தேடுதல்

நிலா நிலா 

விதையாகும் கதைகள்: தாழ்ச்சியால் உயர்ந்தவர்

நவீன இயற்பியலின் இருபெரும் தூண்களில் ஒருவராக அறியப்படுகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) அவர்கள், தன்னை ‘கடற்கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களைப் பொறுக்கும் சாதாரண ஒரு சிறுவன்’ என்றே சொல்லி மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்  

உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள், தான் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு பற்றி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வகுப்புகள் நடத்தி வந்தார். ஒருநாள் அவருடைய வாகன ஓட்டுநர், அவரிடம், “ஐயா! நீங்கள் போகிற இடங்களில் எல்லாம் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி வகுப்புகள் நடத்தி வருவதால், உங்களோடு வருகின்ற எனக்கு அது மனப்பாடம் ஆகிவிட்டது. இப்பொழுது என்னால் அந்தச் சார்பியல் கோட்பாட்டை மனப்பாடமாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார். உடனே ஐன்ஸ்டீன் அவர்கள், “அப்படியா! மிகவும் மகிழ்ச்சி! இன்று நான் இந்தச் சார்பியல் கோட்பாடு பற்றி பல்கலைக்கழகம் ஒன்றில் பாடம் நடத்தவேண்டியிருக்கின்றது. அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் என்னை இதுவரை பார்த்தது கிடையாது. அதனால் நீ என்னுடைய ஆடையை அணிந்துகொண்டு சார்பியல் கோட்பாட்டைப் பற்றிப் பாடம் எடு. நான் உன்னுடைய ஆடையை அணிந்துகொண்டு, பின்னால் அமர்ந்து நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்” என்று கூறினார். அதன்படி, அந்த பல்கலைக்கழத்தில், ஐன்ஸ்டீன் அவர்களின் வாகன ஓட்டுநர், சார்பியல் கோட்பாடு குறித்து வகுப்பெடுக்கத் தொடங்கினார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களோ, அனைவரோடும் அமர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருடைய வாகன ஓட்டுநர் சிறிதுகூட பிசுறு இல்லாமல், தான் பாடம் எடுப்பதுபோல் அப்படியே பாடம் எடுத்தார். ஓட்டுனர் பாடம் எடுத்து முடித்ததும், கேள்வி நேரம் வந்தது. அப்பொழுது அவையிலிருந்து ஒருவர் எழுந்து, அவரிடம் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி மிகவும் கடினமான கேள்வி ஒன்றைக் கேட்டார். தன்னிடம் இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டதும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் உடையில் இருந்த வாகன ஓட்டுநர் சிறிதும் பதற்றமடையாமல், தன்னிடம் கேள்விகேட்டவரிடம், “இது ஒரு சாதாரணக் கேள்வி. இக்கேள்விக்கான பதிலை என்னுடைய வாகன ஓட்டுநரே சொல்வார்” என்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களைச் சுட்டிக்காட்டினார். அறிவியலாளரும், தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல், மிகவும் தாழ்ச்சியோடு கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (The Storyteller’s Minute- Frank Mihalich, SVD)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) அவர்கள், நவீன இயற்பியலின் இருபெரும் தூண்களில் ஒருவராக அறியப்படுகின்றவர். ஜெர்மனியைச் சார்ந்த இவரை எல்லாரும் மிகப்பெரிய மேதை என்று போற்றினாலும், இவர் தன்னை ‘கடற்கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களைப் பொறுக்கும் சாதாரண ஒரு சிறுவன்’ என்றே சொல்லி மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். (நன்றி அ.பணி. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2020, 14:51