பாரிசில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பாரிசில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்  

வாரம் ஓர் அலசல்: தனக்கென ஓர் அடையாளத்தைக் காண...

வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையிலிருந்தும் வெற்றிபெற்றால், அது வெற்றி. ஆனால் ஏராளமான பிரச்சனைகளைக் கடந்து, வெற்றிபெற்றால் அது வரலாறு.

மேரி தெரேசா: வத்திக்கான்

1880களில் திறமையான பொறியாளர் ஒருவர் இருந்தார். அவர் நல்ல வேலையில், நல்ல பதவியில் இருந்தார். அவருக்கு பணம், செல்வாக்கு போன்ற எதிலும் குறையின்றி இருந்தார். ஆனாலும் அவருக்கு மனதில் ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. செய்துகொண்டிருக்கும் அந்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்வதில் அவருக்கு விருப்பமும் இல்லை, திருப்தியும் கிடையாது. ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கவேண்டும், ஒரு புது நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டும், தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்பட்டுக்கொண்டே, அதைப் பற்றி கனவு கண்டுகொண்டே இருந்தார். பலமுறை சிந்தித்து, பல முயற்சிகள் செய்து தனது 36வது வயதில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தில் தனது கண்டுபிடிப்பான ஒன்றை அறிமுகப்படுத்த விரும்பினார். அது என்னவெனில், அந்தக் காலத்தில் நடுத்தரவர்க்கத்தினர் வாங்குவதற்கு கஷ்டப்பட்ட பொருள். அதை அறிமுகப்படுத்தின அடுத்த ஆண்டே அந்த நிறுவனம், வாங்கின கடனைக்கூட திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு, அந்த நிறுவனத்தை முழுவதுமாக மூடவேண்டியிருந்தது. ஆனால் அந்த பொறியாளர் மனதைத் தளரவிடவில்லை.

ஹென்றி ஃபோர்டு

அந்த பொறியாளர், பல பெரிய ஆள்களிடம் கெஞ்சி நிதியுதவி பெற்று, திரும்பவும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். பல முயற்சிகளுக்குப் பின்னர், இறுதியாக, ஒரு சரியான உடன்ஒத்துழைப்பாளர் இல்லாததால் அந்த நிறுவனமும் தோல்வியைத் தழுவியது. தனது நாற்பதாவது வயதில் முழுக்க முழுக்கத் தோல்வியோடு நின்ற அவரைப் பார்த்து எல்லாரும் கிண்டல் செய்து சிரித்தார்கள். ஏற்கனவே அவரோடு பணியாற்றிய அனைவரும் அவரிடம், நீ ஒரு தவறான முடிவை எடுத்ததால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறாய் என்று குறை கூறினார்கள். ஆனால் அவர் சிறிதுகூட சோர்வுறவில்லை. மனதில் குழம்பவும் இல்லை. அந்த பொறியாளர், தன்னை நம்பினார், தனது திறமையை நம்பினார், தனக்கென்று ஓர் அடையாளத்தை தேடவேண்டும் என்ற தனது முயற்சி தவறானது அல்ல என்பதில் உறுதியாய் இருந்தார். அந்த பொறியாளர், இந்த தோல்விக்குப் பின்னும், மனம்தளராமல் அடுத்து முயற்சி ஒன்றில் இறங்கினார். வாழ்க்கையிலே சிறந்த பாடம் தோல்வி கற்றுக்கொடுக்கும் பாடம், அந்த பாடத்தை வேறு யாராலும் கற்றுக்கொடுக்க முடியாது என்பதை அவர் சரியாகப் புரிந்து வைத்திருந்தார். எனவே மூன்றாவது முறையாக அவர் மேற்கொண்ட முயற்சி, அவர் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவியது. அந்தப் பொறியாளர் சாதித்தது ஒரு சாதாரண வெற்றியல்ல, மாறாக, அது இன்றளவும் நிலைத்து நிற்கும் மிகப்பெரும் வெற்றியாகும். அந்தப் பொறியாளர் யார் என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள். அவர் வேறு யாருமல்ல, உலகப் புகழ்பெற்ற, உலகில் பிரபலமான வாகன நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தை ஆரம்பித்த ஹென்றி ஃபோர்டு அவர்கள்தான்.

நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள் ஒருபோதும் தோல்வி அடைந்ததாக வரலாறு கிடையாது. வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கையில், இந்த முயற்சியை மேற்கொண்டதால்தான் இந்த நிலை என்ற சிந்தனை பலருக்கு வரலாம். அவ்வாறு துன்பநிலையில் இருக்கையில், நம்மைச் சுற்றியிருப்பவர்களும், நாம் மேற்கொண்ட முயற்சி தவறானது என்று சுட்டிக்காட்டலாம். ஆனால் அவ்வேளைகளில் நம் மனசாட்சியிடம், நாம் கேள்விகளைத் தொடுக்கவேண்டும். நான் இந்த முயற்சியை நல்ல எண்ணத்துடன்தான் ஆரம்பித்தேனா, என்னால் இதில் வெற்றிபெற முடியுமா என்ற கேள்விகளை மனசாட்சியிடம் கேட்கும்போது, ஆமாம், உனது எண்ணம் நல்ல எண்ணம்தான், உன்னால் முடியும் என்றுதான் ஆரம்பித்தாய் என்று மனசாட்சி பதில் சொன்னால் மேற்கொண்ட முயற்சியில் மனம் தளராமல் உறுதியுடன் அதைத் தொடரலாம். அப்போது வெற்றி நமது உற்ற நண்பனாக உடன்வரும். அடுத்தவர் சொல்லும் குறைகளை, கேலிப்பேச்சுக்களைக் கண்டு மனம் தளரவேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒவ்வொருவரும் நமது சொந்த அடையாளத்தைத் தேடவேண்டும். அதற்கு முயற்சி செய்கையில் பல தடைகள் வரும், பல பிரச்சனைகள் வரும், சரியான மரியாதை கிடைக்காது. அவ்வேளைகளில், வாழ்க்கையில் உயரத்தைத் தொட்டவர்கள் பலரை நினைத்துப் பார்க்கலாம். அவர்கள் எல்லாருமே பிரச்சனைகளை, தடைகளை எதிர்கண்டவர்கள்தான். வெற்றியடையவேண்டும் என்று நினைப்பது எளிது. ஆனால் அதை எட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்கொள்ளும் தோல்விகளைக் கண்டு மனம் தளராமல், துணிந்து நிற்பவர்களே, வெற்றி என்ற ஏணியில் இறுதிப் படியீல் அரியணை அமைப்பவர்கள்.(உதவி குட்டிக்கதைகள் சபரி)

நம் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், சிறு பிள்ளைகளைப் பார்க்கும்போது, அவர்களிடம் நாம் கேட்கும் கேள்விகள் என்ன? நீ எந்த வகுப்பு படிக்கிறாய், நீ உன் வருங்காலத்தில் என்னவாக ஆசை... இப்படி சில கேள்விகளை அடுக்குகிறோம். நான் அப்துல் கலாம் ஐயா போன்று அறிவியல் மேதையாக ஆவேன், விமான ஓட்டுனராக, பொறியியல் வல்லுனராக, காவல்துறை அதிகாரியாக.. இசைக் கலைஞனாக, விளையாட்டு வீரனாக... இவ்வாறு பிள்ளைகள் பதில் சொல்கின்றனர். ஆனால் எத்தனை பேர் தங்களின் பள்ளிப்பருவ எண்ணங்களைச் சாதித்துக் காட்டியவர்கள்?, ஏன் அவ்வாறு சாதிக்க முடியவில்லை? சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

ரான்டி பாஷ்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற கணிப்பொறித் துறைப் பேராசிரியர் ரான்டி பிரெட்ரிக் பாஷ் (Randolph Frederick Pausch) அவர்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒரு மனிதர், தன் வாழ்க்கையில் மிகப்பெரும் சாதனையாக எதனைக் கருதுகிறார்? அவர் தனது வாழ்க்கையின் கனவாக எதை வளர்த்து வந்தாரோ அதை அவர் நிறைவேற்றி காட்டுவதுதான். ரான்டி பாஷ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிட்ஸ்பெர்க் நகரிலுள்ள காரனகி மெலன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்த இவர், தன்னை மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதை மனமுவந்து ஏற்றார். எஞ்சியிருக்கும் நாள்களை மகிழ்ச்சியாகச் செலவழிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அதன்படி வாழ்ந்து, 2008ம் ஆண்டில் ரான்டி பாஷ் அவர்கள் இயற்கை எய்தினார்.

