தேடுதல்

Vatican News
கம்போடியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன கம்போடியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன  (ANSA)

வாரம் ஓர் அலசல்: உலக எழுத்தறிவு நாள் செப்டம்பர் 08

கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் ஆணிவேர் என்றார் பிளேட்டோ.

மேரி தெரேசா: வத்திக்கான்

S.P.கலியமூர்த்தி IPS அவர்கள், 2008ம் ஆண்டில், திருச்சி மாநகரில் மாவட்ட கண்காணிப்பாளராகப் பணியாற்றிபோது, திடீரென ஒருநாள், மதியம் இரண்டு மணிக்கு அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து, அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. துறையூர் என்ற கிராமத்தில், பிளஸ் 2 படித்த மாணவி ஒருவர், தொடர்ந்து படிக்க விரும்புகிறார், 47 வயது நிரம்பிய அச்சிறுமியின் மாமாவுக்கு, 2ம் தாரமாக கல்யாணம் செய்துவைக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறன, அது சட்டப்படி தவறு, அதை தடுத்து நிறுத்தி அந்தச் சிறுமி தொடர்ந்து படிப்பதற்கு உதவி செய்யலாமே என்று சொன்னார். கலியமூர்த்தி IPS அவர்களும், உடனடியாக துறையூர் சென்றார். அந்தச் சிறுமிக்கு அடுத்த நாள் கல்யாணம் நடக்கவிருந்தது. இரவு முழுவதும் அழுது அழுது முகமே வீங்கி இருந்த அச்சிறுமியிடம், கலியமூர்த்தி அவர்கள், உனக்கு என்ன செய்ய விருப்பம் என்று கேட்டார். சார் நான் படிக்கணும், இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை, எனக்கு வயது பதினாறுதான் என்றார். உடனே அச்சிறுமியின் அம்மா அப்பாவை கூப்பிட்டு, இது சட்டப்படி தவறு, இது நடந்தால் நீங்கள் சிறைக்குப் போகவேண்டியிருக்கும் என்று சொன்னவுடன், அந்த பெற்றோரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டனர். பின்னர் கலியமூர்த்தி IPS அவர்கள், அந்த சிறுமி கேட்ட உதவிகள் எல்லாவற்றையும் செய்தார். பின்னர், கலியமூர்த்தி IPS அவர்கள், அந்தச் சிறுமியிடம், சரி, உனக்காக குடியரசுத்தலைவர் பரிந்து பேசினாரே அது எப்படி என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி, கலாம் அவர்கள், குடியரசுத்தலைவராகப் பணியேற்காத காலக்கட்டம் அது. நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். அந்த பல்கலைக்கழகத்தில் கலாம் அவர்கள் உரை நிகழத்தினார். கேள்வி நேரத்தில் நான்கு பேரை மட்டும், அவர் கேள்வி கேட்கச் சொன்னார். அப்போது நான் எழுந்து நின்று, பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை என்ன என்று, அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், கல்வி என்று, ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். அன்று கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும், அவரது அடையாள அட்டை ஒன்றை அவர் கொடுத்தார். அதில் அவரது மின்னஞ்சல் முகவரியும், தொலைப்பேசி எண்ணும் இருந்தன. என் வாழ்க்கையை ஒளிமயமாக ஆக்க வேண்டுமென்றால், நான் படித்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன். அதனால் எனது திருமண ஏற்பாடு குறித்து, நான்தான் குடியரசுத்தலைவரிடம் தொலைப்பேசியில் பேசினேன் என்று சொன்னார்.

