தீ தீ 

விதையாகும் கதைகள்: திருத்தப்பட வேண்டியவர்கள்

நாட்டில் திருத்தப்பட வேண்டியவர்கள், திசையைக் காட்டிக்கொண்டிருப்பவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த கல்லூரி வாசலில் உள்ளே போகமுடியாத அளவுக்கு கலவரம் நடந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே காவல்துறையினர் நின்று கொண்டிருந்தனர். வெறித்தனமாக கூச்சல் போட்டுக்கொண்டிருந்த மாணவர் கும்பலின் மத்தியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அந்த தீ அடங்கியதும் கும்பல் உற்சாகமாகக் கலைந்தது. அங்கிருந்த காவல்துறை அதிகாரியும், எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. எல்லாமே முன் அனுமதியோடே நடைபெற்றது என்று, தனது மேலதிகாரிக்கு அலைபேசியில் அறிவித்துவிட்டு ஜீப்பில் ஏறிச் சென்றார். அந்த கலவரத்தை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இரு பெரியவர்கள், அதற்குப்பின், அந்த இடத்திற்குச் சென்றார்கள். அங்கு எரிந்து சாம்பலானது, வைக்கோல் பொம்மை என அவர்கள் அறிந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவரிடம், இதனை வைக்கோல் பொம்மை என எண்ணியா எரிக்கின்றனர், இல்லையே, ஒரு மனிதரை வெறுத்து, அவரது உருவமாக அந்த பொம்மையை அமைத்து எரிக்கின்றனர், அந்த நேரத்தில் வெறியோடு எரிப்பவர்களின் முகத்தில், அந்த மனிதரையே எரிக்கும் மகிழ்ச்சியல்லவா தெரிகிறது என்றார். அதற்கு அடுத்தவர், உண்மைதான். இந்த உணர்வு ஆபத்தானது. இளைஞர்களுக்கு இந்த வழியில் திசை காட்டினால், வருங்காலத்தில், கோபமும் வெறியுமே பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும். ஆம். நாட்டில் திருத்தப்பட வேண்டியவர்கள், திசையைக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2020, 14:58