பீகாரில் தனி ஆளாக 3 கி.மீ. தூரம் கால்வாய் வெட்டிய லாங்கி பூயன் பீகாரில் தனி ஆளாக 3 கி.மீ. தூரம் கால்வாய் வெட்டிய லாங்கி பூயன்  

வாரம் ஓர் அலசல்: உலக மக்களாட்சி நாள் செப்டம்பர் 15

ஆறுகள் தனது நீரைக் குடிப்பதில்லை. மரங்கள், அவற்றில் விளையும் கனிகளை உண்பதில்லை. சூரியன் தனக்காக ஒளிர்வதில்லை. மலர்கள் தங்களின் நறுமணங்களை தங்களுக்காகப் பரப்புவதில்லை. ஆம். மற்றவருக்காக வாழ்வது இயற்கையின் நியதி.

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் வாழ்ந்து வருகின்ற 2020ம் ஆண்டு, அரசுகளை எதிர்க்கும் போராட்டங்களின் ஆண்டாக மாறியுள்ளது. கடும் வறிய நாடுகள் முதல், பணம் படைத்த நாடுகள் வரை, எல்லா இடங்களிலும், பொதுவான ஒரு நோக்கத்திற்காக மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். வரலாற்றில் இடம்பெற்ற மற்றும், தற்போது இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் (UCL) சேர்ந்த வல்லுனர் Joe Couzens அவர்கள், பல திடுக்கிடும் தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். 1848, 1968ம் ஆண்டுகளில் உலகளவில் இடம்பெற்ற சமுதாய பதட்டநிலைகளைவிட, 2020ம் ஆண்டில், அதிலும், கொரோனா கொள்ளைநோய் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இடம்பெறும் போராட்டங்கள் அதிகமாக உள்ளன. 1848ம் ஆண்டில், ஐரோப்பாவில் இடம்பெற்ற புரட்சிகள், அரசுகளின் தலைமைத்துவத்தில் மக்கள் எதிர்கொண்ட அதிருப்தியை வெளியிட்டன. 1968ம் ஆண்டில், உலக அளவில் இடம்பெற்ற பொதுமக்கள் கொந்தளிப்புகள், அவர்கள் சந்தித்த இராணுவ அரசுகள், மற்றும், நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இடம்பெற்றன. இதன் பயனாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில், குடியுரிமை இயக்கம் உருவானது. கம்யூனிசத்தின்கீழ் வாழ்ந்த கிழக்கு ஐரோப்பியர்கள், பேச்சு சுதந்திரம், மற்றும், ஏனைய குடியுரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராய் போராடினர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நடைபெற்ற, குடியுரிமை இயக்கத்தின் மிகப்பெரும் பேரணி தொடங்கி, இரண்டாயிரமாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில், அரபு நாடுகளில் இடம்பெற்ற அரபு வசந்தம் என்ற புரட்சிகள் வரை, அவை புறக்கணிக்கப்பட்ட மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.