2019ம் ஆண்டில் ஒருநாள், பரிபூர்ணா கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, மாணவர் நிகழ்வு ஒன்றில், கலியமூர்த்தி IPS அவர்கள், கல்வியின் சிறப்பு பற்றி ஆற்றிய உரையை யூடியூப்பில் தொடர்ந்து கேட்டபோது, அந்த சிறுமி பற்றிய மேலும் பல தகவல்களை அவர் கூறியதை அறியமுடிந்தது. துறையூர் என்ற குக்கிராமத்திலிருந்த ஒரு பெண், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத்தலைவராக இருந்த ஒரே காரணத்தினால், தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, தன் படிப்புத் தொடர்பாக பேச முடிந்தது. இது நடந்து ஐந்து ஆண்டுகள் சென்று, கலியமூர்த்தி IPS அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில், அட்லாண்டா என்ற இடத்தில் உரையாற்ற சென்றிருந்தார். அன்று, அந்த நிகழ்ச்சி முடிந்தபின் ஒரு பெண் எழுந்து நின்று, நான் இரண்டு நிமிடங்கள் இந்த மேடையில் பேசியே தீரவேண்டும் என்று தகராறு செய்துள்ளார். அனுமதியும் வழங்கப்பட்டது. அப்போது அவர்,  கலியமூர்த்தி ஐயா, அவர்களே, உங்களை எனக்குத் தெரியும். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் ஐ டி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். ஒரு மாத ஊதியம் மூன்றரை இலட்சம் ரூபாய். எனது கணவருடைய மாத ஊதியம் 4 இலட்சம் ரூபாய். நான்தான் அந்த துறையூர் சரஸ்வதி. உங்களுக்கு நன்றி சொல்லவே மேடையேறினேன் என்று சொல்லியுள்ளார். மாணவச் செல்வங்களே, புத்தகங்கள் முன்னால் யாரெல்லாம் தலைகுனிகிறார்களோ, அவர்கள் எல்லாம், நாளை இந்த உலகிற்கு முன்னால் தலை நிமிரலாம். இவ்வாறு, பரிபூர்ணா கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, அந்த மாணவர் நிகழ்வில், கலியமூர்த்தி அவர்கள், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில், கல்வியால் கிடைத்த மிகப் பெரிய மாற்றம் பற்றி பெருமையாகச் சொன்னார். கல்வி ஏழைகளுக்கு செல்வம். செல்வர்களுக்கு அது அணிகலன். அது, வீட்டிற்கு விளக்கு. அது நாட்டிற்கு நன்மை. பெண்களுக்குப் பாதுகாப்பு. கல்வி ஒன்றுதான், படிக்கின்ற மாணவனையும், அவன் பெற்றோரையும் அவன் பிறந்த வீட்டையும் இந்த நாட்டையும் உயர்த்தக்கூடியது.

லெனின், படிப்பு

இரஷ்ய புரட்சி நடந்து முடிந்தபின்னர், லெனின் அவர்கள், மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் கூடியிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், இந்த நாட்டை அமெரிக்காவைவிட மிக்பெரிய வல்லரசாக மாற்றிக்காட்ட முடியும், அதற்கு மூன்றே மூன்று காரியங்கள்தான் தேவை என்று சொன்னார். அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று, முதல் காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு லெனின், நீங்கள் படியுங்கள் என்றார். அடுத்து ஒரு பெண் எழுந்து நின்று, இரண்டாவது காரியம் என்ன என்று கேட்டார். அதற்கு லெனின் நீங்கள் படியுங்கள் என்றார். பின்னர், வயதுமுதிர்ந்த ஒருவர் எழுந்து நின்று, மூன்றாவது காரியம் என்ன என்று கேட்டார். அதற்கும் லெனின், நீங்களும் படியுங்கள் என்றார். கல்வி இல்லாததால் அறிவை இழந்தோம், அறிவு இல்லாததால், வேலையை இழந்தோம், வேலை இல்லாததால் சொத்தை இழந்தோம், சொத்து இல்லாததால் ஏழையானோம். இன்றைய பசிக்கு, ஏழ்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கல்வியறிவு இல்லாதே.  

