தேடுதல்

ஜென் துறவி ஜென் துறவி  

விதையாகும் கதைகள்: எளிய உண்மைகள் எப்போதுமே மகத்தானவை

எளிய உண்மைகள், வாழ்விலிருந்து பெறப்படுகின்றன. அந்த உண்மைகளைச் சொல்லும் மனிதர், தனது சொந்த அனுபவத்தில் இருந்து சாறுவடித்து அவற்றை மற்றவருக்குப் பருகத் தருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருசமயம், புகழ்பெற்ற ஜப்பானியப் படைத்தளபதி ஒருவர், ஜென் துறவி ஒருவரை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். துறவி வீட்டுக்குள் நுழைந்தவுடன், அந்த படைத்தளபதி, தான் சேமித்து வைத்திருந்த கலைப்பொருள்களைக் காட்டி, அதைப் பற்றி புகழ்ந்து பேசினார். ஆனால் ஜென் துறவியோ, அவர் பேசியதில் ஆர்வம் காட்டவில்லை. படைத்தளபதி பேசி முடித்ததும், துறவியார், அங்கிருந்த, களிமண்ணால் செய்யப்பட்டிருந்த சீனக் கிண்ணம் ஒன்றை தரையில் போட்டு உடைத்தார். தன் கண்முன்பாகவே கிண்ணம் உடைந்து நொறுங்குவதைப் பார்த்த தளபதி, துடித்துப்போய், கோபத்தினால் கத்தினார். அப்போது துறவி அமைதியாக இவ்வாறு சொன்னார். தளபதியாரே, உன் கண்முன்னால், ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்குவதை உன்னால் தாங்க முடியவில்லை. ஆனால் உன் கண்முன்பாகவே எத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டார்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை பல்லுயிர்கள், கை கால்கள் துண்டாகி துடித்துப்போய் இறந்தன. அப்போது உனது மனது ஏன் துடிக்கவில்லை. துறவியார் சொன்னதை அமைதியாகக் கேட்ட மறுநிமிடமே, படைத்தளபதிக்கு தன் அறியாமையும், உலகின் இயல்பும் புரிந்துவிட்டன. உடனே அவரும் துறவியாக விரும்பி, அந்த ஜென் துறவியார் பின்னாலே சென்றார்.    

ஆம். எளிய உண்மைகள் எப்போதுமே மகத்தானவை. அவை வாழ்விலிருந்து பெறப்படுகின்றன. அந்த உண்மைகளைச் சொல்லும் மனிதர், தனது சொந்த அனுபவத்தில் இருந்து சாறுவடித்து அவற்றை மற்றவருக்குப் பருகத் தருகிறார். (நன்றி எஸ்.இராமகிருஷ்ணன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2020, 14:25