வைரம் வைரம் 

விதையாகும் கதைகள்: நல்ல நண்பர்கள் இறைவன் கொடுத்த வரம்

நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் (நீதிமொழிகள்27:6). மறைவான நட்பைக் காட்டிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் வாழ்வில் முன்னேற உதவும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு சமயம், தொலைதூரத்து வைர வியாபாரி ஒருவர் பேரரசர் அக்பரிடம் வந்தார். அப்போது அக்பருடைய நம்பிக்கைக்குரிய மற்றும், அறிவுக்கூர்மையுள்ள அமைச்சர் பீர்பாலும் அங்கே அமர்ந்திருந்தார். வைர வியாபாரி வண்ண வண்ண விதவிதமான வைரங்களை விற்பனைக்கு வைத்தார். சில இலட்சங்கள் பணம் கொடுத்து அனைத்து வைரங்களையும், ஆசை ஆசையாக வாங்கிக்கொண்டார் அக்பர். மேலும் பல இலட்சங்களை அந்த வியாபாரியிடம் கொடுத்து, இந்த பணத்திற்கு மேலும் பல வண்ண வண்ண வைரங்களை விரைவில் கொண்டு வா எனச் சொல்லி அந்த வியாபாரியை அனுப்பிவைத்தார். பல மாதங்கள் கடந்துவிட்டன. ஒருநாள் பேரரசர் அக்பர், அமைச்சர் பீர்பாலை அழைத்து, நம் நாட்டில் அறிவிலிகள் பலர், அங்குமிங்கும் அலைவதாக கேள்விப்படுகிறேன். அந்த அறிவிலிகளின் பட்டியலைத் தயாரித்துக்கொண்டு வா என்று கட்டளையிட்டார். பீர்பால், சில நாள்களிலேயே அந்த பட்டியலுடன் அக்பரிடம் திரும்பி வந்தார். அந்த பட்டியலில் முதலில் இருந்த பெயர் பேரரசர் அக்பர். அதை வாசித்து அதிர்ந்துபோன அக்பர், அமைச்சரை கோபத்துடன் முறைத்தார். இந்த பட்டியலில் எனது பெயர் எப்படி?.. என்று கேட்டார் அக்பர். அதற்கு பீர்பால், அரசே, மன்னிக்கவும். அன்று அந்த வைர வியாபாரியிடம் பல இலட்சங்களைக் கொடுத்து, இந்த பணத்திற்கு மேலும் பல வண்ண வண்ண விதவிதமான வைரங்களுடன் வரச்சொன்னீர்களே, நினைவிருக்கிறதா, போனவன் போனவன்தான். பல மாதங்கள் ஆகியும் அவன் திரும்பி வரவில்லை. அப்படியானால் நீங்கள்தானே, முத்தாய்ப்பான முதல் முட்டாள் என்று சொன்னார் பீர்பால். அப்போது அக்பர், பீர்பாலிடம், நீர் ஏன் அவசரப்படுகிறீர், இன்னும் சில மாதங்களில் அவன் திரும்பிவந்துவிட்டால் என்று நம்பிக்கையோடு கேட்டார். அதற்கு பீர்பால், அவ்வாறு அவன் வந்துவிட்டால் அந்த பட்டியலில் உங்களது பெயரை நீக்கிவிட்டு, அந்த வியாபாரியின் பெயரை எழுதவேண்டியதுதான் என்று மிக உறுதியாகச் சொன்னார்.  

நல்ல நண்பர்கள் பற்றி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாக்கோம் இவ்வாறு கூறுகிறார்: “என்னைப் பொறுத்தவரை, நான் சொல்வதைக் காதுகொடுத்து கேட்கவேண்டும், என்னிடம் அன்பாகப் பேசவேண்டும், அதே சமயத்தில் மடத்தனமாக ஏதாவது நான் செய்துவிட்டால் என்னைக் கண்டிக்கவேண்டும், அப்படிப்பட்ட ஒருவரே உண்மையான நண்பர்”. நம்முடைய ஆத்மார்த்த நண்பர்கள், நாம் சரியான வழியில் செல்ல வழிகாட்டுவார்கள், அறிவற்ற செயல்களைச் செய்யவிருந்தால் நம்மைத் திருத்துவார்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2020, 11:12