தேடுதல்

Vatican News
யூனிசெப் இயக்குனர் Yukie Mokuo யூனிசெப் இயக்குனர் Yukie Mokuo  (ANSA)

கோவிட்-19ம், கல்வியில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடியும்

கோவிட்-19 கொள்ளைநோய், உலக அளவில், 150 கோடிக்கு அதிகமான மாணவர்களைப் பாதித்துள்ளது மற்றும், இதனால், நூறு கோடி மாணவர்கள், இன்னும் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் உள்ளனர் - யூனிசெப்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் 

கோவிட்-19 கொள்ளைநோய், உலக அளவில் கல்வி அமைப்பில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ள இவ்வேளையில், இந்தக் கொள்ளைநோய், உலகெங்கும், 150 கோடிக்கு அதிகமான மாணவர்களைப் பாதித்துள்ளது, மற்றும், இதனால் நூறு கோடி மாணவர்கள், இன்னும் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் உள்ளனர் என்று, யூனிசெப் அமைப்பு கூறியுள்ளது.

செப்டம்பர் 08, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக எழுத்தறிவு நாளை முன்னிட்டு, கோவிட்-19 காலத்தில், கல்வியில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிநிலை பற்றி அறிக்கை வெளியிட்ட, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், இந்த நெருக்கடி காலத்தில், குடும்பங்களுக்கு ஆதரவளிக்க, அரசுகளுக்கும், தனியார் அமைப்புக்களுக்கும் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்று கூறியது.

உலகில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது, கல்வி கற்கும் முறையில் மிக ஆழமான எதிர்விளைவை உருவாக்கியது என்றும், தெற்கு ஆசியாவில், ஏறத்தாழ 43 கோடி சிறாரும், வளர்இளம் பருவத்தினரும், இளைஞர்களும், தொலைதூரக் கல்வி வாய்ப்பை பெற இயலாதவர்கள் என்றும் யூனிசெப் கூறியது.

கல்வியில் உருவாகியுள்ள நெருக்கடிநிலை, மிகவும் வறிய மற்றும், வலுவற்ற நாடுகளையும், சமுதாயக் குழுக்களையும் அதிகம் பாதித்துள்ளது என்றும், யூனிசெப் கூறியது.

சிங்கப்பூர், புரூனெய், மலேசியா ஆகிய நாடுகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்களும், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் 60 விழுக்காட்டிற்கும் குறைவான மக்களும், மியான்மார் மற்றும், வியட்நாமில் ஏறத்தாழ 40 விழுக்காடு மக்கள் மட்டுமே, வலைத்தள வசதியைக் கொண்டுள்ளனர் என்று யூனிசெஃப் கூறியுள்ளது.

1965ம் ஆண்டில் டெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில், உலக எழுத்தறிவு நாள் கடைப்பிடிப்படுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (Fides)

08 September 2020, 13:13