சூடானின் ஏழைக் குடும்பம் ஒன்று சூடானின் ஏழைக் குடும்பம் ஒன்று 

ஆசியாவில் ஊட்டசத்தின்மையால் வாடுவோர் 38 கோடி

உலகப் பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை, என்பதையும், அதன் தீர்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையும், இந்த தொற்றுநோய்க் காலம், உலகிற்கு கற்றுத்தந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலகின் பல பகுதிகளில், பசியின் கொடுமை, மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், சத்துணவுக்குறைவால் துன்புறுவோரின் எண்ணிக்கை, பல கோடி அதிகரித்துள்ளதாகவும், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

உலக உணவு பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த கவலையை வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இவ்வுலகில் உணவு பாதுகாப்பு நிலை மிகக் கவலை தரும் நிலையில் இருப்பதாக அதில் கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுசெயலர் சார்பில் இவ்வுலக பாதுகாப்பு குறித்த அறிக்கையை இணைந்து தயாரித்த, ஐ.நா. அமைப்புகளான, FAO எனும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம், IFAD எனும் உலக வேளாண் வளர்ச்சி நிதி அமைப்பு, UNICEF எனும் குழந்தைகள் நல நிதி அமைப்பு, WFP எனும் உலக உணவு நிறுவனம், WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் ஆகியவைகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துப்படி, உலகில் உணவு பாதுகாப்பின்மை, பசி, சத்துணவு பற்றாக்குறை ஆகியவைகளை 2030ம் ஆண்டுக்குள் ஒழித்திட வேண்டும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் எடுக்கப்பட்ட தீர்மானம், சரியான பாதையில் செல்லவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உலகப் பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை, என்பதையும், அதன் தீர்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையும், இந்த தொற்றுநோய்க் காலம், உலகிற்கு கற்றுத்தந்துள்ளது என்பதையும் இந்நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகை வாட்டிவரும் தொற்றுநோய் பாதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிடுவது இயலாதது எனக்கூறிய உலக நலவாழ்வு அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், இவ்வாண்டு இறுதிக்குள், மேலும் 13 கோடி மக்கள் பசிக்கொடுமையால் துன்புறும் ஆபத்து இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆசியக்கண்டத்தின் மொத்த மக்கள்தொகையில் 8.3 விழுக்காட்டினரும், அதாவது 38 கோடியே 10 இலட்சம் பேரும், ஆப்ரிக்காவின் மக்கள்தொகையில் 19.1 விழுக்காட்டினரான 25 கோடி பேரும் போதிய ஊட்டச்சத்து இன்மையால் வாடிவருகின்றனர்.

தற்போதைய நிலைகளின்படி கணக்கிட்டால், 2030ம் ஆண்டில், உலகில், பசியால் வாடும் மக்களுள் பாதிப்பேர் ஆப்ரிக்காவில் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2020, 13:42