வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் கைபேசி வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் கைபேசி  

விதையாகும் கதைகள் : இன்று கைபேசியின் இடம்

ஒரு குழந்தை : இறைவா, நான் உன்னிடம் அதிகமாய் ஒன்றும் கேட்கவில்லை ...ஒரு கைபேசியினைப் போல என் குடும்பத்தின் அருகாமை அரவணைப்பில் வாழ வேண்டும் என்று மட்டுமே கேட்கிறேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஓர் ஆசிரியை, தன் ஆரம்பப்பள்ளி மாணவர்களிடம், “நீங்கள், இறைவனிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்பதை வைத்து, ஒரு கட்டுரை எழுதித்தாருங்கள்” என்று சொன்னார்,  மாணவர்களும் தங்களது விருப்பங்களை கட்டுரையாக எழுதிக்கொடுத்தனர். அவற்றை வீட்டுக்கு கொண்டுவந்து, ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தார். அந்தக் கட்டுரைகளில் ஒன்று, அவருடைய மனதை, ஆழமாகத் தொட்டது. அதை வாசித்தபின், அழ ஆரம்பித்து விட்டார். அந்நேரம் வீடு வந்த கணவர், மனைவியிடம், “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.  “ஒரு மாணவன் எழுதியுள்ள வரிகள் என்னை அழ வைத்துவிட்டன, இதோ, படித்துப் பாருங்கள்” என, மனைவி, அவரிடம் கொடுத்தார். அவரும் வாசிக்க ஆரம்பித்தார். அக்கட்டுரையில் எழுதப்பட்டிருந்த வரிகள் இவை:

“இறைவா! என்னை நீ கைபேசியாக   மாற்றுவாயாக என்று சிறப்பு பிரார்த்தனை செய்கின்றேன். ஏனெனில்,

வீட்டில் சிறப்பு இடம் கிடைக்கும்,

எந்த இடையூறும் இல்லாமல் நான் சொல்வதைக் கேட்பார்கள்,

என் அப்பா, வேலையிலிருந்து, களைப்படன் வந்தாலும், அவருடைய அருகாமை எனக்கு கிடைக்கும்,

கவலையான நேரங்களில்கூட, என் அம்மா, என்னோடு நெருங்கியிருப்பார்,

என்னை, கையில் சுமப்பதற்காக, எனது சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்,

மொத்தக் குடும்பமும் எனக்காக அனைத்தையும் விட்டுவிடுவார்கள்.

இறைவா, நான் இறுதியாக கேட்பதெல்லாம், அவர்களை நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். நான் உன்னிடம் அதிகமாய் ஒன்றும் கேட்டுவிடவில்லை, நான் ஒரு கைபேசியினைப் போல வாழவேண்டும் என்று மட்டுமே கேட்கிறேன்.”

கட்டுரையை வாசித்து முடித்த கணவர் சொன்னார், “பாவம் அந்தக் குழந்தை. அவனது பெற்றோர்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருப்பார்கள்” என்று.

இதைக் கேட்டு, மீண்டும் அழுத ஆசிரியை சொன்னார், “அதை எழுதியது நம் குழந்தைதான்” என்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2020, 11:34