ரான்டி பாஷ் அவர்கள் பற்றி அறிந்ததை, எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார். ரான்டி பாஷ் அவர்கள் தனக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதை அறிந்து, கடைசியாக அவர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையொன்று ஆற்றினார். உலகில் ஆற்றப்பட்டுள்ள மிகச் சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லப்படுகிறது. ரான்டி பாஷ் அவர்கள், தனது சிறுபிள்ளைப் பருவக் கனவுகளாக, புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பறப்பது, கால்பந்து விளையாட்டில் பதக்கம் பெறுவது, சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பது.. இவ்வாறு நீண்ட பட்டியல் ஒன்றை வைத்திருந்தார். அவற்றில் அவர் எவற்றை, எப்படி எட்டினார், எதைத் தவறவிட்டார், என்பதை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் கால்பந்து விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரது பயிற்சியாளர் அவரிடம், இந்த விளையாட்டில், ஒரு பக்கத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கேட்டதும், ஒரு பக்கத்தில் 11 பேர், இரண்டு பக்கமும் சேர்ந்து 22 பேர் என்று அவர் பதில் சொன்னார். மேலும் பந்து ஒரு நேரத்தில் எத்தனை பேரிடம் இருக்கும் என்று பயிற்சியாளர் கேட்டபோது, ஒரு நேரத்தில் ஓர் ஆளிடம் மட்டுமே இருக்கும் என்று ரான்டி பாஷ் அவர்கள் பதில் சொன்னார். அப்போது அந்த பயிற்சியாளர், பந்து, ஒரு நேரத்தில் ஓர் ஆளிடம் மட்டுமே இருக்கும் என்பதுதான் அந்த விளையாட்டின் அடிப்படை. கால்பந்து விளையாட்டில் எத்தனை பேர் விளையாடினாலும், பந்து, ஒரு நேரத்தில் ஒருவரின் காலடியில்தான் இருக்கும், அவர் அதை என்ன செய்யப் போகிறார், மற்ற 21 பேரும் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் உண்மையான சவால். நாம் வாய்ப்பை எவ்வாறு உருவாக்கப் போகிறோம், எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதுதான் வாழ்க்கையின் உண்மையான சவால். இவ்வாறு பயிற்சியாளர் சொன்னார் என்று சொற்பொழிவில் கூறிய ரான்டி பாஷ் அவர்கள், இந்த கால்பந்து விளையாட்டில், தவறுசெய்கிறாய் முட்டாள் என்று, பயிற்சியாளர் திட்டினார், ஆனால் அந்த கடும் சொற்களே, விளையாட்டைக் கற்றுக்கொள்ள உதவியது. எனவே, வாழ்வில் விமர்சனங்கள் எப்போதுமே கடுமையானவைதான். ஆனால் அந்த வேதனைதான் நம்மை வெற்றிபெற உதவும் என்று, ரான்டி பாஷ் அவர்கள் தன் உரையில் கூறியிருக்கிறார்.

நவம்பர் 2, இத்திங்களன்று, கிறிஸ்தவர்கள், குடும்பங்களில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிக்கின்றனர், தான தர்மங்களைச் செய்கின்றனர். நாமும், இந்த கோவி-19 கொள்ளைநோய் காலத்தில் இறந்த அனைவரையும் மற்றும், அவர்களின் குடும்பங்களையும், இந்நாளில் சிறப்பாக நினைத்து செபிப்போம். நம் குடும்பங்களில் இறந்தவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள தடங்கள் என்ன, அவர்கள் வாழ்வில் வெற்றிப்படிகளை எவ்வாறு எட்டினார்கள், அவர்கள் தங்கள் கனவுகளை ஏன் எட்டவில்லை?, அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? என்று சிந்திப்போம். வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையிலிருந்தும் வெற்றிபெற்றால், அது வெற்றி. ஆனால் ஏராளமான பிரச்சனைகளைக் கடந்து, வெற்றிபெற்றால் அது வரலாறு. நம்மிடம் எது இல்லை என்பதை விட்டுவிட்டு, என்ன திறமைகள் உள்ளன என்று சிந்தித்தால், நமக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2020, 13:59