தேடுதல்

இறைவனிடம் இறைஞ்சுதல் இறைவனிடம் இறைஞ்சுதல் 

விதையாகும் கதைகள் : கடவுளே காப்பாற்று

மனதில் ஒன்றை நினைத்து, வாயில் வேறொன்றை பேசும் மனிதர்களை, இறைவன் எளிதில் கண்டுகொள்வார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு மனிதர் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தபோது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக் கொண்டார். அந்தப்பிடி தளர்ந்தால், பாதாளத்தில் விழும் அபாயம் இருந்தது. அவர் இது வரை கடவுளை நம்பியதில்லை. இப்போதோ, அவர் கடவுளை நினைத்து, “கடவுளே, உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நீதான் காப்பாற்ற வேண்டும்” என வேண்டினார்.

அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மனிதனே, நீ என்னை நம்பமாட்டாய்” என்றது. உடனே அம்மனிதர், “கடவுளே, என்னைக் கைவிட்டு விடாதே... நான் உன்னை நிச்சயம் நம்புகிறேன்” என்றார்.

அந்தக் குரலோ தொடர்ந்து, “எனக்கு நம்பிக்கை இல்லை” என்றது. “கடவுளே, நீ தான் என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று அந்த மனிதர் அழுகையோடு கூறினார்.

உடனே அந்தக் குரல், “அப்படியானால் சரி, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் அந்த வேரை விட்டுவிடு...” என்றது. அதற்கு மனிதர், “வேரை விட்டுவிட்டால், நான் கீழே விழுந்து இறந்து விடுவேனே?” என்றார்.

அதற்குப் பின், வானத்திலிருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2020, 14:48