பாகிஸ்தானின்  மிருகக் காட்சி சாலையில் யானை பாகிஸ்தானின் மிருகக் காட்சி சாலையில் யானை  

விதையாகும் கதைகள் : நேர்மறை எண்ணங்கள்

அடுத்தவர் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அதுவே நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

ஒரு நாட்டின் மன்னர், யானை மீது அமர்ந்து, நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது கடைத்தெருவில் ஒரு சந்தனக்கட்டை கடை பக்கம் வந்தபொழுது, மன்னர் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றார்.

மன்னரின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார். அந்தக் கடைக்காரரிடம் யதார்த்தமாகக் கேட்பதுபோல், வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தார்.

“என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை. கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர். சந்தனக்கட்டைகளை முகர்ந்துபார்க்கின்றனர். நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டுகின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது. இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். அவன் இறந்தால், அவனை எரிக்க, நிறைய சந்தனக்கட்டைகள் தேவைப்படும். எனக்கு நல்ல வியாபாரம் ஆகி, என் கஷ்டமும் தீரும்” என்றார் கடைக்காரர்!

அவர் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு, முதல் நாள் அரசர் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரரின் கெட்ட எண்ணமே மன்னரின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவரறியாமல் உண்டாக்கி, அப்படிச் சொல்லவைத்தது என்று உணர்ந்தார் மந்திரி!

மிகவும் நல்லவரான அந்த மந்திரி, தான் யாரென்பதைக் காட்டிக்கொள்ளாமல், கடைக்காரரிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினார்! அதன் பின் மந்திரி, அந்தக் கட்டைகளை எடுத்துச்சென்று, அரசரிடம் தந்து, நேற்று அரசர் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரர், அரசருக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறினார்!

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசர் மிகவும் மகிழ்ந்தார்! அந்தக் கடைக்காரரைக் கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டார்!

அரசர், அந்தக் கடைக்காரருக்கு, சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார்! அரசர் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட வியாபாரி அதிர்ந்துபோனார்! அந்தப் பொற்காசுகளால் அவரது வறுமை தீர்ந்தது!  இத்தனை நல்ல அரசரை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்கவேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினார் அந்தக் கடைக்காரர்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவராகவும் ஆகிப் போனார்!

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால், அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2020, 15:03