பாத்தியம்மாள்

கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே அதாவது  பிச்சையெடுத்தாவது படி (புறநானூறு) என்று கல்வியின் முக்கியத்துவத்தை நம் முன்னோர் எடுத்துரைத்துள்ளனர். ஆனால், பிச்சை எடுப்பதையே தவறாகக் கருதி படிக்கிறேன் என்று, தமிழக இளம்பெண் ஒருவர் சொல்லியுள்ளார். இளம்பெண் பாத்தியம்மாள் விழுப்புரம் மாவட்டம், இந்திரா நகரில் வாழும், பூம்பூம் மாட்டுக்கார சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த சமுதாயத்தினர், உணவும், தங்கும் இடமும் இருந்தால்போதும், வாழ்ந்துவிடலாம் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள். மாட்டை அலங்கரித்து, உருமி மேளம் இசைத்தபடி, வீடு வீடாகச் சென்று, பிச்சை கேட்டு, பிழைப்பு நடத்தி வருகின்றனர். பாத்தியம்மாளும், சிறு வயதில், பெற்றோருடன், தெரு தெருவாகச் சென்று, பிச்சை எடுத்து சாப்பிட்டார். தண்ணீர் கேட்டால்கூட, சிரட்டையில் ஊற்றி, கைபடாமல் தருவதை அவர் பார்த்திருக்கிறார். இப்படி ஒரு பிழைப்பு வேண்டுமா, படிப்புதான், நம் சமுதாயத்திற்கு மதிப்பைப் பெற்றுத்தரும் என, அக்காலக்கட்டத்தில் உறுதியாக அவர் எண்ணினார். அதன் பயனாக, பாத்தியம்மாள் தற்போது பள்ளிப் படிப்பை முடித்து, திண்டிவனம் அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். தமிழ்கூட எழுதப்படிக்க தெரியாத அவரது சமுதாயத்தினர் மத்தியில், கல்லுாரிக்குச் செல்லும் முதல் பெண் அவர். அதிலும், அவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கிறார். கல்லுாரியிலிருந்து வந்ததும், அவர் தன் பகுதியில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். பாத்தியம்மாள் அவர்கள், தன்னைப்போல அந்த பிள்ளைகளையும், பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைக்க முயற்சிக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநரான ராஜி

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜி அசோக் என்ற பெண்மணி, அரசுப்பள்ளி மாணவர்களை கட்டணம் இன்றி, பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகிறார். வறிய நிலையில் வாழ்கின்ற இவர், வாரத்தில் இரு நாள்கள், 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் ஆட்டோ ஓட்டி பணம் சேர்த்து, மூன்று ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். ராஜி அக்கா என்று அழைக்கப்படும் இவர், ஏழைப் பெண்கள் மற்றும், வயதுமுதிர்ந்தவர்களிடம் கட்டணம் எதுவும் பெறுவதில்லை. குடும்ப வறுமையில் தன்னால் படிக்க முடியவில்லை என்றாலும், தானும் வறியநிலையில் இருந்தாலும், மற்ற ஏழைப் பிள்ளைகள் படிக்க இவர் உதவி வருகிறார். இதற்காக இவர் யாரிடமும் எந்த நிதியுதவியும் கேட்பதில்லை.

உலக எழுத்தறிவு நாள்

செப்டம்பர் 8, இச்செவ்வாய், உலக எழுத்தறிவு நாள். மனித மாண்பிற்கும், உரிமைகளுக்கும் எழுத்தறிவு முக்கியம் என்பதை வலியுறுத்தி, 1967ம் ஆண்டிலிருந்து இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கல்விமுறை மாற்றப்படவேண்டியதில் கல்வியாளர்களின் பங்கை வலியுறுத்தி, இன்றைய கோவிட்-19 கொள்ளைநோய் சூழலிலும், இந்த உலக நாள் சிறப்பிக்கப்படும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான பிள்ளைகள், பள்ளியிலோ கல்லூரியிலோ காலடி எடுத்துவைக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இந்திய நடுவண் அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையும், ஏழைக் குழந்தைகளின் எழுத்தறிவுக்கு, அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த கல்விக்கொள்கை குறித்து, செப்டம்பர் 07, இத்திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மாநில ஆளுனர்களைச் சந்திக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த சந்திப்பில், ஏழைக் குழந்தைகளின் வருங்காலம் கருதி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவோம்.

இளமையில் கல் (ஆத்திச்சூடி ), ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் (உலக நீதி) கல்வி கரையில, கற்பவர் நாள்சில (நாலடியார்), கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், கைப்பொருள்தனில் மெய்ப்பொருள் கல்வி (கொற்கை வேந்தன்) என்று நம் முன்னோர் சொல்லியுள்ளனர். கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் ஆணிவேர் என்றார் பிளேட்டோ. இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவர், இறந்த காலத்தை இழந்தவர், எதிர்கால வாழ்விலும் இறந்தவர் என்றார், யூரிபிடிஸ். பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது. கல்வி ஆபரணமல்ல, ஆடை. எனவே கல்வியின் அருமை பெருமைகளை அறிவோம். கல்வி கற்க வாய்ப்பில்லாத, வசதியில்லாத பிள்ளைகளுக்கு உதவுவோம். கோவிட்-19 சூழலில் கல்வி எழுத்தறிவிக்கும் ஆசான்கள் மற்றும், மாணவர்களுக்காக, வேளாங்கன்னி ஆரோக்ய அன்னையிடம் மன்றாடுவோம்.

07 September 2020, 14:26