கோவிட்-19 கொள்ளை நோயால் முடங்கிப் போயிருக்கும் சொகுசு கப்பல் கோவிட்-19 கொள்ளை நோயால் முடங்கிப் போயிருக்கும் சொகுசு கப்பல் 

விதையாகும் கதைகள் : பிரச்சனையா? அசௌகரியமா?

வாழ்வில் அசௌகரியங்கள் நிறையவே வரும். எல்லாவற்றிற்கும், பிரச்சனை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால், நாம் என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

அமெரிக்க கடற்படையில் கப்பலின் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியிலிருந்தார், ஜார்ஜ். நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பலில், ஒருநாள், கடினமான வேலையொன்று அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர், சிரமப்பட்டு திணறிக் கொண்டிருந்தபோது, வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ, அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் கப்பல் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார்.

“முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?” என்ற ரீதியில் ஏறக்குறைய கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார்.

அவர் பேசியதில் ‘பிரச்சனை’ என்ற சொல், பலமுறை பயன்படுத்தப் பட்டிருந்தது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் கேப்டன்: “நீ பேசியபோது, பிரச்சனை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சனை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?. உனக்கு முதுகுத்தண்டு முறிந்துபோய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால், அது பிரச்சனை. உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து, நீ நடுத்தெருவில் நின்றால், அது பிரச்சனை. ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்யமுடியும், அல்லது, சரி செய்யவேமுடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சனை. இதுபோன்ற பிரச்சனைகள், ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில், ஒன்றிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம். மற்றபடி நீ ‘பிரச்சனை’ என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே ‘அசௌகரியங்கள்’. இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில், இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாள்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விடயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே, ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில், இது அவ்வளவு பெரிய விடயமாகத் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள். நமது வாழ்க்கை முழுவதும், எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சனை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது” என்று, மிகவும் அமைதியாக அறிவுரை கூறினார். அவர் சொன்னது, ஜார்ஜ் அவர்களுக்கு மிகப் பெரிய பாடமானது.

அன்றிலிருந்து அவர், தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது *உண்மையான பிரச்சனையா, இல்லை தற்காலிக அசௌகரியமா* என்று தன்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தார். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத்தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும், உண்மையில் அவை அவ்வளவு பெரிய விடயங்கள் அல்ல என்றும் அவருக்கு புரிய ஆரம்பித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2020, 12:11