கள். `கிறிஸ்மஸ் தாத்தா’ என்று, தங்களுக்கு வந்த கடிதங்களையெல்லாம், ஒரு குழந்தையின் விருப்பத்தை உங்களால் நிறைவேற்ற முடியுமா?’ என்கிற வாசகத்தோடு அதில் பதிவிட்டார்கள். அவர்களின் பதிவுகளுக்கு வரவேற்பும் கிடைத்தது. அந்த ஆண்டில் அவர்கள் 150 கடிதங்களின் குறைகளைத் தீர்த்து வைத்தார்கள். அவ்வாண்டிலிருந்து, ஜிம், டைலன் ஆகிய இரு நண்பர்களும், உண்மையான கிறிஸ்மஸ் தாத்தாக்களாக, தொடர்ந்து உதவிசெய்து வருகின்றனர். ஆம். `பிறருக்கு உதவுவதால் யாரும் ஏழையாவதில்லை’ என்பது மறுக்க முடியாத உண்மை. `உங்களுக்கு ஏதாவது கிடைத்தால், அதைப் பிறருக்கும் கொடுங்கள்; நீங்கள் எதையாவது கற்றுக்கொண்டால், பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்’ (அமெரிக்கக் கவிஞர் Maya Angelou, நன்றி விகடன்).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2020, 13:54