ஹரி பாட்டர் ஹரி பாட்டர் 

விதையாகும் கதைகள்: முன்னேறுவதற்கு வறுமை ஒரு தடையா?

எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஜோன் எழுதிய Harry Potter நாவல், வரலாற்றில் அதிக விற்பனை செய்யப்பட்ட நூல்களில் ஒன்றாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

இங்கிலாந்தில் சிறு கிராமம் ஒன்றில் வாழ்ந்துவந்த சிறுமி ஜோன், ஒரு புத்தகப் பிரியர். ஜோனுக்கு 12 வயது நடந்தபோது அவளது அம்மா Multiple sclerosis என்ற நோயால் கடுமையாய்த் தாக்கப்பட்டார். இந்நிலையில், பொறியியலாளரான அவளது அப்பா, அவளது அம்மாவைவிட்டு விலகுவதாகவும் செய்தி வந்தது. அவளது அப்பா கொடுத்த குறைந்த பணத்தை வைத்து ஜோன், தனது அம்மாவையும், தங்கையையும் பராமரித்ததோடு, கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்ந்து பட்டயப் படிப்பையும் முடித்தார். பின்னர் ஜோனுக்கு வணிக நிறுவனம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளர் வேலை கிடைத்தது. அதனால் நிதி நெருக்கடி சிறிது சிறிதாக நீங்கியது. ஜோன் பொழுதுபோக்கிற்காக, நாவல்கள் எழுதத்தொடங்கினார். ஜோனுக்கு இருபத்தைந்து வயது நடந்தபோது, அவளது அம்மா இறந்துவிட்டார். அதற்குப்பின் போர்த்துக்கல் நாடு சென்று பள்ளி ஒன்றில் வேலையில் சேர்ந்தார். அங்கு ஜார்ஜ் என்பவரைக் காதலித்து திருமணமும் செய்துகொண்டார். ஆனால் ஜார்ஜ், ஜோனை உடலளவில் அடித்து துன்புறுத்தியதால் அவரைவிட்டு விலகினார். அப்போது ஜோன் ஏழு மாத கர்ப்பிணி. தனக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் மீண்டும் இங்கிலாந்து வந்து அன்றாட வாழ்வுக்கே கஷ்டப்பட்டார். அதேநேரம், ஜோன் எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. ஜோனின் முதல் நூல் பிரசுரமானபோது, அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. அடுத்து, சிறார் மற்றும், வளர்இளம்பருவத்தினருக்கென தனது கனவு நாவலை எழுதினார். அதைப் பிரசுரிக்க, பல பதிப்பகங்களை அணுகினார். எல்லாரும் மறுத்துவிட்டனர். கடைசியாக ஒருவர் மட்டும் ஜோன் எழுதிய அந்த நாவலை தனது மகளிடம் வாசிக்க கொடுத்தார். அதை வாசித்த அவரது மகள், ஆர்வம் மிகுந்து, அதன் அடுத்த பகுதியைக் கேட்டாள். இதனால் அந்த பதிப்பக உரிமையாளர், அந்த நாவலின் சிறப்பை உணர்ந்தார். அந்த நாவலையும் அவர் பிரசுரித்தார். ஏழு தொகுப்புக்களாக வெளிவந்த அந்த நாவல்தான் Harry Potter. அந்த எழுத்தாளர்தான் J.K. Rowling.  (Harry Potter JK Rowling Story in Tamil - AppleBox Sabari)

ஜோன் எழுதிய Harry Potter நாவல், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உலக அளவில் ஐம்பது கோடிக்கு அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருந்தன. எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல், வரலாற்றில் அதிக விற்பனை செய்யப்பட்ட நூல்களில் ஒன்றாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் இறுதி நான்கு தொகுப்புகள் வெளியான 24 மணிநேரத்திற்குள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் பிரதிகள் விற்பனையாகின என்று சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2020, 13:42