புலியும் நரியும் புலியும் நரியும் 

விதையாகும் கதைகள்: வலுவுள்ளவர் வலுவற்றவருக்கு உதவ..

வலிமையுள்ளவர் வலுவற்றவருக்கு உதவவே கடவுள் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நலத்தைக் கொடுத்திருக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் ஊரில் இறைபக்தியுள்ள மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிக்கடி ஆலயம் சென்று இறைவேண்டல் செய்வார். அதற்குப் பிறகு காட்டுக்குப் போவார். விறகு வெட்டுவார். அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது அதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்திவந்தார்.  ஒரு நாள் அது அவர் காட்டுக்குப் போகும்போது, அங்கே ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டுமே இல்லை. ஏதோ விபத்தில் இழந்துவிட்டது போல இருந்தது. அது அமைதியாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்த அந்த மனிதர் மனதில் ஒரு சந்தேகம். இந்த நரிக்கு இரண்டு கால்களும் இல்லை. அப்படி இருக்கும்போது இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கிக் கொள்ளமுடியும்? என்று சிந்திக்கத் தொடங்கினார். அவ்வாறு சிந்தித்துக்கொண்டு இருந்தபோதே அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது. அதைப் பார்த்த உடனே ஓடிப்போய் ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டு,  என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தார். அந்த புலி ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக்கொண்டு வந்து அதை சாப்பிட்டது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டது. புலி போனபின், கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து, அதில் மீதமிருந்ததைச் சாப்பிட்டது. திருப்தியாகவும் அது போய்விட்டது. இவ்வளவையும் மரத்துக்குப் பின்னால் நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த மனிதர் சிந்திக்கதச் தொடங்கினார். இரண்டு கால்களும் இல்லாத ஒரு வயதான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறார். அப்படி இருக்கும்போது, தினமும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் எனக்கு சாப்பாடு போடாமலா விட்டுவிடுவார்? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம் ஏன் அனாவசியமாக வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படவேண்டும்?  எதற்காக வேர்வை சிந்தி விறகு வெட்டவேண்டும்?  இப்படி யோசித்த அந்த மனிதர், அதற்குப் பிறகு காட்டுக்கே போவதில்லை. கோடலியைத் தூக்கி எறிந்துவிட்டார். ஆனால்  கோவிலுக்கு மட்டும் அவ்வப்போது சென்று வந்தார். கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார் என்று நம்பி, கண்ணை மூடிக்கொண்டு கோயில் மண்டபத்திலேயே ஒரு தூணில் சாய்ந்து உக்கார்ந்துவிட்டார். இவ்வாறு ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டே இருந்தது. சாப்பாடு வரவில்லை. அவர் பசியால் வாடினார். எலும்பும் தோலுமாக அவர் ஆகிவிட்டார். ஒரு நாள் இரவில், அவர் மெதுவாக கண்ணைத் திறந்து கடவுளைப் பார்த்தார். கடவுளிடம் புலம்பினார். அப்போது கடவுள், மெதுவாக கண்ணைத் திறந்து சொன்னாராம் – அறிவிலியே, நீ பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது நரியிடம் இருந்து அல்ல, புலியிடமிருந்து என்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2020, 12:40