மக்கள் போராட்டங்கள்

2020ம் ஆண்டு மே மாதம், Minneapolis நகரில், அமெரிக்க-கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் அவர்கள், வெள்ளையின காவல்துறையினரால், இரக்கமற்று கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலும், மக்கள் பெருமளவில் திரண்டு நீதிகேட்டு போராடினர். பெலாருஸ் நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, போராட்டங்கள் தொடர்கின்றன. தாய்லாந்தில் பள்ளிச் சிறார், வெள்ளை ரிபன்களை அணிந்துகொண்டு அரசுக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். பிரேசில் மற்றும், சிலே ஆகிய நாடுகளில் மக்கள், தங்களின் வீடுகளின் மேல்மாடங்களில் குடங்களைக் கட்டி, அவற்றை அடித்து, கோவிட்-19 நெருக்கடி நிலைமையை அரசுகள் கையாளும் முறைகள் குறித்த தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா கொள்ளைநோயை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றோம் என்ற பெயரில், உலகில் இடம்பெறும் சர்வாதிகார ஆட்சிகள், கடும் வேலைவாய்ப்பின்மை, கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக, கறுப்பினத்தவர் மற்றும், சிறுபான்மை இனக் குழுக்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாமை, உச்சக்கட்டத்தில் இருக்கும் சமுதாய சமத்துவமின்மை... இவ்வாறாக, மக்களின் போராட்டங்களுக்கு காரணங்கள் அதிகரித்து வருகின்றன. மொத்தத்தில், அரசுகளில் மாற்றங்கள் தேவை என்பதை ஏராளமான மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளதன் அடையாங்களாக, இக்காலக்கட்டத்தில் உலக அளவில் இடம்பெறும் போராட்டங்களை நோக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அரசுகள், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 13, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரை உரையாற்றி, ஆசீரளித்தபின், தற்போது உலகெங்கும் இடம்பெறும் பொது மக்களின் எண்ணற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் மற்றும், சமுதாயச் சூழல்களில் நிலவும் நெருக்கடிகள், அரசியல் அமைப்புகள் மீது மக்களின் ஏமாற்றம் அதிகரித்து வருவதை, இந்த போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. போராட்டங்களை மேற்கொள்வோர், வன்முறையில் ஈடுபடும் சோதனைகளைத் தவிர்த்து,  அமைதியான முறையில் தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும். அதேநேரம், அரசுகளை நிர்வகிப்பவர்கள் மற்றும், பொதுவான அமைப்புகளுக்குப் பொறுப்பானவர்கள், குடிமக்களின் குரல்களுக்குச் செவிமடுக்கவும், மனித உரிமைகள் மற்றும், குடிமக்களின் சுதந்திரங்களை முழுமையாக மதித்து, அவர்களின் நியாயமான ஏக்கங்களை வரவேற்கவும் வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்ற திருஅவைச் சமுதாயங்கள், மேய்ப்பர்களின் வழிகாட்டுதல்களோடு, உரையாடல் மற்றும், ஒப்புரவிற்கு ஆதரவாக,  தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆற்றுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

உலக மக்களாட்சி நாள்

வரலாற்றில் நடைபெற்றுள்ள எதிர்ப்புப் போராட்டங்களைவிட, தற்போது இடம்பெறும் போராட்டங்கள் வித்தியாசமானவை. இவற்றில் சமுதாய ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. வட ஆப்ரிக்க நாடான, டுனிசியாவில், கோவிட்-19 தொற்றுக்கிருமியை ஒழிக்கும் நடவடிக்கையில், ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள், முகநூல் குழு ஒன்றில் இணைந்துள்ளனர். இதேபோல் அமெரிக்க ஐக்கிய நாடு, போலந்து, அல்ஜீரியா, சிம்பாப்வே போன்ற நாடுகளிலும் சமுதாய ஊடகக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டங்களின் நோக்கங்களை கூட்டிக்கழித்துப் பார்த்தால், உலகெங்கும் மக்கள் உண்மையான மக்களாட்சியின் மீது வேட்கை கொண்டுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகின்றன. செப்டம்பர் 15, இச்செவ்வாய், உலக மக்களாட்சி நாள் சனநாயக நாள். 2007ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, இந்த உலக நாளை உருவாக்கிய, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, உலக அளவில் அமைதி மற்றும், வளர்ச்சியை எட்டுவதற்கு, குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு, செயல்கள் வழியாக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கிரேக்க நாட்டு சட்டஅமைப்பாளர் Cleisthenes என்பவர், மக்களாட்சியின் தந்தை என்று கருதப்படுகிறார். இவர், பழங்கால ஏத்தென்சின் அரசியலமைப்பில் சீர்திருத்தத்தை உருவாக்கி, கி.மு.508ம் ஆண்டில், சனநாயகத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பீகார் லாங்கி பூயன்

எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு குடிமகனும் தூய்மையான சனநாயக காற்றை சுவாசிக்கவே ஏங்குகிறான். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! ஆனால் நீ நாட்டிற்கு என்ன செய்தாய்? என்று சிந்தித்துப் பார்” (கவிஞர் கலீல் ஜிப்ரான்) என்பதற்கிணங்க, அரசியல் தலைவர்களை எதிர்பார்த்து பயனில்லை, நாமே மக்கள் நலனில் ஈடுபடுவோம் என்று பல்வேறு கிராமங்களில் சில இளைஞர்களும், நன்மனம் கொண்டோரும் சத்தமில்லாமல் பணியாற்றி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் கோதிலவா என்ற கிராமம், அடர்ந்த காடு மற்றும், மலைகளால் சூழப்பட்டுள்ளது. மழைக்காலங்களில், மலைகளில் இருந்து விழும் நீர் முழுவதுமாக ஆற்றில் பாய்ந்து விடுவதால், விளைநிலங்களுக்கு முறையான பாசன வசதி இல்லாமல் மக்கள் துன்புற்றனர். இதனைப் பார்த்த, அந்த கிராமத்து வயதுமுதிர்ந்த விவசாயி, லாங்கி பூயன் (Laungi Bhuiyan) என்பவர், தனி ஆளாக, மலைகளிலிருந்து விழும் நீரை, தனது கிராமத்து வயல்வெளிகளுக்கு திருப்புவதற்காக, முப்பது ஆண்டுகளாக, மூன்று கி.மீ நீளம் கொண்ட கால்வாயை வெட்டியுள்ளார். இந்த பணியை அவர் தொடங்கியபோது, அது கடினம் என்று சொல்லி, அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லையாம். லாங்கி பூயன் அவர்கள், ஒவ்வொரு நாளும் கால்நடைகளை ஓட்டிச்சென்று, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறிது சிறிதாக கால்வாய் வெட்ட தொடங்கினார். தற்போது மூன்று கி.மீ நீள கால்வாயைக் குளத்துடன் இணைத்துவிட்டார். கிராமத்து குளங்களும் நீரால் நிரம்பியுள்ளனவாம்.

செல்வராய் உணர்தல்

ஒரு சமயம் ஏழை ஒருவர் புத்தரிடம் சென்று, நான் ஏன் ஏழையாகவே உள்ளேன் என்று கேட்டார். அதற்கு புத்தர், நீ தாராளப் பண்பை, பிறரன்பை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே அதற்குக் காரணம் என்றார். மற்றவருக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பொருள்கள் எதுவுமே இல்லையே, எப்படி நான் பிறரன்பை செயல்படுத்துவது என்று, அந்த ஏழை கேட்டார். அதற்கு புத்தர், உன்னிடம் ஐந்து கருவூலங்கள் உள்ளன. முதலில் உனது முகம். அதைக்கொண்டு மற்றவரைப் பார்த்து புன்னகை செய்யலாம். இரண்டாவது உனது கண்கள். அவற்றைக்கொண்டு நீ மற்றவரை உள்ளார்ந்த முழு அன்போடு, அக்கறையோடு பார்க்கலாம். மூன்றாவது உனது வாய். அதைக் கொண்டு நீ மற்றவரிடம் நல்லவற்றைப் பேசலாம், மற்றவர் மதிப்புமிக்கவர் என உணரச்செய்யலாம். நான்காவது உனது இதயம். அன்புகூரும் இதயத்தை வைத்து மற்றவர் மகிழ்வாய் வாழ நீ வாழ்த்தலாம். கடைசியாக உன்னிடம் உள்ள உனது உடல். இதை வைத்து நீ மற்றவருக்கு எவ்வளவே நல்ல காரியங்களை ஆற்றலாம், தேவையில் இருப்போருக்கு உதவலாம். உதவி என்பது பணம் மட்டுமல்ல, ஒரு சிறிய அன்புச் செயல்கூட பிறரின் வாழ்வில் ஒளியூட்டலாம். இவற்றைச் செய். அப்போது நீ உண்மையிலேயே செல்வந்தர் என உணருவாய் என்று புத்தர் சொன்னார்.

ஆறுகள் தனது நீரைக் குடிப்பதில்லை. மரங்கள், அவற்றில் விளையும் கனிகளை உண்பதில்லை. சூரியன் தனக்காக ஒளிர்வதில்லை. மலர்கள் தங்களின் நறுமணங்களை தங்களுக்காகப் பரப்புவதில்லை. ஆம். மற்றவருக்காக வாழ்வது இயற்கையின் நியதி. நாம் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு உதவுவதற்காகவே பிறந்திருக்கிறோம். அவ்வாறு வாழ்கின்ற வாழ்க்கை, எவ்வளவு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் மகிழ்வாக இருக்கையில் வாழ்க்கை நல்லதாக அமையும். அதேநேரம், நம்மால் மற்றவர் மகிழ்ச்சியாய் இருந்தால், நமது வாழ்க்கை அதைவிட நல்லதாக இருக்கும் (திருத்தந்தை பிரான்சிஸ்). எனவே, அரசுகளை எதிர்பார்க்காமல், மக்களின் நலனில் அக்கறைகொண்டு, அவர்கள் மாண்புற வாழ உதவும் நன்மனத்தோரை வாழ்த்துவோம். அவ்வாறு நாமும் கைம்மாறு கருதாதச் செயல்களால், வாழ்வை மேலும் அழகுறச் செய்வோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2020, 13:46