12 வயதுச் சிறுலனும், முடமான நாய்க்குட்டியும் 12 வயதுச் சிறுலனும், முடமான நாய்க்குட்டியும் 

விதையாகும் கதைகள்: புரிந்துகொள்ள ஒருவர் தேவை

இந்த உலகில், என்னைப் புரிந்துகொள்ள யாராவது இருக்கமாட்டார்களா என்று ஏங்கும் பலர் உள்ளனர். நம் ஒவ்வொருவருக்குமே நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் தேவைப்படுகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

விவசாயி ஒருவர், தன் வீட்டின்முன், “பப்பிகள் (நாய்க்குட்டிகள்) விற்பனைக்கு” என்ற விளம்பரத்தைத் தொங்கவிட்டிருந்தார். அதைப் பார்த்த சிறுவன் ஒருவன், அவரை அணுகி, பப்பி ஒன்றை வாங்க விரும்புகிறேன், அவற்றின் விலை என்ன என்று கேட்டான். அதற்கு அந்த விவசாயி, 15 டாலர் முதல், 20 டாலர் என, ஒவ்வொரு பப்பியின் விலையும் மாறுபடும் என்று சொன்னார். சரி, அந்த பப்பிகளை நான் பார்க்கலாமா என்று ஆசையோடு கேட்டான் சிறுவன். அவரும் கூண்டை திறந்துவிட்டார். ஆறு அழகான பப்பிகள், தாய் நாய்க்குப் பின்னால் ஓடிவந்தன. கடைசியில் ஒரு பப்பி மட்டும் உருவத்தில் சற்று சிறியதாக, நொண்டி நொண்டி மெதுவாக வந்துகொண்டிருந்தது, அதைப் பார்த்த சிறுவன், இந்த பப்பி மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டான். அதற்கு அவர், அதற்கு இடுப்பு எலும்பில் ஒரு பிரச்சனை, இந்த பப்பி உயிரோடு இருக்கும்வரை இப்படித்தான் நடக்கும், மருத்துவர்களும் அதை சரிசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்றார். அப்படியா, அதை நான் வாங்கிக்கொள்கிறேன் என்று சிறுவன் கூறியதும், உடனே அந்த விவசாயி, அந்த பப்பிக்கு, நீ பணம் தரவேண்டாம், இலவசமாகவே தருகிறேன் என்றார். அதைக் கேட்ட சிறுவனுக்கு கொஞ்சம் வருத்தம். இல்லை ஐயா, மற்ற பப்பிகள் போலவே அந்த பப்பியும் மதிப்பு மிக்கது. இப்போது என்னிடம் 3.30 டாலர்தான் உள்ளது, அதை வாங்கிக்கொள்ளுங்கள், பின்னர் ஒவ்வொரு மாதமும் ஒரு டாலர் தந்து, மீதிப் பணத்தை அடைத்து விடுகிறேன் என்று உறுதியுடன் சொன்னான். அந்த முடமான பப்பியை வாங்குவதில், சிறுவன் உறுதியாய் இருந்தது கண்டு விவசாயி ஆச்சரியப்பட்டார். அந்த பப்பி, மற்ற பப்பிகள் போன்று உன்னோடு விளையாட முடியாது, சரியாக நடக்கவோ, குதிக்கவோ முடியாது, உனக்கு அது பெரிய சுமையாக இருக்கும் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார் விவசாயி. அப்போது அந்த சிறுவன், அவரிடம், தனது கால்சட்டையைத் தூக்கி காண்பித்து, என்னாலும் நன்றாக ஓட முடியாது என்றான். ஏனெனில் அவனுக்கு ஒரு கால் இல்லை, செயற்கை உறுப்பு அதில் பொருத்தப்பட்டிருந்தது. சிறுவன் விவசாயியைப் பார்த்துச் சொன்னான் – இந்த சிறிய பப்பிக்கு, தன்னைப் புரிந்துகொள்ளும் ஒருவர் தேவைப்படுகிறார் என்று.

ஆம். இந்த உலகில், என்னைப் புரிந்துகொள்ள யாராவது இருக்கமாட்டார்களா என்று ஏங்கும் பலர் உள்ளனர். நம் ஒவ்வொருவருக்குமே நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் தேவைப்படுகிறார். ஆதலால், தாழ்ச்சி, பரிவன்பு உள்ளவர்களாக, மற்றவரைப் புரிந்துகொள்பவர்களாக, மற்றவர் நலனில் அக்கறை காட்டுபவர்களாக வாழ முயற்சிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2020, 13:32