திருத்தந்தை பிரான்சிஸ்,  அந்தோனியோ கூட்டேரஸ் திருத்தந்தை பிரான்சிஸ், அந்தோனியோ கூட்டேரஸ்  

பூமிக்கோளத்தின் கவசமாக விளங்கும் ஓசோன் மண்டலம்

1985ம் ஆண்டு வியன்னா நகரிலும், 1987ம் ஆண்டு மோன்ட்ரியால் நகரிலும் காட்டப்பட்ட அரசியல் மனஉறுதி, இன்று நமக்குத் தேவை - ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொதுநலனை உறுதிப்படுத்த, அரசியலில், உறுதியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டால், நாம் அடையக்கூடிய நன்மைகளுக்கு அளவில்லை என்பதற்கு, ஓசோன் மண்டலத்தைக் குறித்த பன்னாட்டு ஒப்பந்தம் ஓர் எடுத்துக்காட்டு என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 16, இப்புதனன்று, ஓசோன் மண்டலத்தைக் காக்கும் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தியொன்றை வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், பூமிக்கோளத்தின் கவசமாக விளங்கும் ஓசோன் மண்டலத்தைக் காப்பதற்கு மோன்ட்ரியால் நகரில் எடுக்கப்பட்ட பன்னாட்டு ஒப்பந்தத்தை பாராட்டியுள்ளார்.

1985ம் ஆண்டு வியன்னா நகரிலும், 1987ம் ஆண்டு மோன்ட்ரியால் நகரிலும் காட்டப்பட்ட அரசியல் மனஉறுதி, இன்று நமக்குத் தேவை என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இன்று நாம் சந்தித்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களில் இத்தகைய உறுதியான நிலைப்பாடுகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

உலகெங்கும் கொரோனா தொற்றுக்கிருமியினால் பரவியிருக்கும் கொள்ளைநோயையும், அதன் விளைவாக உருவாகியுள்ள பொருளாதார, சமுதாயத் தாக்கங்களையும் மனதில் கொண்டு, எவ்வகை தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் உறுதியான மனித சமுதாயத்தை உருவாக்கும்படி, ஐ.நா. தலைமைச்செயலர், இச்செய்தியில் அழைப்பு விடுத்தார்.

சமுதாயத்தையும், பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் நம் முயற்சிகளில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் முதன்மை இடம் பெறவேண்டியதன் அவசியத்தையும் கூட்டேரஸ் அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

ஓசோன் மண்டத்தில் துளைகளை உருவாக்கிய வாயுக்களின் வெளியேற்றத்தை பெருமளவு நாம் குறைத்து வந்துள்ளதால், ஓசோன் மண்டலம் ஓரளவு குணமடைந்துள்ளது என்ற செய்தி நிம்மதியைத் தந்தாலும், இந்த முயற்சி இன்னும் முழுமையடையவில்லை என்பதையும் நாம் உணர்வது முக்கியம் என்று கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் புற நீலக் கதிர்கள், மற்றும் சில ஆபத்தான கதிர்களின் தாக்கங்களிலிருந்து நமது பூமிக்கோளத்தைக் காப்பதற்கு, பூமிக்கோளத்திலிருந்து, 10 முதல் 40 கிலோமீட்டர்கள் உயரத்தில் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2020, 14:38