பிலிப்பீன்சில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்திற்கு எதிர்ப்பு பிலிப்பீன்சில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்திற்கு எதிர்ப்பு 

கோவிட்-19, பயங்கரவாதத்திற்கு சாதகமாக பயன்படுத்தப்படக் கூடாது

கொரோனா தொற்றுக்கிருமி, உலக அளவில் உருவாக்கியுள்ள இத்தகையதொரு பிரச்சனையை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், கடந்த 75 ஆண்டுகளில் சந்தித்ததே இல்லை - கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நலவாழ்வுப் பிரச்சனைகளை, பயங்கரவாதக் குழுக்கள், தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று, ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஜூலை 6, இத்திங்களன்று கூறியுள்ளார்.

“பயங்கரவாதத்தைத் தடைசெய்யும் வாரம்” என்ற தலைப்பில், ஐ.நா. நிறுவனமும், பன்னாட்டு நிபுணர்களும் கலந்துகொள்ளும் இரண்டாவது ஆண்டுக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள்,  எல்லா நாடுகளையும் பாதிக்கும் பயங்கரவாதத்தை, ஒருங்கிணைந்த முயற்சிகளால் மட்டுமே ஒழிக்கமுடியும் என்று கூறினார்.

கொரோனா தொற்றுக்கிருமி, உலக அளவில் உருவாக்கியுள்ள இத்தகையதொரு பிரச்சனையை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், கடந்த 75 ஆண்டுகளில் சந்தித்ததே இல்லை என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்த தொற்றுக்கிருமி போன்று, பயங்கரவாதமும், தேசிய எல்லைகளை மதிப்பதில்லை என்ற தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

இணையதள தாக்குதல்கள், நச்சுப்பொருள்கள், தொற்றுக்கிருமிகள், பூச்சிகள் போன்றவற்றைப் பரப்பும் உயிரிப்பயங்கரவாதம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அத்துமீறல்கள் போன்ற பயங்கரவாதத்தின் புதிய வடிவங்களுக்கு, கோவிட்-19 கொள்ளைநோய் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும், இக்கூட்டத்தில்  விளக்கினார், கூட்டேரஸ்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நான்கு வழிமுறைகளைக் குறிப்பிட்ட ஐ.நா. பொதுச்செயலர், இதற்கு, நாடுகளுக்கு இடையேயும், உலக அளவிலும் ஒத்துழைப்பு முகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

கொரோனா கொள்ளைநோய், உலகின் நலவாழ்வு அமைப்புகள், பொருளாதாரங்கள் மற்றும், உள்ளூர் சமுதாயங்களைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன என்று கூட்டேரஸ் அவர்கள் கூறினார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2020, 14:04