தேடுதல்

ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்   ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்  

கோவிட்-19ஐ எதிர்கொள்ள உலகளாவிய ஒருமைப்பாடு

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஏற்கனவே விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள், சமயத் தலைவர்கள், பொதுநல அமைப்புகள், மற்றும், பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன - ஐ.நா. தலைமை பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருங்காலத்தில் உலகினர் அனைவரும் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களுக்கு ஒத்திகையாக, கோவிட்-19 கொள்ளைநோய் உள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா. பொது அவையின் 75வது அமர்வில் உரையாற்றினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடங்கப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்றுவரும், உயர்மட்ட அளவிலான ஐ.நா. பொது அவையின் இணையவழி அமர்வில், செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோயின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு, உலக அளவில் ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகின்றது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். .

ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள இன்றைய உலகில், ஒருமைப்பாட்டை, ஒவ்வொருவரும், தங்களின் சுயவிருப்பமாகத் தெரிவு செய்யவேண்டும் என்ற எளிமையான உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், இதனை நாம் உள்வாங்க தவறினால், எல்லாருக்குமே இழப்பே நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஐ.நா.வின் ஆண்டு நடவடிக்கைகள் பற்றி விளக்கிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோய்க்கு மத்தியில், தாழ்ச்சியிலும், ஒற்றுமையிலும் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த 75வது பொது அமர்வில், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள இயலாமல், காணொளிகள் வழியாக, தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்தனர்.

தற்போதைய கொள்ளைநோய், நம் வலுவின்மைகள் மற்றும் சமத்துவமின்மைகளை வெளிப்படுத்தியுள்ளது, இது உலக அளவில், நலவாழ்வு, பொருளாதாரம், மற்றும், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிலும், பிரச்சனைகளை  உருவாக்கியுள்ளது, மற்ற சவால்களுக்கு மத்தியில், மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தலையும் முன்வைத்துள்ளது என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், இச்செவ்வாய் நிலவரப்படி, 3 கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், இந்த தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 9,62,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கவலை தெரிவித்தார்.

உலகளாவிய போர்நிறுத்தம்

இந்த கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகக் கூறிய ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர், கடந்த மார்ச் மாத்தில் விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள், சமயத் தலைவர்கள், பொதுநல அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன, பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்களும் பதில் அளித்துள்ளன, சில குழுக்கள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளன என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2020, 13:20